“வரலாற்று நாவலை எழுதுவது கற்பனைகளையும், வர்ணனைகளையும் கொண்டு எழுதப்படும் ஏனைய நாவல்களைப் போன்று இலகுவான காரியமல்ல. உண்மையான, ஆதாரபூர்வமான தகவல்களைத் திரட்டி, அந்த வரலாறு இடம்பெற்ற காலகட்டத்தின் சூழலை வைத்து எழுதப்பட வேண்டியது வரலாற்று நாவல். கிறிஸ்த்துவுக்குப் பின் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைத் திரட்டி 626 பக்கங்களைக் கொண்ட “வேல் விழியாள் மறவன்” என்ற இந்த வரலாற்று நாவலை எழுத சிவநயனிக்கு ஐந்தாண்டு காலம் எடுத்துள்ளது. தமிழ் நாட்டு அரசு, மாதோட்ட அரசு, அநுராதபுர அரசு ஆகிய மும்முனை அரசுகளைப் பற்றிய ஆவணங்களைத் திரட்டி அவற்றில் தமிழ்மக்களின் அனுபவங்களோடு இணைத்து வித்தியாசமான முறையில் எழுதப்பட்டுள்ள முதன்மையான நாவல் இதுவாகும். மகாவம்சத்தில் தமிழர்களைப் பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ள வரலாறுகளை சிவநயனி தனது நாவலில் குறிப்பிட்டுள்ளார். எமது வரலாற்றினை துணிவுடன் எடுத்துக் கூறும் தன்மையை நாம் இழந்து விட்டோம். துணிச்சலுடன் இந்த முதல் தரமான வரலாற்று நாவலை எழுதியதன் மூலம் முதலாவது பெண் வரலாற்று நாவல் ஆசிரியர் என்ற பெருமையை சிவநயனி பெற்றுக் கொண்டுள்ளார்”.
மானிப்பாயைச் சேர்ந்தவரும், கனடாவிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருபவரும், 2007ம் ஆண்டு “மாறுமோ நெஞ்சம்” என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவருமான சிவநயனி முகுந்தனின் “வேல் விழியாள் மற வன்” என்ற வரலாற்ற நாவல் நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றிய கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்கள் இவ்வாறு கூறினார். மார்க்கம் சபரிமலை ஸ்ரீஐயப்பன் ஆலய மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை மாலை நடை பெற்ற இவ்வைபத்தில் “தமிழிசைக் கலா மன்றத்தின் முன்னாள் தலைவரான திரு. ரடனலிங்கம் பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிவநயனியின் கணவரும் Guelph – Humper பல்கலைக் கழகத்தில் Electrical Engineering துறை விரிவுரையாளராகப் பணியாற்றுபவருமான முகுந்தன் விமலேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மகாஜனா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.பொ.கனகசபாபதி அவர்கள் வாழ்த்துரை வழங்கிய போது, “முன்னர் கல்கி கிருஷ்ணமூர்hத்தி, சாண்டில்யன், அகிலன் போன்றோர் வரலாற்று நாவல்களை எழுதி வந்தார்கள். கல்கியின் நாவல் எளிமையினையும், தெளிவான நடையினையும் கொண்டிருந்ததினால் அவை வாசகர்களின் மனதில் நிலைத்து நிற்கக் கூடியவையாக இருந்தன. இங்கே சிவநயனி தனது நாவலில் இரண்டு கற்பனைப் பாத்திரங்களை வைத்து, வரலாறு சம்பந்தமாகத் திரட்டிய தகவல்களை கொண்டு அருமையாக நாவலை எழுதியுள்ளார். இதன் மூலம் அவரொரு சிறந்த நாவலாசிரியர் என்ற பெருமையைப் பெறுகின்றார்” எனக் கூறினார்.
இந்நாவலுக்கான விமர்சன உரையினை சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், பிறைசூடி சந்திரசேகரன், கலாநிதி பார்வதி கந்தசாமி ஆகியோர் நிகழ்த்தினார்கள். முதலில் உரை நிகழ்த்திய திரு. பத்மநாதன், “மறவன் அனபாயன், வேல் விழி பூங்கோதை ஆகிய இரு கற்பனை கதாபாத்திரங்களை வைத்து சிவநயனி இந்நாவலைப் புனைந்துள்ளார் இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு சோழ மன்னன் கேதீஸ் நரசிம்ம வலயனைப் பற்றியும், இலங்கையின் மாதோட்ட மன்னன், அநுராதபுர மன்னன் ஆகிய மூவரையும் மையமாக வைத்தே இந்நாவலைப் புனைந்துள்ளார். தமிழ்நாடு உறையூர் மன்னன் கரிகால் சோழனின் வாளொன்று எப்படியோ அநுராதபுர மன்னன் வங்காசிக தீசனிடம் சிக்கிக் கொண்டது. அதனை மீட்டெடுப்பதற்காக சோழ மன்னன் தனது தளபதியான அனபாயனை இலங்கைக்கு அனுப்புகின்றான். அவன் மாதோட்ட மன்னனின் மகளான பூங்கோதையை சந்தித்து அவள் மீது காதல் கொள் கின்றான். அவனுக்கு ஏற்கனவே தமிழ் நாட்டில் ஒரு காதலி இருக்கின்றாள். பின்னர் இருவரையுமே அவன் திருமணம் செய்து கொள்கின்றான். இதுவே இந்நாவலின் கருப் பொருள். கணவரும் மனைவியுமாக இணைந்து உருவாக்கியுள்ள இந்நூல் தேசிய விருதினைப் பெறக்கூடிய நாவல். அத்துடன் இலங்கையில் பல்கலைக் கழகப் பாட நூலாகவும் வைத்திருக்கக் கூடிய தகுதி உடையது. அடுத்த வெளியீடுகளில் ஆசிரியை எழுத்துப் பிழைகள் ஏற்படாத வண்ணம் அவதானித்துக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
பார்வதி கந்தசாமி விரிவுரையாற்றுகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:“கனடாவிலும் ஏனைய புலம் பெயர்ந்த நாடுகளிலும் சிறுகதை தொகுதி நூல்களே வெளிவந்துள்ளன. ஆனால் நாவல்கள் எதுவும் வெளிவரவில்லை. பொதுவாக ஆண்களே வரலாற்று நாவல்களை எழுதுபவர்களாகவும், பெண்கள் வாசகர்களாகவும் இருந்தனர். நம்நாட்டு வரலாற்றினை எழுதும் ஆவலில் சிவநயனி இந் நாவலை எழுதியுள்ளார். சமகால அரசியல் எண்ணங்களையும், கருத்துக்களையும் அதில் புகுத்தி உள்ளார். ஈழமண்ணின் வாசனையை தனியாக வர்ணித்துள்ளார். “சிகல” மொழியிலிருந்தே சிங்கள மொழி வந்ததாகவும் அதற்கு முன்னர் எந்த மொழியாக இருந்தது என்பது பற்றியும் ஆராய்ந்துள்ளார். தமிழர்கள் புறநானூற்று வீரர்களாகக் கருதப்பட்டு பின்னர் தோற் கடிக்கப்பட்டு விட்டார்கள் எனவும் எழுதியுள்ளார். இவர் முதலாவது வரலாற்று நாவல் ஆசிரியையாகத் திகழ்வது தமிழ் பெண்களுளுக்கே பெருமை சேர்ப்பது எனக் கூறினார்.
பிறைசூடி சந்திரசேகரின் தனது விமர்சன உரையில் கூறியதாவது: “சரித்திர நாவல்களை எழுதுவதற்கு துணிச்சல் வேண்டும். இந்நாவலில் வாசிக்கும் ஆவலைத் தூண்டும் ‘சஸ்பென்ஸ்’களும், ‘திறில்’ களும் உள்ளன. குறுந்தொகை இலக்கியத்தோடு தொடர்பு படுத்தி எழுதியுள்ளார். காட்டிக் கொடுக்கும் சமகால சம்பவங்களும் அடங்கியுள்ளன. அனபாயன் சந்தேகத்துக்கு இடமான முறையிலேயே பூங்கோதையை சந்திக்கின்றான். பின்னர் அவர்களுக்கிடையே வாய்ச் சண்டைகளும் ஏற்படுகின்றன. ஆனால் இறுதியில் அது காதலாக மாறுகின்றது. இந்நாவலுக்கு “வேல் விழியாள்” என்ற பெயரை வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்நாவலை தமிழகத்துக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
நாவலாசிரியை சிவநயனி நன்றியுரை வழங்கிய போது, “ கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் இந்நாவலை வெளியிட எனக்கு பெருமளவில் உதவி செய்துள்ளார். அவரொரு நடமாடும் பல்கலைக் கழகம். வரலாற்று நாவல்கள் உண்மையான சம்பவங்களைக் கொண்டிருக்க வேண்டும் எனக் கூறினார். இங்குள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்ததினால் அவருடனும் திரு.சின்னையா சிவநேசன் உடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டியது. இந்நாவலை நான் எழுதி முடித்து முதலில் அவரிடம் காண்பித்து அவரது அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே பிரசுரித்தேன். அவரது பாரியார் திரு.வேணு வரதராசா இந்நாவலை அழகாகப் பிரசுரித்து தந்தார். இந்நாவலை வெளியிட எனக்கு உதவிய அனைவருக்கும் வெளியீட்டு விழா வில் பங்கு பற்றிய அனைவருக்கும்எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
(வீரகேசரி மூர்த்தி)