தெவிநுவர வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும்

ekuruvi-aiya8-X3

devinuwara-light-houseவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெவிநுவர வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக எதிர்வரும் வியாழக்கிழமை (04) திறந்துவைக்கப்படும். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணங்கவினால் இவ்வெளிச்ச வீடு திறந்துவைக்கப்படும்.

இது தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடகப் பிரிவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க உள்ளடங்கலான பல அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நடாத்தப்படுகின்ற தெவிநுவர வெளிச்ச வீடானது 1887ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இது சிறிமத் ஜேம்ஸ் நிக்கலஸ் டக்லஸ் அவர்களினாலேயே நிர்மாணிக்கப்பட்டது. இவ்வெளிச்ச வீட்டை நிர்மாணிக்கும் பொருட்டு பிரித்தானிய பவுன் 30,000 செலவிடப்பட்டது.

07 மாடிகளை கொண்ட இவ்வெளிச்ச வீட்டின் உயரம் 49 மீட்டர்களாகும். இங்கு 196 படிகள் உள்ளன. இலங்கையிலுள்ள நான்கு சர்வதேச வெளிச்ச வீடுகளுள் இதுவும் ஒன்றாகும். 2000ம் ஆண்டு இலங்கை துறைமுக அதிகார சபையினால் இவ்வெளிச்சவீடு புனரமைக்கப்பட்டது. பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் உட்பிரவேச வாயிலில் காணப்பட்ட இக்கட்டான நிலை காரணமாக இவ்வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக திறக்கப்படவில்லை.

இவ்வனைத்து பிரச்சினைகளையும் உடனடியாக தீர்த்து தெவிநுவர வெளிச்சவீட்டை திறந்து வைக்குமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அதிகாரிகளிற்கு பிறப்பித்த உத்தரவிற்கமைவாக இவ்வெளிச்ச வீடு மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ள தெவிநுவர வெளிச்ச வீட்டை அண்மித்த பிரதேசத்தில் விசேட வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவரும் வேலைத்திட்டமும் இதனுள்ள உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment