இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை: 77 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்

ekuruvi-aiya8-X3

A2219B3A-6758-43E9-9197-A015E73F5998_L_styvpf-450x256இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 85 பேரில் 77 பேர் நேற்று தமிழகம் திரும்பினர்.ராமேசுவரம், பாம்பன், நாகப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 85 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா, திரிகோணமலை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, பதற்றத்தை தணிக்கும் வகையில், தமிழக மீனவர்கள் 85 பேரை விடுவிக்க இலங்கை அரசு முன்வந்தது.

இதேபோன்று, தமிழக சிறையில் இருக்கும் 12 இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, இலங்கை சிறைகளில் இருந்து 85 தமிழக மீனவர்கள் கடந்த வார இறுதியில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இலங்கையில் இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அனைவரையும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் நேற்று எடுக்கப்பட்டன. அதன்படி, 77 தமிழக மீனவர்கள் நேற்று காலை இலங்கை கடற்படை கப்பலில் ஏற்றப்பட்டு இந்திய எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்கள் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதேநேரம் தமிழக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் காரைக்காலில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு, இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் 77 பேர் இந்திய கப்பலில் ஏற்றி காரைக்கால் துறைமுகம் அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் ஜெயகுமார், ஒ.எஸ். மணியன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக மீனவர்களில் மீதியுள்ள 8 பேர் இன்று அல்லது நாளை தமிழகம் வந்து சேரலாம் என்று இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment