வாகரை பிரதேச செயலக வாயிற்கதவை மூடி ஆர்ப்பாட்டம்.

sdsd

vakaraiமட்டக்களப்பு வாகரை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவுக்கு பூட்டுப்போட்டு பிரதேச மக்களினால் புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வாகரை பிரதேச செயலகத்திற்குப்பட்ட கதிரவெளி புச்சாக்கேணி, புதூர் மற்றும் வாகரை பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட பகுதிகளில் காணப்படும் அரச காணியினை சட்டவிரோதமாக விற்பனை செய்தல், காடழித்தலை தடுத்தல், அத்துடன் அரச காணிகளை வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதை உடன் நிறுத்த வேண்டும் என்பதுடன், குறித்த பகுதிகளில் காணப்படும் அரச காணிகளை உடனடியாக பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கையகப்படுத்த வேண்டும் போன்ற பிரதான கோரிக்கை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டம் பொது மக்களினால் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களில் அரசியல்வாதிகளிடம் எடுத்துக்கூறியும் இதுவரைக்கும் காணி தொடர்பான பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பிச்சை எடுத்தாலும் தாய் மண்ணை விற்றுப் பிழைக்காதே, அரச காணி விற்பனைக்கு இல்லை, இடைத்தரகரே வெளியே, விற்காதே விற்காதே அரச காணியை விற்காதே போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிரவெளி மற்றும் புச்சாக்கேணி கடற்கரையோரப் பகுதிகளை அண்டிய அரசாங்கக் காணிகள் சுமார் 40 ஏக்கர் உறுதி முடிக்கப்பட்டு வர்த்தகப் புள்ளிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வாகரைப் பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.இராகுலநாயகியிடம் மகஜரை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

பொது மக்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவு பூட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களினால் திறக்கப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களை உள் நுளைய அனுமதி வழங்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்:

குறித்த கதிரவெளி கிராம சேவகர் பிரிவுக்குப்பட்ட புதூர் கிராமம் மற்றும் புச்சாக்கேணி ஆகிய காணிகளுக்கு இன்றைய தினமே பொலிசாருடன் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகளை அகற்றுமாறும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு வாகரை பொலிசார் வருகை தந்ததுடன் பிரதேச செயலாளரின் கோரிக்கையை ஏற்று உடன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பிரதேச செயலகத்தின் நிருவாக நடவடிக்கை சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment