வன்னியில் இராணுவத்திரால் காடழிப்பு கூகுள் மைப் மூலம் கண்டுபிடிப்பு!

ekuruvi-aiya8-X3

Wilpattu-National-Park-4வடக்கு மாகாணத்துக்குரிய காட்டுப் பிரதேசங்களான வன்னிக் காடுகளில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை கூகுள் வரைபடம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தினர் வன்னிக் காடுகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்கு பெருமளவில் காடழிப்பு நடைபெற்று வருவதாகவும், காடுகளின் நடுவே பாரிய இடைவெளி காணப்படுவதை கூகுள் வரைபடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட 2016ஆம் ஆண்டுக்கான இறுதி அபிவிருத்திக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வடபகுதிக்குப் பயணம் செய்யவுள்ளனர்.

அவர்களின் வருகையின்போது, வடக்கு மாகாணத்திற்கான பொருளாதாரத் தேவைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

அத்துடன் பாரியளவிலான செயற்றிட்டங்களால் மக்கள் பயனடைவார்கள் என்ற திட்டத்தை மாற்றி சிறு மத்திய கைத்தொழில்களை உருவாக்குவதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கமுடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் தேவையற்ற வௌிமாகாண உள்ளீடல்களைக் குறைக்க முடியும் எனவும், மக்கள் பெருவாரியாக இங்கு தங்கி நெருக்கடிகளுக்கு உள்ளாவதைத் தடுக்க முடியும் எனவும் நீர்ப்பாவனை, மின்சாரம், வடிகால், கழிவகற்றல் போன்றனவற்றை திறமையுடன் நிர்வகிக்க முடியும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சந்திப்பின்போது ஒண்றிணைந்த குரலில் அனைவரதும் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தின் நிலங்கள் சூறையாடப்படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டுமென வலியுறுத்திய அவர், சுண்டிக்குள கடற்கரைப் பிரதேசத்தில் மத்திய அரசாங்கத்தின் உள்ளீடுகள் சுற்றுச்சூழலுக்கு அனுசரனையாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வடக்கு மகாணத்தின் வனப்பகுதிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதால், பெருமளவிலான வனங்கள் பாதிக்கப்படுவதுடன், வனத்தின் நடுப் பிரதேசங்களில் பாரியளவிலான வெளிகள் காணப்படுவது கூகுள் வரைபடத்தின்மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment