உரிமைக்காக போராடும் அனைவரும் பயங்கரவாதிகள் – வடக்கு மாகாண முதலமைச்சர்!

Thermo-Care-Heating

download-3தமது உரிமைக்காக போராடும் அனைவரும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தப்படுகின்றார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு எழுக தமிழ் பேரணியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், நாங்கள் 69ஆண்டுகளாக எமது குறைகளைக் கூறி வருகின்றோம். ஆனால் எமது குரல் செவிடன் காதில் ஊதிய மகுடிபோலவே இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் உறங்குபவனை எழுப்பலாம் ஆனால் உறங்குபவன்போல் நடிப்பவனை எழுப்பமுடியாது. உறங்குபவர்கள்போல் நடிப்பவர்களை உசுப்பி எழுப்பவே இந்த எழுக தமிழ் பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், நாம் எமது உரிமைகளைத் தட்டிக்கேட்கும்போது, நாம் தவறானவர்கள் எனவும், நாட்டில் உருவாகியுள்ள நற்சூழலை குழப்புகின்றோம் எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

நாங்கள் வாய்மூடி பேசா மடந்தைகளாக இருந்து, அரசாங்கம் சொல்வதைக் கேட்டால் எங்களுக்கு அரசாங்கத்தினால் நல்லாட்சிப் பத்திரம் கிடைக்கும். துணிந்து நாம் கூறும்போது நாம் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தப்படுகின்றோம்.

அத்துடன், யுத்தம் முடிந்து 8 வருடங்கள் கடந்தும் வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தினரைத் திரும்ப அழைக்காததன் மர்மம் என்ன? என்றும் முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 2016 இல் கட்டாயம் தீட்வுத் திட்டம் தருவார்கள் என்று எதிர்பார்த்த போதிலும், அரசாங்கத்திற்கு அதனைக் கொடுக்க மனமில்லை என்பது உலகறிந்த விடயம்.

அரசுக்கு எதிரான தீவிரவாதப் போக்கைக்கொண்ட ஒரு அமைப்பை தாம் உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக, தவறான கருத்துக்களை சிங்களத் தலைமைகள் முன்வைக்கத் தலைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாதது ஏன்? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கில் தனியார்களின் காணிகள் இராணுவத்தினர் உதவியுடன், அடாத்தாக கைப்பற்றப்பட்ட அரச காணிகளிலும் புதிய புதிய பௌத்த கோவில்களை அமைப்பதும் பிற மத வணக்கத்தலங்களை இடித்து அழிப்பதுமாகிய செயற்பாடுகளில் ஈடுபடுவது எதற்காக? என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கின்றோம் என பெருமளவில் விளம்பரம் செய்யும் அரசு அவசரமான அடிப்படைத் தேவைகளைக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அல்லது அங்கவீனர்களுக்கு கூட உதவ முடியாதிருப்பது ஏன்? அக்கறையின்மையா? அலட்சியமா? அரசியல் பழிவாங்கலா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பொருத்து வீடுகளை வடமாகாணத்தில் அறிமுகப்படுத்த விளைவதன் மர்மம் என்ன? என்றும் காணாமற் போனவர்கள் சம்பந்தமாக வலுவற்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து விட்டு அதனைக்கூட நடைமுறைப்படுத்த முன் வராததன் காரணம் என்ன? என்றும் வடமாகாண முதலமைச்சர் கேள்வியெழுப்பியுள்ளார்.

உரிமைகளைக் கோருவோர், உரிமைகளுக்காகப் போராடுவோர், உரிமைகளைத் தாருங்கள் என்று உரக்கக்கேட்போர் அனைவரும் ஆட்சியாளர்கள் பார்வையில் பயங்கரவாதிகளாகவே காணப்படுவதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment