தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!

தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!

புலம்பெயர் அரசியல் எதை நோக்கிச் செல்கிறது என்று அங்கலாய்ப்பவர்களும், அனுதாபக் கண்ணோடு நோக்குபவர்களும், ஐயகோ என்று அபலக்குரல் எழுப்புபவர்களும் ஒரு பக்கம். தமிழினம் எக்கேடு கெட்டாலென்ன என்று, தாங்களும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களும் என்றவகையில் தம்போக்கில் தமிங்கிலராக வாழும் தமிழர்கள் இன்னுமொரு பக்கம். யார் என்ன சொன்னால் நமக்கென்ன என்ற போக்கில் தம் சுயநலன் சார்ந்து மட்டுமே செயற்பட்டு தமக்கான தனிப்பட்ட வருவாய்க்காக, புகழுக்காக, விளம்பரத்திற்காக அல்லது அரசியல் ஆதாயங்களுக்காக சூட்சுமமான அரசியல் காய் நகர்த்தலில் ஈடுபடும் தனிநபர்கள் பிறிதொரு பக்கமென, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அரசியல் நகர்வுகள், குறிப்பாக கனடாவில் பெருமளவில் தமிழர்கள் செறிந்து வாழும் ரொறன்ரோ, மார்க்கம், மிசிசாகா, பிராம்டன், மொன்றியல் போன்ற பெருநகரங்களில் வாழும் தமிழர்களின் அரசியல் நகர்வுகள், எதிர்கால தமிழ்-கனடியர்களின் ஒன்றுபட்ட அரசியல் பலத்தைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன.

எதிர்வரும் ஒக்ரோபர் 22ம் திகதி, ரொறன்ரோ பெரும்பாகத்தின் பல நகரசபைகளிலும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. நகரபிதாவையும், நகரசபை உறுப்பினர்களையும் தெரிவுசெய்யும் இந்தத் தேர்தலில், கல்விச்சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

ssasqaவருகிற வருடம் 2019 ஒக்ரோபர் 21ம் திகதி, கனடாவின் 43வது பொதுத்தேர்தல் நாடளாவிய ரீதியில் நடக்க இருக்கிறது. இதில் மூன்று இளம் கட்சித் தலைவர்கள் தங்கள் பலத்தைப் பரீட்சிக்க இருக்கிறார்கள். லிபரல் கட்சியில் ஜஸ்ரின் ரூடோ, கன்சவ்வேட்டிவ் கட்சியில் அன்ரூ சியர், என்.டி.பி. கட்சியில் ஜக்மீட் சிங் ஆகிய மூவரும், ஏனைய புளொக் குபேக்குவா மற்றும் பசுமைக் கட்சியின் தலைமைகள் உட்பட, ஆட்சியைக் கைப்பற்ற களத்தில் இறங்குகிறார்கள்.

இவ்வருடம் இடம்பெறும் நகரசபை உறுப்பினர் மற்றும் கல்விச்சபை உறுப்பினர் தேர்தல்களில், பல தமிழர்களும் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். இதுபோன்று, வருகிற வருடம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் பல தமிழர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஒரு தமிழர் தகுதியானவரா, தகுதரம் கொண்டவரா என்பதைவிட, ஆள் நம்மவரா, நமக்கு ஏதும் லாபமிருக்கிறதா, நமது எதிரி தரப்புக்கு ஆதரவு கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறதா என்பதையே பல சக்திகளும் ஆராய்ந்து வருவது துயரமாக உண்மை. தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகப் பகிரங்கமாகவே உரிமை கோரிக்கொள்ளும் இரண்டு மூன்று பிரதான அமைப்புக்களும்கூட, தமிழர்களின் பிரதிநிதிகள் தங்கள் சகாக்களாக, சகபாடிகளாக, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களாக, இன்னும் சொல்லப்போனால் தாங்கள் சொல்வதற்கெல்லாம் ‘ஆமா’ போடும் கைப்பொம்மைகளாக, வெறும் அடிவருடிகளாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதும், களமிறக்குவதும், பின்னேயிருந்து பல திருகுதாளங்கள் மூலம் தங்கள் சகாக்களையே வெற்றிபெற வைத்துவிட படாதபாடுபடுவதும் வேதனை மிகுந்த புதிய அத்தியாயங்களாக கனடாவில் காட்சிப்படுத்தப் படுகின்றன.

