வியாபார போரும், வீட்டு முதலீட்டில் வரப்போகும் விளைவுகளும்

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் நாடுகளுக்கிடையே வியாபார போர் ஒன்றை தொடங்கி வைத்து சில மாதங்களாக இது விஸ்வரூபமெடுத்துள்ளது. அதாவது, இவர் அமெரிக்காவில் உள்ள ஸ்டீல் (Steel) தொழிற்சாலைகளை நிலை நிறுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஸ்டீல் உற்பத்திக்கு 25% வரி (Tariff) அறவிடப்பபோவதாகவும், 10% வரி அலுமினிய இறக்குமதிக்கும் (Aluminum) அறவிடப்போவதாகவும் அறிவித்திருந்தார்.
இதனால், அமெரிக்காவின் நேச நாடுகள் உட்பட மற்றும் பல நாடுகள் அதிர்ச்சி அடைந்து  அதை நிறுத்துமாறும் மறுத்தால் தாமும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களுக்கு வரி விதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து அவர் வட அமெரிக்க நாடுகளுக்கு இடையே ஆன (NAFTA) வியாபார ஒப்பந்தத்தை மீள் பரிசோதனை செய்யுமாறு கனடா, மெக்சிக்கோ (Mexico) நாடுகளை அழைத்து பேசுமாறும் ஒரு குழுவை அமைத்து சில மாதங்களாக அந்த ஒப்பந்தம்
மீள் பரிசோதனை நடந்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க அவர் தன்னிச்சையாக இந்த வரி அறிவிப்பை விடுத்துள்ளார். அத்துடன் மேலும் பல வரிகளை விதிக்க போவதாகவும் எச்சரித்துளளார். இந்த அறிவிப்பு பல நாடுகளுக்கிடையே பயத்தையும் விரிசல்களையும் ஏற்படுத்தியுள்ளது.
sdws
இந்த NAFTA ஒப்பந்தம் 1993 ஆண்டு கனடிய பிரதமர் Brain Mulroneyக்கும் அமெரிக்க அதிபர் Bill Clintonக்கும் இடையே உருவாக்கப்பட்டு இரு நாடுகளுக்குமிடையே வரி மற்றும் தடைகளுமின்றி சில பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்ய இரு நாடுகளுக்குமிடையே ஒரு ஒப்பந்தமாக அமைந்தது. பின்னர் இதில் மெக்சிகோவையும் இரு நாடுகளும் இணைத்துக் கொண்டன. இதன் மூலம் வேலைவாய்ப்புகளும், பொருளாதார அபிவிருத்தியும் ஆரம்பத்தில் மூன்று நாடுகளுக்குமிடையே காணப்பட்டாலும், சில பாதிப்புகள் கனடாவுக்கும், அமெரிக்காவிற்கும் 2000ம் ஆண்டுகளுக்கு பின்னர் வர ஆரம்பித்தது. ஏனெனில் பல நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை மெக்சிகோவிற்கு இடம் மாற்றியதால் வேலைவாய்ப்புகளை இரு நாடுகளும் இழக்கத் தொடங்கியது. இதனால் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி பாதிப்படைய தொடங்கி 2007இல் இருந்து 2009 வரை பொருளாதார மந்தநிலை காணப்பட்டது. இதனால் அமெரிக்க மக்களும், புத்தி ஜீவிகளும் ஆத்திரம் அடைந்தனர். இந்த NAFTA ஒப்பந்தம் தங்களுக்கு சார்பாக இல்லை என உணர்ந்து ஒரு எதிர்ப்பு அலை ஆரம்பித்தது. அது இப்பொழுது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்பது தான் உண்மை. இந்த பிரச்சனை கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்கர்களிடம் கொழுந்து விட்டு எரியும் பிரச்சனை. இதை மாற்றுவதாக உறுதி மொழி
வழங்கிய அதிபர் டிரம்ப் அதிபர் பதவிக்கு தெரிவானார்.

இந்த NAFTA ஒப்பந்தத்துக்கு பின்னர் மேலும் பல ஒப்பந்தங்கள் (CAFTA) Central

America Free Trade Agreement இது மேலும் பல தென் அமெரிக்க நாடுகளை இணைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இதை (TPP) என்று கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் எல்லாமே அமெரிக்காவின் சில தொழிற்சாலைகளுக்கு மூடு விழா வைத்தது.

இதை சரி செய்வதற்காக கூறித்தான் அமெரிக்கத் தலைவர் டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வந்தார் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கும் இந்த வரி சில
தொழிற்சாலைகளை மீண்டும் அமெரிக்காவில் வளர்த்தெடுப்பதற்காகவே என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர் அமெரிக்காவிற்கு தான் தலைவர். மற்ற நாடுகளுக்கு அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். அவர் அமெரிக்காவிற்கு எது நல்லதோ அதைத்தான் அவர் அறிவிப்பார், செய்வார். அதை நாம் தப்பாக நினைக்க தேவையில்லை. என்ன பிரச்சனை என்றால் இன்று உலக நாடுகள் (நேச நாடுகள் குறிப்பாக) ஒன்றை ஒன்று வியாபார ரீதியில் தாங்கியுள்ளன. ஒரு நாடு செய்யும் எதேச்சையான அறிவிப்பால் குறிப்பாக அமெரிக்கா செய்யும் பொழுது பல நேச நாடுகளும், அதன் பொருளாதாரமும் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, பல அமெரிக்க தொழிற்சாலைகளும் பாதிப்படையும் என்பதை அமெரிக்க அதிபர் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒரு சிறந்த பேரம் பேசும் (Negotiator) வல்லுநர் என்பதை நாம்
புரிந்துக் கொள்ள வேண்டும். அவர் இவற்றை தன்னிச்சையாக செய்வதன் நோக்கம்….
அப்பொழுது தான் மற்ற நேச நாடுகள் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் செய்ய முன்வருவார்கள் என்பது. இதை நாம் நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இது கத்தி மேல்  நடப்பது போலாகும். சில நாட்களாக தொடர்ந்து அமெரிக்க அதிபர் கனடிய பிரதமர் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியும், சில பேச்சுக்கள் அவரை அவமதிப்பதாகவும் பேசி வருவது இரு நாடுகளுக்குமிடையே இருக்கும் உறவை பாதிக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். பல புத்தி ஜீவிகள் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எச்சரித்தும் இருக்கிறார்கள். ஏனெனில், அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையே
100 ஆண்டுகளுக்கு மேலான உறவு சரித்திரம் உண்டு. இரண்டு உலகப்போரிலும்
அமெரிக்காவுடன் தோள் சேர்த்து கனடா போர் புரிந்துளளது. அமெரிக்கர்கள் இந்த உறவை முறித்துக் கொள்ளவோ அல்லது சேதப்படுத்தவோ விரும்ப மாட்டார்கள். எமது பிரதமர் புதியவராக இருந்தாலும் நிலைமையை அழகாக சமாளித்து செல்கிறார். அவரை இந்த விடயத்தில் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த வியாபார போரால் (Trade War) என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து பார்ப்போம். உதாரணமாக, அண்மையில் ஐரோப்பிய நாடுகள் தாமும் இந்த வரி அறிவிப்பிற்கு எதிர் வரி நடவடிக்கை செய்வோமென எச்சரித்ததை தொடர்ந்து அமெரிக்க மோட்டார் வாகன நிறுவனமான Harley – Davidson Inc. தமது தொழிற்சாலையை ஜெர்மனிக்கு எடுத்து செல்ல முடிவெடுத்துள்ளது. இந்த 25% (Tariff) வரி அறிவிப்பு மோட்டார் வாகன உற்பத்திக்கு தமக்கு ஏறத்தாழ வருடத்திற்கு 100 மில்லியன் டொலர்கள் நஷ்டத்தை தமக்கு ஏற்படுத்தும் என்பதால் தாம் இந்த தொழிற்சாலையை ஐரோப்பிய நாட்டுக்கு
எடுத்து செல்வதாக அறிவித்துள்ளது. இதனால் அதிபர் டிரம்ப் ஆத்திரம்
அடைந்துள்ளார். இதை தொடர்ந்து இன்னும் பல நிறுவனங்கள் தமது உற்பத்தியை வேறு நாடுகளுக்கு மாற்றும் அபாயம் உள்ளது. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்லை, கனடாவையும் பாதிக்கும். அத்துடன் இந்த வரி அறிவிப்பு கனடாவின் ஸ்டீல் உற்பத்தியையும் பெரிதும் பாதிக்கும். இப்படி மாறி, மாறி ஒவ்வொரு நாடும் வரி விதிக்க ஆரம்பித்ததால் ஒரு ஸ்திர தன்மை இல்லாத வியாபார நிலைமைக்கு இன்று நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இன்றைய நிலையில் அமெரிக்காவிற்கு பெரிதும் பாதிப்பு வியாபார ரீதியில் சீனாவால் தான் ஏற்படுகிறது. இதனால் சீனாவிற்கு கிட்டத்தட்ட 200 பில்லியன் பெறுமதியான வரியை அவர்களுடைய ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்திருக்கிறது. இதனால் சீனா ஆத்திரமடைந்து அமெரிக்க விவசாய கால்நடை உற்பத்திகளுக்கு வரியை விதித்துள்ளது.

இது அமெரிக்க விவசாயிகளின் ஏற்றுமதிக்கு பெரிதும் பாதிப்பை விளைவிக்கும். சீனா இதை ஒரு எதிர்ப்பாகவே செய்கிறது எனலாம். இதை Retaliation வரி எனலாம். சீனா இதில் பிழை விடுகின்றது என தான் கூற வேண்டும். ஏனெனில் இன்றைய நிலைமையில் சீனாவின் Trade Surplus அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் தான் கிடைக்கிறது. இதனால் சீனாவிற்கு தான் பாதிப்பு. இந்த வியாபார போரை நிறுத்தி அமெரிக்காவுடன் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றை சீனா செய்யாவிடில், சீனாவின் பொருளாதார வீழ்ச்சி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என ஒரு கணிப்பு இருக்கிறது. அத்துடன் இதை தொடர்ந்து அனுமதித்தால் அமெரிக்காவின் (Trade Deficit) வியாபார துண்டு விழும்
தொகை அதிகரிக்கும். ஆக நாம் முற்றும் முழுதாக அமெரிக்க அதிபரின் நடவடிக்கை பிழையென்று கூற முடியாது.

நீங்கள் கேட்கலாம், இதனால் Real Estate (வீடு வியாபார விற்பனை) வியாபாரத்திற்கு என்ன பிரச்சனை என்று. சற்று உற்றுப் பார்த்தால் இந்த வரிகளின் மூலம் அரசுகளிற்கு வருமானம் வந்து சேரும். ஆனால், நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிற்கும் அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். இதனால் பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும். இந்த பணவீக்கம் காரணமாக அரசுகள் வட்டி வீதத்தை அதிகரித்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இந்த வட்டி வீதம் அதிகரித்தால் வீடு விற்பனைக்கு என்ன நடக்கும் என்பதை நான் உங்களிற்கு கூறத் தேவையில்லை என நினைக்கிறேன்.

இந்த ஸ்திர தன்மை இல்லாத நிலை நீடித்தால் நாடுகளுக்கிடையே நாம் ஒரு உலக பொருளாதார சிதைவை எதிர்நோக்கலாம். சரியான ஒப்பந்தங்களை எதிர்வரும் மாதங்களுக்குள் பரஸ்பரம் ஏற்படுத்தா விட்டால் இந்த பணவீக்கத்தையும் வட்டி வீத அதிகரிப்பையும் தடுக்கவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது.

ஆகையால், எதிர்வரும் மாதங்களில் வீடு முதலீடுகளில் ஈடுபடும் போது அவதானமாக செயற்படவும். வீடு மட்டுமல்ல, பங்கு சந்தை (Stock Market) கூட பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. அதற்காக வீடு வாங்க வேண்டாம் என்று கூறவில்லை. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Real Estate Investment என்பது ஒரு நீண்ட கால முதலீடு. எம்மில் பலர் கடந்த சில ஆண்டுகளாக வீடு வாங்கி விற்று பணம் சம்பாதித்துள்ளோம். ஆனால், எதிர்வரும் 2 அல்லது 3 ஆண்டுகளிற்கு வீட்டு முதலீட்டை ஒரு வியாபாரமாக கருதாமல் (Short term Investment) ஒரு நீண்ட கால வியாபாரமாக (Long Term Investment) கருதி அதில் முதலீடு செய்யவும். ஏனெனில் இந்த Real Estate முதலீடு ஒரு நீண்ட கால முதலீடாகவே பல ஆண்டுகளாக கருதப்பட்டு வந்த ஒரு விடயம். இதை மனதில் வைத்து செயல்படவும்.

செல்வா செல்வத்துரை


Related News

 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • ஜஸ்ரின் ரூடோ தடுமாறுகின்றாரா? ரதன்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *