தமிழீழ விளையாட்டு அணி என்பது வெறுமனே விளையாட்டு சார்ந்தது அல்ல

Facebook Cover V02

theepachchelvanதமிழீழ விளையாட்டு அணி என்பது வெறுமனே விளையாட்டு சார்ந்தது அல்ல என்றும் அது வாழ்வின், விடுதலையின் அபிலாசையினை வெளிப்படுத்தும் ஒரு செயல் என்றும் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய – நியூசிலாந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தமிழீழ விளையாட்டு அணி குறித்து இவர் கூறியுள்ளதாவது,

ஈழத் தமிழ் மக்கள் தமது விடுதலைக் கனவுடன், கடந்த 60பது வருடங்களாக போராடி வருகிறார்கள்.

உலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்கள் தம்முடைய தனி ஈழக் கனவை நிறைவேற்ற பல்வேறு வகையிலும் இயங்கி வருகிறார்கள். அப்படி ஒரு போராட்ட வழிமுறைதான் தமிழீழ கிரிக்கட் அணி.

உலகில் கிரிக்கட்போட்டிகள் நடைபெறும்போது ஈழத் தமிழர்கள் எந்த அணியின் ஆதரவாளர்களாக இருப்பது என்பது பெரும் அந்தரநிலை.

இலங்கை அரசின் இன புறக்கணிப்புச் செயல்களால் ஈழத் தமிழர்கள் இலங்கை கிரிக்கட் அணியில் சேர்க்கப்படுவதில்லை. ஈழத் தமிழ் மக்களுக்கு எல்லாத்துறையிலும் சம உரிமை மறுக்கப்படுவதுபோலவே இதுவும்.

அத்துடன் இலங்கை அரசின் செயற்பாடுகள் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் பெரும்பாலும் இலங்கை கிரிக்கட் அணிக்கு ஆதரவு வழங்குவதில்லை.

2007இல் உலக கிண்ண கிரிக்கட் போட்டி நடந்து கொண்டிருந்த நாட்களில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளரை ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது நாம் நிற ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தென்னாபிரிக்க அணிக்கு ஆதரவளிப்போம் என்றார்.

இதுதான் நாடற்றவர்களின் கதி.இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது காலத்தில் ஈழத் தமிழ் மக்களுக்கான அனைத்து கட்டமைப்புக்களையும் உருவாக்கி வந்தார்கள்.

நீதிமன்றம், காவற்துறை, மருத்துவமனை, நிர்வாகத்துறை, நிதித்துறை, தமிழீழவங்கி, சட்டத்துறை என்று ஒரு அரசுக்கான அனைத்து துறைகளையும் உருவாக்கினார்கள். அப்போது தமிழீழ வலைபந்தாட்ட அணி ஒன்று உருவாக்கப்பட்டு அது சர்வதேச நாடுகளில் போட்டிகளில் ஈடுபட்டது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனாலும் புதிய தலைமுறையின் ஈடுபாடுகளுக்கு ஏற்ப விளையாட்டுத்துறை உருவாக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் விளையாட்டுத்துறை இயங்கிய கட்டடம் இப்போது இராணுவ முகாமாக உள்ளது. விடுதலைப் புலிகள் இன்று இருந்திருந்தால் விளையாட்டுத்துறை பன்மடங்கு மேம்பாடு அடைந்திருக்கும்.

கடந்த 2012இல் கனடா, ஐக்கிய இராட்சியம், சுவிசலாந்து போன்ற நாடுகளை சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்கள் தமிழீழ காற்பந்து அணி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். புதிய கூட்டமைப்பு வாரியத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த அணி 2012இல் ஈராக்கின் குர்திஸ்தானில் நடந்த 2012 வீவா – உலகப் கோப்பை போட்டியில் பங்குபற்றியது.

இப்போது அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வசிக்கும் ஈழத் தமிழ் புலம் பெயர் இளைஞர்கள் தமிழீழ கிரிக்கெட் அணியை உருவாக்கியுள்ளார்கள்.

இதில் மகிழ்ச்சியும் நெகிழ்வும் தரும் செய்தி யாதெனில், அண்மையில் சுரேஸ் பெரேரா என்ற இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் தலைமையில் சிங்கள இளைஞர்களின் ஸ்ரீலங்கா கிரிக்கட் போட்டி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

அந்த சிங்கள இளைஞர்களும் இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழீழ கிரிக்கெட் அணியுடன் விளையாடியது அவர்களின் மனங்களில் தமிழீழத்தை அங்கீகரிக்கும் ஒரு மனப்போக்கே.

கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடந்த Last Man Stans Australasia Open 2015 என்ற தேசிய கிரிக்கெட் போட்டியில் பங்கெடுத்த இந்த அணி ஆசிய அணிகளுடன் மோதியுள்ளது. இந்த வருடம் Sub Continental Cup 2016 என்ற போட்டியிலும் பங்கு எடுத்துள்ளது.

SubCup என அழைக்கப்படும் Sub-Continental Cup T20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒவ்வொரு வருடமும் தென்னாசிய பிராந்திய நாடுகளின் வெவ்வேறு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கிடையே நடத்தப்படுகிறது. தமிழீழ கிரிக்கட் அணி முதன் முதலாக இந்த வருடம் இச்சுற்று போட்டியில் பங்கெடுக்கிறது.

இது ஒரு மேலாதிக்க இனத்தினால் ஒடுக்கப்பட்டதன் வெளிப்பாடே. ஒரு தேசிய இனம் முழுக்க முழுக்க இன்னொரு மேலாதிக்க இனத்தினால் ஒடுக்கப்பட்டு, அதன் உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது அந்த தேசிய இனம் தன்னை தனி வழியில் கட்டமைத்துக்கொள்ளும்.

ஈழத் தமிழ் மக்களின் இன உரிமைப் போராட்டம் அப்படியானதே. ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அணிகளில் இடம்பெற முடியாத நிலமை ஏற்படும் போது தமிழீழ அணி உருவாகிறது.

ஸ்ரீலங்காவில் ஈழத் தமிழ் மக்கள் சம உரிமையின்றி நடத்தப்படுகின்றபோது அவர்கள் தனிநாடு கோரி போராடுகிறார்கள்.

ஒரு இனம் தன்னுடைய வாழ்வை வாழ முடியாமல், தன்னை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது மிகவும் துயரமானது. எங்கள் இளைஞர்களின், குழந்தைகளின் மனங்களில் வெளிப்பாடும் தமிழீழ அணி குறித்த, தமிழீழம் குறித்த வெளிப்பாடுகள் மிகவும் இயல்பானவை. இவை அடக்கப்பட்ட இனத்தின் வெளிப்பாடாகவும் கவனம் எழுகிறது.

எம்மை இலங்கையர்களாக அடையாளப்படுத்த அந்த அடையாளத்தில் எங்களுக்கு துளியவும் உரிமையும் இடமும் இல்லை என்றும் கடந்த அறுபது வருட காலமாக உணர்த்தப்பட்டு வருகிறோம். எனவே எமக்கான அடையாளங்களையும் வழிகளையும் நாமே தேடிக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், உண்மையில் இது விளையாட்டு மாத்திரல்ல. ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலையின் வாழ்வின் அபிலாசையும்தான்.

இந்த அணியை உலகம் அங்கீகரிக்க வேண்டும். இந்த அணியை ஐ.நா அங்கீகரிக்க வேண்டும்.

இந்த விடயம் குறித்து தமிழீழ அணித்தலைவர் கலியுகன் பத்மநாதன் தெரிவிக்கையில் இரண்டு வருடங்களுக்கு முதல் சில நண்பர்களுடன் எமக்கான அணி ஒன்றைக் குறித்து உரையாடினோம்.

நமக்கெண்டு ஒரு அணி ஒரு பேரவா. அத்துடன் அணியோடு மட்டும் இல்லாமல் எம் அடையாளத்தை உலகிற்கு வெளிக்கொண்டுவருவதிலும் அணி பங்கு வகிக்க வேணும் என்று நினைத்தோம்.

அதற்கு தமிழீழக் கிரிக்கட் அணி என பெயரிட்டோம். எம் அடையாளம் தமிழீழம் என்ற அடிப்படையில் அப் பெயரை சூட்டினோம்.

அதற்கு ஏற்ற ஒரு சின்னத்தை தயார் செய்தோம். பல போட்டிகளில் பங்கெடுத்தோம். பலரும் எம்மை அங்கீகரித்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் Tamil Eelam Cricket Board அறிவிக்கவுள்ளோம்.

ஆசியில் உள்ள அனைத்து தமிழ் அணிகளையும் ஒன்றிணைத்து தேசிய தமிழீழ அணி உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். படிப்படியாக வேறு நாடுகளிலும் இதை கொண்டு போக வேண்டும். பின்னர் எம்மால் ICC-இல் இணைய ஆராய்வோம்.

எமது இலக்கு அது தான். அதன் ஊடாக எம் அடையாளத்தை உலகுக்கு கொண்டு வர வேண்டும். எம் இளம் சமுதாயத்தை ஊக்க படுத்த வேண்டும். தமிழீழத்தின் அடையாளத்தை உலகறிய செய்ய வேண்டும். எம் நிலத்தை பிரதி நிதித்துவப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

Share This Post

Post Comment