இன்னும் ஒருபடி மேலேபோய், தங்களது சொந்த தொடர்பாடல்களையும், தனிப்பட்ட செல்வாக்கையும், அத்துடன் தமிழர் அமைப்பு என்பதால் கிடைக்கின்ற கௌரவ அந்தஸ்தையும்கூட, தங்களது சகபாடிகளுக்கும் அடிவருடிகளுக்கும் மட்டுமே பாவிக்க முயற்சிப்பதும் அதிகரித்து வருகிறது. ஒரு தமிழருக்கு போதிய அறிவும் அனுபவமும் அரசியல் ஈடுபாடும் இருக்கிறதா என்பதை விட, அந்தத் தமிழர் தங்களுக்கு ‘கூஜா’ தூக்குவாரா என்பதிலேயே இந்த அமைப்புக்கள் அதிகரித்த கவனம் செலுத்துவது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல, மிகுந்த கண்டனத்துக்குரியதுடன், மிக ஆபத்தான தமிழின நகர்வுகளாகவே கருதப்பட வேண்டியன.

இது தவிர, இந்த அமைப்புக்கள் தங்களுக்குள் ஒருவித அடிப்படை புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் வளர்க்கத் தவறி வருவதால், ஒரு அமைப்பு களத்தில் இறக்கும் நபரை ஏனைய அமைப்புக்கள் தங்களுக்கு எதிரானவர் என்ற வகையில் பார்ப்பதும் செயற்படுவதும் அவதூறுகளை அள்ளி வீசுவதும், எப்படியாவது கழட்டிவிடத் துடிப்பதும் கவலைக்குரியது. அரசியல் சார்ந்த பொது விடயங்களை மட்டுமன்றி, தனிநபர் காழ்ப்புணர்வை அதிகரித்து, அந்நபரின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், பெற்றோர் உறவினரின் குறை நிறைகளை சமூகவலைத்தளங்களில் அள்ளிவீசுவதும், உண்மைக்குப் புறம்பான திரிபுச் செய்திகளைப் பரப்புவதும், அத்துடன் பொய்களையும் வதந்திகளையும் புனைகதைகளையும் கூட உருவாக்கி, அந்நபரின் நற்பெயருக்குக் களங்கள் ஏற்படுத்துவதும் வருத்தத்திற்குரியது. புனைபெயர்களில் உருவாக்கப்படும் மின்னஞ்சல்களைப் பாவித்து, தனிநபர் சார்ந்த உண்மைக்குப் புறம்பான தகவல்களை, ஆயிரமாயிரம் ஈமெயில்களுக்கு இரகசியமாக அனுப்பி, அந்நபருக்கு அவப்பெயரைச் சம்பாதித்துக் கொடுப்பதன்மூலம் அந்நபருக்கான அரசியல் அஸ்தமனத்திற்கு இரவுபகலாகச் செயற்படுகிறார்கள் அற்பர்கள் பலர். அத்துடன் தங்களை சமூகவாதிகள் என்று தாங்களே அழைத்துக்கொள்ளும் சிலரும்கூட, தங்களது சொந்த ஈமெயில்களைப் பாவித்து, நடுநிலை அல்லது பொதுநிலை சார்ந்து பயணிக்க எத்தனிக்கும் தமிழர்களையும், தாம் சார்ந்த அமைப்பிற்கு அல்லது கருத்திற்கு ஆதரவு வழங்காதவர்களையும் கடித்துக் குதறுவதும், பொய் வதந்திகளைப் பரப்புவதும் நிறையவே நடக்கிறது.

இவ்வருடம் ஒக்ரோபரில் நடைபெறவுள்ள நகரசபை மற்றும் கல்விச்சபை தேர்தல்களில் போட்டியிடும் தமிழ் பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே கல்லெறிகளும் வதந்திக் கணைகளும் தொடுக்கும் வேலையில் பலர் இறங்கியிருப்பதை சமூக வலைத்தளங்களும் தனியார் இணையத் தளங்களும் கட்டியம் கூறுகின்றன. அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் தோற்ற எத்தனிக்கும் தமிழர்களுக்கும் இரகசியமான இழுத்துவிழுத்தும் வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் என்று தங்களை இனம்காட்டும் குழுமங்கள், தங்கள் செயற்பாடுகளையும், தங்களது அமைப்பிலுள்ள அங்கத்தவர்களின் முன்னெடுப்புக்களையும், தகுதரம்கொண்டவையாக, கனடிய சட்டதிட்டங்களுக்கும், நியமங்களுக்கும், மனிதத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தாக வகையில் மேற்கொள்ள வழிகோலுவது அவசியம். முரண்நிலை தவிர்த்து, நேரடிச் சந்திப்புக்களை ஏற்படுத்தி, கௌரவமான உரையாடல்களை உருவாக்கி, தனிநபர் வசைபாடல்களையும் குடும்ப விடயங்களையும் தவிர்த்து, கருத்துக்களுடன் மட்டும் மோதி, நல்ல விழுமியங்களைப் பேணி, ஜனநாயக விதிகளை மதித்து, தனியான தமிழ் அமைப்புக்களைவிட ஒட்டுமொத்த தமிழினத்தின் பெயர் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்வதும் செயற்படுத்துவம் அவசியம்.

