நெருக்கடிக்குள் இருக்கும் தமிழ்த் தேசியம்? – யதீந்திரா

ekuruvi-aiya8-X3

yathinthira-aஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் எங்கள் பலரது கணிப்புக்களை பொய்ப்பித்திருக்கிறது. எவரும் எதிர்பாராத விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பில் நான் கொண்டிருந்த கணிப்பும் பிழைத்திருக்கிறது. கூட்டமைப்பின் மீது அதிருப்தியிருந்தாலும் கூட, இறுதியில் மக்கள் கூட்டமைப்பிற்கே அதிகமாக வாக்களிக்கக் கூடிய நிலைமை உருவாகும் என்றவாறன ஒரு கணிப்பே என்னிடமும் இருந்தது. அவ்வாறானதொரு கணிப்பை முன்னிறுத்தியே எனது முன்னைய கட்டுரையை எழுதியிருந்தேன். ஆனாலும் அது நிகழவில்லை. ஆனால் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய தரப்பினர்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை வழங்கியிருக்கிறது. அந்த எச்சரிக்கை சரியாக உணரப்பட்டு உள்வாங்கப்படாது விட்டால், தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலம் நிச்சயமாக கேள்விக்குள்ளாகும் என்பதில் ஜயமில்லை. ஆனால் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் அவ்வாறு எவரும் உணர்ந்ததாகவோ அல்லது நிலைமையின் ஆழத்தை விளங்கிக் கொண்டதாகவோ சான்றில்லை.

உள்ளுராட்சித் தேர்தலைப் பொறுத்தரையில் தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று அணிகள் போட்டியிட்டிருந்தன. அதில் முதன்மையான அணியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது விமர்சனங்கள் இருப்பினும் கூட அவர்களுக்கு விழுந்த வாக்குகளும் தமிழ்த் தேசியத்திற்கான வாக்குகள்தான். அதே போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள், உதய சூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட அணியினர் பெற்றுக் கொண்ட வாக்குகள் அனைத்தையும் நாம் ஒரு பெட்டிக்குள் போட்டுக்கொள்ள முடியும். மேற்படி மூன்று கட்சிகளும் ஒன்றை ஒன்று விமர்சித்துக் கொண்ட போதிலும் கூட, இவற்றுக்கிடையில் வாக்குகள் சிதறியிருப்பின் அது அரசியல் நோக்கில் பிரச்சினைக்குரிய ஒன்றல்ல. வீட்டை நிராகரிப்பவர்களின் தெரிவு சைக்கிளாகவோ அல்லது உதய சூரியனாகவோ இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நிகழவில்லை. வாக்குகள் சிதறியிருக்கும் போக்கானது தமிழ்த் தேசிய அரசியலின் சிதைவை குறிப்புணர்த்துகிறது. இந்த இடம்தான் பிரச்சினைக்குரிய இடம்.

இந்தக் கட்டுரை ஒரு உலகளாவிய தமிழ்த் தேசிய கூட்டு ஒன்றை வலியுறுத்துகின்றது. இதில் தற்போது புலம்பெயர் தளத்தில் இயங்கும் அனைத்து தமிழ்த் தேசிய வாத அமைப்புக்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கலாம். இதற்கு உலகளாவிய தமிழ்த் தேசியவாதிகள்  என்று பெயரிடலாம்

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளின் படி, வடக்கைப் பொறுத்தவரையில் டக்களஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக வெளித்தெரிகிறது. மட்டக்களப்பை பொறுத்தவரையில் கூட்டமைப்பிற்கு அடுத்த நிலையில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இருக்கிறது. இந்தக் கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளை தமிழ்த் தேசியத்திற்கான வாக்குப் பெட்டிக்குள் போட முடியாது. இதனை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. இதே போன்று உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பிறிதொரு ஆபத்தான போக்கையும் கோடிகாட்டியிருக்கிறது. அதாவது, என்றும் இல்லாதவாறு கொழும்பு மைய சிங்கள கட்சிகள் வடக்கு கிழக்கில் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. சாதாரணமாக பார்த்தால் மக்கள் உள்ளுர் விடயங்களுக்கு முக்கியத்துவமளித்திருக்கின்றனர், அதனால்தான் இவ்வாறு வாக்குகள் சிதறியிருக்கின்றன என்றவாறு சமாதானம் சொல்லிச் செல்லலாம். ஆனால் இது சாதாரணமாக கடந்து செல்லக் கூடிய இடமல்ல. நின்று நிதானமாக சிந்திக்க வேண்டிய இடம். தமிழ்த் தேசிய அடிப்படையில் இயங்கும் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்திகள் வேரூன்ற ஆரம்பித்துவிட்டன என்பதுதான் இதில் மறைந்திருக்கும் செய்தி. இதனை தமிழ்த் தேசிய தரப்பினர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்?

ekuruvi-nifgt_gif-1முதலில் இவ்வாறானதொரு போக்கிற்கான காரணங்களை இனம்காண்பது அவசியம். முதல் காரணம் இலங்கை தமிழரசு கட்சியின் தன்னிச்சையான போக்கு. மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் இதில் ஒரு பிரதான பாத்திரம். இரண்டாவது காரணம் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளை கையாளுவதில் பங்காளிக் கட்சிகள் மத்தியில் கருத்தொருமித்த வேலைத்திட்டங்கள் இன்மை. ஒவ்வொரு கட்சிகளின் தலைவர்களும் தங்களின் பதவிகளை மட்டுமே பாதுகாக்க முற்பட்டனர். மூன்றாவது, வடக்கு கிழக்கில் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வலுவான எந்தவொரு மக்கள் அமைப்புக்களும் இல்லாமை. நான்காவது புலம்பெயர் அமைப்புக்களின் கோஸ்டிவாத போக்குகள். புலம்பெயர் அமைப்புக்களின் இலக்கு தமிழ்த் தேசிய அரசியலை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதென்றால் அதனை மட்டுமே, கருத்தில் கொண்டு பணியாற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாது, களத்திலுள்ள கட்சிகளுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது. பல அமைப்புக்கள் அதனைத்தான் செய்து கொண்டிருந்தன – செய்து கொண்டிருக்கின்றன.
ஒரு சிலர் தமிழரசு கட்சிக்கு முக்கியமாக சுமந்திரனுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வேலைகளை செய்தனர் இன்னும் சிலரோ கஜேந்திரகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தனர். உண்மையில் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் புலம்பெயர் சமூகத்தின் பணி இரண்டு வகையில் இருந்திருக்க வேண்டும் ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்சிநிரலை சர்வதேச மட்டத்தில் குழப்பும் வகையில் சர்வதேச மட்ட தமிழ்த் தேசியவாதிகளாக தொழிற்படுதல். இதற்குள் ஜ.நா.மனித உரிமைகள் பேரவையை கையாளுவது தொடக்கம் பன்னாட்டு ராஜதந்திரிகளை கையாளுவது வரையில் அடங்கும். இரண்டாவது, களத்தில் தமிழ்த் தேசிய அரசியலை உயிர்ப்பாக பேணிப் பாதுகாப்பதற்கான அழுத்த சக்திகளாக ( Pressure groups ) தொழிற்படுதல். முதலாவது விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன என்பது உண்மை ஆனால் இரண்டாவது நிலையில் புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு போதுமே செயற்படவில்லை. வெறுமனே ஒரு சிலர் சுமந்திரனையும் இன்னும் ஒரு சிலர் பொன்னம்பலத்தையும் தூக்கித் திரிவதில் தங்கள் ஆற்றலை வீணாக்கினர்.
இந்த நிலைமை களத்திலுள்ள தமிழ்த் தேசியவாத கட்சிகள் மத்தியில் மேலும் போட்டி வாதத்தையும் குழு மனப்பாண்மைமையும் அதிகரிக்கவே பயன்பட்டது. பொது வெளியில் ஒருவரை ஒருவர் தாக்கும் போக்கும் அதனை கொண்டாடும் போக்கும் தீவிரமடைந்தது. ஆனால் இந்தப் போக்கு மக்களை எரிச்சலைடையச் செய்கிறது என்பதை எந்தவொரு தரப்பும் கவனிக்கவில்லை. உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் அதனை தெளிவாக இனம்காட்டியிருக்கிறது. எந்தக் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளை தொடர்ந்தும் மறுத்து வருகிறதோ, அவ்வாறான சிங்கள கட்சிகளைக் கூட தங்களின் மீட்பர்களாகக் காணும் போக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. அதே வேளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போன்றவற்றின் செல்வாக்கும் தமிழ்த் தேசிய கண்ணோட்டத்தில் நோக்கினால் சிக்கலானவையே.

ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான சூழலை கொழும்பு மிகவும் கச்சிதமாக கையாண்டு வருகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றிலுமாக அரசாங்கத்தின் நிகழ்சிநிரலை நியாயப்படுத்தும் ஒரு அமைப்பாகவே மாறியது. ஒரு கல்லில் இரு மாங்காய்கள் என்பது போல் கொழும்பு ஒரே ரேத்தில் கூட்டமைப்பின் ஆதரவைக் கொண்டு வெளியக அழுத்தங்களை வெற்றிகரமாக கையாண்டது, அதே வேளை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத்தின் கட்டுறுதியை குலைக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டது. இதற்கு கூட்டமைப்பின் சுயநலப் போட்டிகளை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான கடந்த இரண்டரை வருடங்களை நோக்கினால் கூட்டமைப்பால் எதனையும் உருப்படியாக செய்ய முடியாது என்னும் கருத்து மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதனால் அரசியல் தீர்வு விடயங்களையும் கையாள முடியாது அதே போன்று அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் கையாள முடியாது என்னும் வாதம் சாதாரண மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கிறது.

இதன் காரணமாகவே கூட்டமைப்பின் வாக்கு வங்கி மோசமாக சரிந்திருக்கிறது. தமிழ் மக்கள் பொறுமையிழந்து வாக்குகளை சிதறவிட்டிருக்கின்றனர். வடக்கில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 65 வீதமான வாக்குகள் கூட்டமைப்பிற்கு எதிரான வாக்குகள். கிழக்கிலும் அதே நிலைமைதான். இதன் மூலம் இதுவரை கூட்டமைப்பு வாதிட்டுவந்த விடயங்களை பெரும்பாண்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே வெளிப்பட்டிருக்கிறது. வாக்களிப்பு விகிதத்தை மட்டுமே மக்களின் நிலைப்பாடாக கருதினால் இவ்வாறானதொரு கருத்திற்கே வர முடியும். இதன் மூலம் சுமந்திரன் – சம்பந்தன் தரப்பின் முயற்சிகள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. இவர்களது நகர்வுகளை நியாப்படுத்திய புலம்பெயர் தரப்பினரும் தோல்வியடைந்திருக்கின்றனர். முக்கியமாக சுமந்திரனை நியாயப்படுத்துவதில் முன்னணி வகித்த கனடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புக்கள் தோல்வியடைந்திருக்கின்றன.

