வழித்தேங்காய்களும் தெருத்தெய்வங்களும்

ekuruvi-aiya8-X3

“மச்சான் வன்னியிலை போராலை பாதிக்கப்பட்ட கொஞ்ச பிள்ளையளுக்கு படிப்புச் செலவுக்கு உதவிகள் செய்துகொண்டு இருக்கிறன். உன்னாலை முடிஞ்ச உதவி ஏதாவது செய் மச்சான். சனம் எல்லாம் சரியான கஸ்ரப்படுதுகள்..பாவம்.” என்ற வேண்டுகோளை ஏற்று நண்பன் ஒருவன் குறிப்பிட்ட தொகை பணம் அனுப்புகிறார்.

சில நாட்களில் “போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கினார்” என படங்களுடன் செய்தி வருகிறது. அதில் பணம் அனுப்பியவரின் பெயர் விபரம் எதுவும் இல்லை. தானே தன்னுடைய பணத்தில் வழங்கியதுபோல அந்த ஒருங்கிணைப்பாளர்.? செய்தி வடிவமைத்திருக்கிறார்.

மீண்டும் இதே போல் வேறு நண்பர்களிடமும் அந்த ஒருங்கிணைப்பாளர் உதவிகேட்கிறார். பின்னர் தான் உதவி வழங்கியதுபோலவே செய்தித்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தி வருகிறார்.

மேலே சொன்னது ஒரு சிறு உதாரணம். இப்படி உதவி செய்வதும், உதவிக்கு பணம் திரட்டுவதும், பின்னர் அதை தங்கள் சுய இலாபங்களுக்காக விளம்பரப்படுத்துவதும் பலவகைகளில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

முதல்நாள் உதவிசெய்தோம் என்ற புகைப்பட விளம்பரங்களும் மறுநாள் தங்கள் குடும்ப விளம்பரங்களும் சமூக வலைத்தளங்களில் “குப்பையாக” பரவிக் கிடக்கின்றது.

mother-teresa-0a(1)முதல்நாள் மக்களோடு மக்களாக நின்று அவர்களின் துன்ப துயரங்களில் பங்கெடுத்துவிட்டு மறுநாள் களியாட்ட மனநிலையில் பதிவிடுவது அருவருப்பானது. அன்னை தெரேசா அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு சமூக சேவையாளருக்கு இருக்கவேண்டிய குறைந்த பட்ச பண்புகளைக்கூட இவர்களிடம் காணமுடிவதில்லை. அல்லது கடைப்பிடிப்பதில்லை. இவ்வாறானவர்கள் உண்மையில் சமூக சேவையாளர்கள் என்ற போர்வையில் உலவும் சுய விளம்பரப்பேர்வழிகள்தான் தாங்கள் என்பதை தங்கள் செயல்பாட்டின்மூலமும் பதிவுகளின்மூலமும் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரம் எந்த உதவியை எப்போது செய்யவேண்டும் என சத்தமின்றி செய்யும் பல தன்னார்வலர்களையும் சிறு தொண்டு நிறுவனங்ளையும் இந்த விளம்பரச் செய்திகளில் நாம் காண்பது அரிது. அல்லது அவர்கள் தாம் செய்யும் உதவிளை இவ்வாறு மலினமாக விளம்பரப்படுத்துவதில்லை.

எல்லோருமே நாங்கள் இரண்டு பிள்ளைகளை பார்க்கிறம் நாலு பிள்ளைகளைப் பார்க்கிறம் என்பதுதான் பேச்சு. அப்படி சொல்லப்படும் தொகையை கூட்டிப்பார்த்தால் அது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகையைவிட அதிகமாக இருக்கும்.

அப்படியானால் இன்னமும் உதவி கிடைக்கவில்லை, உதவி தேவை போன்ற குரல்கள் ஏன் வருகின்றன என்பது பற்றி நாம் சிந்திக்கவேண்டும்.

ஒருவர் உதவி செய்வதும் செய்யாமல் விடுவதும் விளம்பரப்படுத்துவதும் அவர்களது உரிமை, சுதந்திரம் என்பது மறுப்பதற்கில்லை. அத்துடன் இவ்வாறாவது ஒரு சிலர் செய்கிறார்களே அதை விமர்சிப்பதன்மூலம் அதுவும் இல்லாமல் போய்விடும் என்ற சிலரின் ஆதங்கங்களிலும் நியாயம் இருக்கலாம்.

தனிமனிதர்களை விமர்சிப்பதும் குறைகூறுவதும் இப்பத்தியின் நோக்கம் அல்ல. மாறாக தொடர்ந்து அதிகரித்துவரும் இவ்வாறான தனிமனித அதிரடி விளம்பரப்படுத்தல்கள் போரால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் ஏற்படுத்திய ஏற்படுத்த இருக்கின்ற ஆரோக்கியமற்ற விளைவுகளை பரிசீலனை செய்வதற்கும் எதிர்காலத்தில் ஆரோக்கியமான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கும் உதவுவதே இப்பத்தியின் நோக்கம்.

நெறிப்படுத்தப்படாத உதவிகளும் சிலர் தங்களின் சுயவிளம்பரத்திற்காக செய்யும் உதவிகளும் உதவி பெறும்
மக்களையும் உண்மையாக உதவி வழங்கும் மக்களையும் ஒருவித பொருளாதார மற்றும் உளவியல் சிக்கலுக்குள் இழுத்துச் சென்றுகொண்டிருப்பதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும்.

ஒரு மாபெரும் போரை தோள்களில் தாங்கிய சமூகத்தை நெறிப்படுத்தப்படாத உதவிகள்மூலம் தங்கிவாழும் சோம்பேறிச் சமூகமாக உருவாக்குவதும் சுய விளம்பர போலி தூதர்களால் அடிக்கடி அவர்களின் துன்ப துயரங்கள் உண்மைக்கும் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டு அவர்களை ஒரு அநாதைச் சமூகமாக சித்தரித்து மோசடி செய்வதும் தவிர்க்கப்படவேண்டும். குறிப்பாக அற்ப உதவிக்காக அவர்களைக் காட்சிப்பொருளாக்குவது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின் (பொய்யாக) சேவைநோக்கமாக அணுகுவதற்குப் பதிலாக (உண்மையாக) இலாப நோக்கமாக அணுகியிருந்தால் இன்றும் “உதவி தேவை” “உதவி கிடைக்கவில்லை” “நாங்களும் உதவி செய்கிறோம்” என்ற அவலமும் அசிங்கமும் தொடர்ந்துகொண்டிருக்காது.

சுருக்கமாகச் சொன்னால் போரால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஒரு பொருளாதாரச் சிந்தனைதான் பயன் தருமே அன்றி சேவை நோக்கம் அல்ல. ஏனெனில் இன்றைய கால கட்டத்தில் சேவை நோக்கம் என்பது உலகின் பெரும்பாலான விடயங்களில் பெயரளவில் சுய இலாபங்களுக்காகத்தான் செய்யப்படுகின்றது. அதில் நாம் மட்டும் எப்படி விதிவிலக்காக இருந்துவிட முடியும். (இங்கு குறிப்பிட்ட மிகச்சொற்ப உண்மையான சேவை நோக்கம் கொணடவர்களை தவிர்த்துப் பார்க்கவும்)

“நாங்கள் மற்றவர்கள் பார்த்து பரிதாபப்படுபவர்களாக இருக்க விரும்பவில்லை. அப்படி இருப்பதால் எமக்கு தேவையானதை அவர்களால் என்றுமே தரமுடியாது” என்று தலைவர் பிரபாகரன் சொன்னதை நடைமுறையில் கண்டுவருகிறோம்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ மண்ணுக்கோ சேவகர்கள்தான் தேவையே தவிர (விளம்பரத்) தூதுவர்கள் அல்ல. இத்தனைகாலமும் அந்த மண்ணும் மக்களும் தூதுவர்களால் துவண்டது போதும். இத்தனை காலமும் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் உதவிசெய்கிறோம் எனச்சொல்லி சுய இலாபம் அடைந்தது போதும்.

இன்னும் எத்தனைகாலம் சென்றாலும் நாம் பார்த்து பரிதாபப்படுபவர்களாக நமது மக்களை வைத்திருக்கும்வரை அவர்களுக்கு வேண்டியதை எங்களால் நிறைவாக கொடுத்துவிடமுடியாது. அதே போல் மற்றவர்கள் பார்த்து பரிதாபப்படும் சமூகமாக நாம் இருக்கும்வரை அவர்களால் எங்களுக்கு வேண்டியதை தந்துவிடவும் முடியாது.

முதலில் நமது பொருளாதார பங்காளிகளாக நமது மக்களை மாற்றுவதன்மூலம் அவர்களுக்கு வேண்டியதை நாம் முழுமையாக கொடுக்கமுடியும். பின்னர் மற்றவர்களின் பொருளாதார பங்காளிகளாக நாம் மாறுவதன்மூலம் நமக்கு வேண்டியதை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கு முதலில் உதவி தேவைப்படுபவர்களின் தரவுகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவேண்டும்.

அடுத்தது உண்மையாகவே அத்தியாவசிய உதவி தேவைப்படுபவர்களுக்கு தொடர்ந்து உதவிக்கொண்டிருக்கும் தன்னார்வலர்களும் சிறு சிறு தொண்டு நிறுவனங்களும் (பெரும்பாலும் புலம் பெயர்ந்த தேசங்களில் உள்ளோர்) ஒரு கூட்டுச் சக்தியாக (குறைந்தபட்சம் தகவல் பரிமாற்றத்துடன்) இயங்கவேண்டும். உதவி பெறுபவர்கள் உண்மையில் பயன்பெறுவதை உறுதிப்படுத்துவதுடன் இடைத்தரகர்கள் சுரண்டுவதையும் தங்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்துவதையும் உதவி பெறுபவர்கள் உதவிகளை துஸ்பிரயோகம் செய்வதையும் தடுக்கவேண்டும்.

சுய விளம்பரத்திற்காகவும் சுரண்டலுக்காகவும் கிளம்பியிருக்கும் “ போலிச் சமூக சேவகர்களை அடையாளம் கண்டு; எச்சரிக்கையும் செய்யவேண்டும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.

இறுதியாக உதவி தேவைப்படுபவர்களில் பெரும்பாலானவர்களை சேவை மனநோக்கத்துடன் அணுகுவதற்குப் பதிலாக வர்த்தக பங்காளிகளாக அணுகவேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பொருட்கள் சேவைகளில் மூதலீடு செய்வதன்மூலம் உற்பத்தி, வேலைவாய்ப்பு, தன்னிறைவு, ஏற்றுமதி, வருமானம் என முதலீட்டாளர்களும் பங்காளிகள் அல்லது தொழிலாளர்களும் பயன் பெறுவது பற்றி திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

போரின் பின் எவ்வளவு விரைவாக ஒரு சமூகம் பொருளாதார ரீதியாக மேம்பட்டு நிற்கிறதோ அவ்வளவு விரைவாக அது உளவியல் வலிமை பெறும். அதனூடாக அது தன்னை தற்காத்துக்கொள்ளவும் தனது விடுதலைக்காக தொடர்ந்து போராடவும் முடியும்.

எமது மக்களுக்கு இப்போது தேவை பொருளாதார நண்பர்களே அன்றி உதவிசெய்யவரும் தேவதூதர்கள் அல்ல. எமது மக்கள் மற்றவர்கள் பார்த்து பரிதாபப்படுபவர்களாக இருக்கமுடியாது. அப்படி இருப்பதால் அவர்களுக்குத் தேவையானதை மற்றவர்களால் என்றுமே கொடுக்கமுடியாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்திரன் ரவீந்திரன்

 

Share This Post

Post Comment