ரொறன்ரோ பெரும்பாகத்தையும் அதன் சுற்றுப்புற பிராந்தியங்களையும் உள்ளடக்கிய பிரதேசத்தில், சுமார் இரண்டரை இலட்சத்திலிருந்து 3 இலட்சம் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று கணிப்பிடப்படுகிறது. எனவே கனடியப் பல்லினச் சமுதாயக் கட்டமைப்பில், கனேடிய தேசிய நீரோட்டத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் ஒரு பலமான சக்தியாக தமிழ் சமூகம் வளர்ச்சி பெறவேண்டியது அவசியம்.

சுமார் 80க்கு மேற்பட்ட மொழி பேசுபவர்கள் வாழ்கின்ற ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக முதன்மையாகப் பேசப்படுகிற சுமார் பத்து மொழிகளில் தமிழும் ஒன்று என்கிறது அரசதரப்பு தகவல்கள். இந்தத் தரவுகளைப் பின்புலத்தில் ஆராய்ந்தறிந்த பல அரசியல் பிரமுகர்கள், தமக்கான ஆதரவைப் பலப்படுத்திக்கொள்ள தமிழர் விழாக்களைப் பயன்படுத்துகிறார்களே தவிர, தமிழ் பிரமுகர்களை, காத்திரமான பங்காளிகளாக மாற்றவேண்டும் என்பதில், அத்தனைதூரம் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை.

ஜனநாயகம் என்று நாம் மிக அதிகமாகப் புகழ்ந்துகொண்டாலும், இதற்குப்பின்னே நடப்பதெல்லாம், சுயநல அரசியல் நாடகங்கள் தான் என்பதை, அரசியல் ஆய்வாளர்கள் கூட ஒத்துக்கொள்ளவே செய்கிறார்கள்.

யாழ் மண்ணில் வாழும் தமிழறிஞர் அருட்கலாநிதி அ.பி.ஜெயசேகரம் அவர்கள் எழுதிய ஜனநாயக விழுமியங்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்றில், ஜனநாயகம் பற்றி இவ்வாறு எழுதுகிறார்:

‘ஜனநாயகம், தன்னிறைவு கொண்ட அறநெறி முறைமையல்ல, (ழெவ ளநடக ளரககiஉநைவெ அழசயட ளலளவநஅ). அதாவது ஜனநாயக முறைமைகளைப் பயன்படுத்துகையில், தீர்வுகள் தானாக வந்துவிடும், புரையோடிய பிரச்சினைகள் மறைந்துவிடும் என்று நம்புவதற்கில்லை.

ஜனநாயகம் ஒரு ஊடகம். அறநெறிக்கும் மனித உரிமைக்கும் எதிராக பெரும்பான்மையினரது பராக்கிரமத்தினால்; சிறுபான்மையினர் உரிமைகளை இழக்கவைக்கக்கூடிய ஓட்டைகளைத் தன்னகத்N;த கொண்டது அது. மக்களின் வாக்;குரிமைகளைப் பெற்று முகிழும் அரசியல் சார் ஜனநாயகத்தின் (Pழடவைiஉயட னநஅழஉசயஉல) உயிரோட்ட வளர்ச்சிக்கு மூலவிசை, சமூகநீதி சார் ஜனநாயகம் (ளுழஉயைட னநஅழஉசயஉல)’ என்று எழுதுகிறார்.

ஆக, ஜனநாயகம் என்பது ஒரு தீர்வு அல்ல, அது ஒரு முறைமை மட்டுமே என்கிறார் ஆசிரியர்.

இந்த முறைமையை, ஜனநாயக விழுமியங்களுக்கும் மனித மாண்புகளுக்கும் சட்ட முகாந்திரங்களுக்கும் அமைவாக, சிறப்பாகப் பாவிக்கின்ற, அதற்கேற்ப நடக்கின்ற, அந்த முறைமையில் வாழுகின்ற ஒரு இனமாக எமது தமிழினத்தை வளர்ப்பதில் அனைவரும் இணைந்து கைகோர்ப்போம் வாருங்கள்.

குயின்ரஸ் துரைசிங்கம்

01 sep 2019


Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *