வங்காளதேச முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கப்பட்டது

sdsd

MinisterKalita-ZiaSurrender_SECVPFவங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, பஸ் எரிப்பு வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. வங்காள தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்காளதேச தேசியத்துவ (பி.என்.பி.) கட்சியினர் கடந்த ஆண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதில் 120 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.அதில் ஒரு சம்பவம், டாக்காவில் உள்ள ஜாத்ரபாரி பகுதியில் ஜனவரி 23-ந் தேதி நடந்த பஸ் எரிப்பு சம்பவம். பெட்ரோல் குண்டு வீசி பஸ்சை எரித்த அந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் கலிதா ஜியா (வயது 70) மற்றும் அவரது கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என 27 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மீது மே 6-ந் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் அனைவருக்கும் கடந்த 30-ந் தேதி பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. கலிதா ஜியா, 5-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைவார் என அவரது வக்கீல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கலிதா ஜியா நேற்று காலை 10.30 மணிக்கு டாக்கா கோர்ட்டு வளாகத்துக்கு காரில் சென்று இறங்கினார். அவரை கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரளாக வந்திருந்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து காலை 10.45 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் டாக்கா மெட்ரோபாலிட்டன் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கம்ருல் உசேன் முல்லா முன்னிலையில் சரண் அடைந்தார்.

அவரை பிணையில் விடுதலை செய்து நீதிபதி கம்ருல் உசேன் உத்தரவிட்டார். இது தொடர்பாக அரசு வக்கீல் அப்துல்லா அபு கூறும்போது, “கலிதா ஜியாவின் வயது, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது” என்றார்.

இதே போன்று கலிதா ஜியா மீது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு ஒன்று தாக்கலாகி உள்ளது. அந்த வழக்கிலும் அவர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அதில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு ரஷீத் தாலுக்தர் ஜாமீன் வழங்கினார்.

கலிதா ஜியா மீது ஒரு ஊழல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும் நேற்று அவர் 3-ம் எண் தனிக்கோர்ட்டில் சரண் அடைந்தார். அவருக்கு நீதிபதி அபு அகமது ஜோமத்தார் ஜாமீன் வழங்கினார்.

நீதிமன்ற வளாகத்தில் நிருபர்கள் குவிந்திருந்தாலும், கலிதா ஜியா பேட்டி எதுவும் அளிக்கவில்லை. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும் காரில் வீடு திரும்பினார்.

Share This Post

Post Comment