யுத்த குற்றச் செயல் விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியம் – கனடா

canadaஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என கனடா தெரிவித்துள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடியாவு இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 26 ஆண்டுகளாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பலரை தாம் சந்தித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கு இன்னமும் பல காரியங்கள் செய்ய வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கனேடிய தமிழர்கள் கனடாவின் ஓர் முக்கிய அங்கமாகும் எனவும், அவர்களின் சொந்தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக இரங்கல் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வண்ணம் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் பொறிமுறைமை அமைய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு, பொதுநலவாய நாடுகள் உள்ளிட்ட நீதவான்களினதும் வழக்குரைஞர்களினதும் பங்களிப்புடன் விசாரணைப் பொறிமுறைமை நிறுவப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கனடா சர்வதேச சமூகத்துடன் இணைந்து காத்திரமான பங்களிப்பினை வழங்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment