அமெரிக்கா கனடாவுக்கிடையில் மூழும் வர்த்தகப் போர் பு 7 ( Group of Seven ) – குழு 7

ekuruvi-aiya8-X3

5a98714e487ff91b008b45bf-750-375இம்மாதம் யூன் 8, 9ம் திகதிகளில், கியூபெக் மாகாணத்திலுள்ள லா-மல்பேய் பகுதியின் அழகிய மல்பேய் ஆற்றினருகே, உலகின் பலம்வாய்ந்த 7 நாடுகளின் தலைவர்கள், G  7 என்ற குழுமத்தின் வருடாந்த மாநாட்டில் சந்திக்கிறார்கள். 1899ல் கட்டப்பட்ட, மிகப்பழமையும் புகழும்வாய்ந்த Manoir Rickelieu என்னும் உயர்ரக உல்லாசவிடுதியில் நடைபெறவுள்ள 44வது G 7 மாநாடு, இம்முறை திடீரென ஒரு பரபரப்பு நிறைந்த, பல தலைவர்களும் குடுமிச் சண்டையிடக்கூடிய ஒரு சந்திப்பாக, உலக நாடுகள் பலவற்றினதும் சர்வதேச ஊடகங்களினதும் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்க்கின்ற ஒரு சந்திப்பாக மாற்றமடைந்திருக்கிறது.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, ஜப்பான் ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய உலகின் பலம்வாய்ந்த ஏழு நாடுகளின் G7 குழுமம், உலகின் 62 வீதமான நிகர செல்வத்தையும் பொருளாதார வளத்தையும் வைத்துள்ள ஒரு பலம்வாய்ந்த சக்தியாக, பலமான முடிவுகளை எடுத்து செயற்படுத்தக்கூடிய சக்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஏழு நாடுகளின் தலைவர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் ஒரு விசேட பிரதிநிதியாகக் கலந்து கொள்வார். சென்ற வருடம் மே மாதத்தில் இத்தாலியின் மெசினா நகரில் இந்த மாநாடு நடைபெற்றது. 2019ல் பிரான்சிலும், 2020ல் அமெரிக்காவிலும், 2021ல் இங்கிலாந்திலும் இந்த மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டுக்கான இந்த உயர்மட்ட மாநாட்டிற்கு முன்னோடி நடவடிக்கையாக, யூன் மாதத்தின் முதல்-வார நாட்களில் இந்த ஏழு நாடுகளின் நிதியமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் சில வெளிநாட்டமைச்சர்களும் பங்கேற்கின்ற முக்கிய சந்திப்பு, பிரிட்டிஸ் கொலம்பியாவில் நடைபெற்றது.

G7 குழுமத்தின் உருவாக்கம் – வரலாறு

1973ல் உருவான அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யொம்-கிப்பூர் யுத்தத்தினால், மேற்குலக நாடுகளுக்கான எண்ணெய் வழங்கலை இடைநிறுத்துவதாக அரபு நாடுகள் அறிவித்தபோது, அதை எப்படி எதிர்கொள்வது என்பதை அவசரமாக விவாதிப்பதற்கு, அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதியமைச்சர்கள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் சந்தித்தார்கள். அமெரிக்க ஜனாதிபதி றிச்சார்ட் நிக்ஸன், வெள்ளை மாளிகையின் நூலக அறையை இந்த சந்திப்புக்குப் பாவிக்க அனுமதி வழங்கினார். அதனால் இந்தக் குழு, ‘ ‘Library Group’ ‘ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தொடர் சந்திப்புக்களின்போது, சர்வதேச முரண்நிலை காரணமாக, ஜப்பானும் இணைக்கப்பட்டு, ‘Group of Five ” என்ற பெயரில் சுட்டப்பட்டது.

1975ல் பிரான்சில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இத்தாலியும் உள்வாங்கப்பட்டதால், ‘ ‘Group of Six’  என்று அழைக்கப்பட்ட இந்தக்குழுவில், சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய அனுபவமுள்ள இன்னுமொருவரையும் இணைப்பது நல்லது என்று முன்மொழியப்பட்டது. 1976ல், அப்போது கனடிய பிரதமராக இருந்த பியர் ரூடோ அவர்கள், அனுபவமுள்ள ஒரு அரசியல் தலைவர் என்ற அடிப்படையில், கனடாவையும் இந்தக் குழுவில் இணைத்து, G7 அதாவது ‘ ‘Group of Seven’ என்ற பெயர்ப்பதம் பாவனைக்கு வந்தது. 1977ல், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவம் குறித்த அவசியம் உணரப்பட்டதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் இதில் சிறப்புப் பிரதிநிதியாக உள்வாங்கப்பட்டார்.

1994ல் ரஷ்ய அதிபர் பொறிஸ் யெல்ற்சின், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் செல்லப்பிள்ளை என்று கருதப்பட்ட காலத்தில், இந்த இரு நாடுகளின் விசேட வேண்டுகோளில், ரஷ்யாவும் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டு, G7+1 என்று தற்காலிகமாக சுட்டப்பட்டதுடன், பின்னைய நாட்களில் G8 என்ற பெயரும் பாவனைக்கு வந்தது. இருப்பினும் 2014ல், கிறிமியா பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றி தனது நாட்டுடன் இணைப்பதாக அறிவித்தபோது, ரஷ்யா மீது பிரயோகிக்கப்பட்ட சர்வதேச அழுத்தங்களில் ஒன்றாக, G8 குழுவிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டது. இன்றுவரை இந்தக்குழு, G7 என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

2018க்கான G7 மாநாடு ஏன் திடீரென முக்கியத்துவம் பெறுகிறது?

1994ல் உருவாக்கப்பட்ட  NAFTA (நஃப்தா) ஒப்பந்தம், மீளவும் புதுப்பிக்கப்படவேண்டுமென்றும், இல்லையேல் ரத்து செய்யப்படுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் எச்சரித்ததால், கனடா-அமெரிக்கா-மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கிடையிலான இந்த வரிச்சலுகை ஒப்பந்தம் கேள்விக்குள்ளானது. கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தலைமையில், வெளிநாட்டமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலான்ட் சகிதம் ஓர் உயர்மட்டக் குழு, அமெரிக்காவுடன் பலமட்ட சந்திப்புக்களை நடாத்தி, எப்படியும் இந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றிவிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில், நஃப்தா ஒப்பந்தம் ஜூன் 1ம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. கனடிய உற்பத்திப் பொருட்களுக்கு, குறிப்பாக இரும்பு, அலுமினியம் மற்றும் பாற்பொருட்களுக்கு வழங்கப்பட்ட பாரிய வரிச்சலுகைகள் இதனால் ரத்தாகின. இது தவிர, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சில நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களுக்கும் வணிக-வர்த்தக தொடர்புகளுக்கும்கூட அமெரிக்கா மேலதிக கட்டுப்பாடுகளை அறிவித்துவரும் நிலையில், முக்கிய ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் தலைவர்களும் கனடிய பிரதமரும் கலந்து கொள்கின்ற இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பின் தொடர்பாடல்களும் கருத்தாடல்களும் முடிவுகளும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

ஜஸ்ரின் ரூடோ தலைமையில், கனடாவின் கியூபெக் நகரில் நடைபெறும் இவ்வருட G7 மாநாட்டில், அரசியல் நெருடல் தரக்கூடிய சர்வதேச பிரச்சனைகளை அதிகம் தவிர்த்து, காலநிலை, பெண் சமத்துவம், பருவ மாற்றங்கள், சக்தி வளத்தை தூய்மையாக்கல், சர்வதேச கடல் எல்லை மற்றும் சர்வதேச பெருங்கடலின் (சமுத்திரங்களின்) எதிர்காலம் போன்ற பல பொது விடயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து, இவ்வருட ஆரம்பத்திலிருந்து இந்தத் தலைப்புக்களில் பல்வேறு கருத்தரங்குகள் நடாத்தி, இவற்றை ஆற அமர இருந்து பேசலாமே என்று ஜஸ்ரின் ரூடோ முடிவெடுத்திருந்த நிலையில், ஒரு சில நாட்களே உள்ள நிலையில், திடுதிப்பென அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தகப் போர் ஒன்று உருவாகி, G7 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பை, கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ நேரில் சந்தித்து உரையாடுகின்ற, நேர்முகப் போருக்கு முகம் கொடுக்கின்ற ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கியுள்ளது.

எஃகு என்றழைக்கப்படுகின்ற உருக்கு இரும்பு மற்றும் அலுமினியம் மீதான வரிச்சலுகையை ரத்துசெய்த அமெரிக்கா, அவற்றின் மீது வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகின்ற பொருட்களுக்கான முழுமையான வரி அறவிடப்படுமென அறிவித்தது. இதனால் கிட்டத்தட்ட 16 பில்லியன் டொலர் வர்த்தக பரிமாற்றத்திற்கான தொகை பாதிப்பிற்குள்ளானது. இதற்கான பதிலடியாக, கனடாவும் அமெரிக்கப் பொருட்களில் பலவற்றிற்கு 25 வீத வரியை விதித்து, கிட்டத்தட்ட 16 பில்லியன் டொலர் வர்த்தகத்திற்கான தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நேரடி மோதல் நிலையை உருவாக்கியது. பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான கனடிய அரசுக்கு வேறு தெரிவுகள் விட்டுவைக்கப்படவில்லை என்ற கருத்து பரவலாக கனடாவில் காணப்படுகிறது. அதேவேளை, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா வழங்கிய வரிச்சலுகையைப் பாவித்து, சீனா உட்பட பல நாடுகளும் தங்களது உற்பத்திப் பொருட்களை கனடா மற்றும் மெக்சிக்கோ ஊடாக அமெரிக்காவிற்குள் கொண்டு செல்வதால், நஃப்தா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் வரிச்சலுகை துஷ்பிரயோகம் செய்யப்படுவதான அமெரிக்காவின் குற்றச்சாட்டில் கணிசமான உண்மை இருப்பதாகவும் பரவலாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், யூன் 8ம் 9ம் திகதிகளில் கியூபெக்கில் நடைபெறும் ஏழு நாடுகளின் தலைவர்களையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரையும் உள்ளடக்கிய G7 மாநாடு, அதிகபட்ச முக்கியத்துவமும் பரபரப்பும் பதற்றமும் நிறைந்ததாக மாற்றம் கண்டுள்ளது.

குயின்ரஸ் துரைசிங்கம்
ரொறன்ரோ

Share This Post

Post Comment