ஆனால் தெற்கின் வாக்களிப்பு முறைமையை உற்று நோக்கினால் அங்கு சிங்கள தேசியவாதத்தின் கட்டுறுதிதி எந்தவகையிலும் குலையாமல் பாதுகாப்படுவதை காணலாம். ஆளும் இரண்டு கட்சிகளையும் ஓரம்கட்டி மகிந்த பெற்றிருக்கும் வெற்றி சிங்கள தேசியவாதத்தின் ஓர்மத்தை காண்பிக்கிறது. சிங்கள மக்கள் இப்போதும் போர் வெற்றிக்கான நன்றியுனர்வுடன் இருக்கின்றனர். ஆனால் தமிழ் மக்களோ எந்தவொரு வரலாற்று நன்றியுனர்வும் இல்லாமல் தென்னிலங்கை கட்சிகளுக்கும் அதனோடு சேர்ந்தியங்கும் கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கின்றனர். இதில் மக்களில் தவறில்லை. மக்கள் பொதுவாக குறித்த சூழ்நிலைகளை முன்னிறுத்தித்தான் சிந்திப்பர். ஒரு அரசியல் போக்கை முன்னிறுத்தவல்ல, வலுவான தலைமை ஒன்று தெரியும் போதுதான் மக்கள் அதன் மீது நம்பிக்கை கொள்வர். அதுதான் ஒரு அரசியல் சக்தியாக திரட்சிபெறும். சிங்கள மக்கள் மகிந்தவை அவ்வாறானதொரு தலைமையாக பார்க்கின்றனர். ஆனால் தமிழ் மக்கள் முன்னாலோ நம்பிக்கையுடன் பின்தொடரக் கூடிய தலைமை எதுவுமில்லை. இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையலாம். இந்த நிலைமை தீவிரமடைந்து செல்லும் போது, தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமடைந்து செல்லும். இறுதியில் தமிழ்த் தேசியம் என்பது ஒரு வெற்றுக் கோசமாக சுருங்கிவிடும். சிங்கள தேசியவாதத்தை பாதுகாத்துக் கொண்டு தமிழ்த் தேசிய வாதத்தை சிதைத்தழிப்பதும் கொழும்பின் நிகழ்நிரலின் ஒரு அங்கம்தான்.

இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமாயின் வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஓரணிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான அழுத்தங்களை கொடுக்கும் ஒரு சக்தியாக புலம்பெயர் அமைப்புக்கள் மாற வேண்டும். புலம்பெயர் தளத்தில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி அனைத்து தரப்புக்களும் ஒரணியில் சந்திக்க வேண்டும். ஓரணியில் சந்தித்தல் என்பது அனைவரும் ஒன்றாக கலத்தல் என்பதல்ல மாறாக, ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபடுவது. தனியாகவும் சேர்ந்தும் இருப்பதற்கான ஒரு வெளியை உருவாக்குவது. அந்த அடிப்படையில் இந்தக் கட்டுரை ஒரு உலகளாவிய தமிழ்த் தேசிய கூட்டு ஒன்றை வலியுறுத்துகின்றது. இதில் தற்போது புலம்பெயர் தளத்தில் இயங்கும் அனைத்து தமிழ்த் தேசிய வாத அமைப்புக்களும் ஒரு நேர்கோட்டில் சந்திக்கலாம். இதற்கு உலகளாவிய தமிழ்த் தேசியவாதிகள் ( (Global Tamil Nationalist ) என்று பெயரிடலாம். புலம்பெயர் தளத்தில் அவ்வாறனதொரு முன்னெடுப்பை மேற்கொள்வதன் ஊடாக, களத்திலுள்ள தமிழ்த் தேசிய சக்திகள் அனைவரையும் ஒருங்கிணைக்க முடியும். இதன் ஊடாக தமிழ்த் தேசியவாத அரசியலை உயிர்ப்பாக பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கலாம். இதற்கு உடன்படாத தமிழ் கட்சிகளை நிராகரிக்குமாறு மக்களைக் கோரலாம். மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இவ்வாறானதொரு முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்று.

நெருக்கடிக்குள் இருக்கும் தமிழ்த் தேசியவாத அரசியலை பாதுகாப்பதற்கு இது ஒன்றே வழி. வேறு வழிகளும் இருக்கலாம் முதலில் இது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒரு உரையாடலுக்கு வருவது அவசியம். தமிழ் தேசியம் என்பது அதனை நம்பும் மக்களாவர். நாம் எந்த மக்கள் பற்றி பேசுகிறோமோ அந்த மக்களே நாம் முன்னிறுத்தும் அரசியலை நிராகரித்துவிட்டால் அதன் பின்னர் தமிழ்த் தேசியம் என்பது அர்த்தமற்ற ஒன்றாவிடும்.

மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில் யதீந்திரா அவர்களால் எழுதப்பட்டது

 

 

Share This Post

Post Comment