போர்க் குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணை தேவை; அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து ஸ் ரீபன் ராப் அறிக்கை சமர்ப்பிப்பு
Apr 06 2012 02:58:40
நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு விசாரிக்கத் தவறிய, கவனம் செலுத்தத் தவறிய போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசு சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்தவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் விசேட மனித உரிமை அலுவலரான ஸ்ரீபன் ராப், இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் தான் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்றுச் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் அறிக்கையையும் நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையையும் விமர்சித்துள்ளார்.
அவரது அறிக்கையின் முடிவுரையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:
கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கை அரசை அமெரிக்க வெளியுறவு அமைச்சு தொடர்ந்தும் ஊக்குவிக்கும்.
அதேவேளை, நல்லிணக்கப்பாட்டுக்கான ஆணைக்குழு குறிப்பிடத்தவறிய நம்பகமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவொன்றை இலங்கை அரசு நிறுவவேண்டும்.
பொதுமக்களின் இலக்குகள் மீதான தாக்குதல்கள், யுத்த சூனிய மண்டலப்பகுதி மீதான ஷெல் தாக்குதல்கள், சரணடைந்த புலிகள் படுகொலையுண்டமை, பாலியல் சம்பந்தமான வன்முறைகள் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் என்பன ஆராயப்படவேண்டியுள்ள விடயங்களில் அடங்கும்.
மனிதாபிமான நிவாரண விநியோகம், காணாமல் போகச் செய்தல், கைது செய்வதற்கும் தடுத்துவைப்பதற்குமான நடவடிக்கைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட முறையீடுகளும் விசாரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு விசாரணையும் அரசின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டதாகவும், சுயாதீனமாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும அமையவேண்டும்.
சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும. அதேவேளை, இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா இலங்கையின் நல்லிணக்கப்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிக்கும்.
சண்டையின்போது இரு தரப்புகளாலும் கட்டவிழ்க்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாடும் இலங்கை அரசுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டவேண்டும். நல்லிணக்கப்பாட்டைப் பொறுத்தமட்டில் இது பெரிதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஓரம்சமாகும். அப்படியானால்தான் நீதியின் கோட்பாடு அனைவருக்கும் ஒன்றே என்ற நிலைப்பாடு சமூகங்களின் மத்தியில் உருவாகும்.
நம்பகத்தன்மை வாய்ந்த பொறுப்புக்கூறல் கடப்பாட்டுக்கான முயற்சிகளை முன்வைக்கும்போது, அவை இரு தரப்புகளையும் உள்ளடக்கியவையாகவே இருக்கவேண்டும். யுத்தத்தின் இறுதி மாதங்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்கள் சம்பந்தமான உண்மை நிலைப்பாடு, தண்டனைகளிலிருந்து தப்புவதைத் தடுக்கும்.
அதேவேளை, விடுதலைப்புலிகளை எதிர்கால வீரர்களாக மாற்றமுனைவோரின் தவறையும் சுட்டிக்காட்டிவிடும். இலங்கையின் அமைதியான எதிர்காலம் நம்பிக்கையிலேயே தங்கியுள்ளது. அனைத்து இலங்கை மக்களுக்குமிடையிலான நம்பிக்கை, இலங்கையர்களுக்கும் அவர்களின் அரசுக்குமிடையிலான நம்பிக்கை ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது.
உண்மையை ஏற்றுக்கொள்ளுதல், பாதிக்கப்பட்டோருக்கான நீதி, பொறுப்பு, தெளிவு, கடந்தகாலத் தவறுகளுக்கான முறையான பரிகாரங்கள், பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஆகியவற்றின் மீதே இந்த நம்பிக்கை தங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.