ஊழல் சாம்ராஜ்யம் முடியட்டும்- மு.க.ஸ்டாலின்

stalin-34348877ஊழல் சாம்ராஜ்யம் முடியட்டும். திமுகவின் நல்லாட்சி மலரட்டும் என மதுரையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தென் மாவட்டங்களின் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை ஊமச்சிகுளம் அருகே மேனேந்தல் மைதானத்தில் நேற்று மாலை நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பேசினர். மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவும், காங்கிரசும் நாட்டுக்கு எத்தனையோ திட்டங்களை, சாதனைகளை நிறைவேற்றி தந்துள்ளன. இரு கட்சிகளும் இணைந்து குடியரசு தலைவர்களை தேர்வு செய்துள்ளன.

பிரதமர்களை உருவாக்கியுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை தலை நிமிர செய்துள்ளோம். தமிழகத்திற்கும் பல அரிய திட்டங்களை உருவாக்கி தந்தோம். நல்லாட்சியை, மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்கிய பெருமை இரு கட்சிகளுக்கும் உண்டு.

2.7.2005ல் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதி ஆகியோர் இணைந்து இதே மதுரையில் சேது சமுத்திர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். ரூ.2427 கோடி மதிப்பிலான அத்திட்டம் தமிழகத்தை பொருளாதார வளர்ச்சிக்கு அழைத்து செல்லக்கூடியது.

பெரிய தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கக்கூடியது. இந்திய பொருளாதாரமே அதனால் வளர்ச்சியடையும். தமிழகத்தின் கனவு திட்டமான இதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், சேது சமுத்திர திட்டம் வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர், வழக்கு தொடர்ந்தவர் ஜெயலலிதா. பொருளாதார முன்னேற்றத்தை, புதிய தொழில்கள், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகாமல் தடுக்கிற ஒரே முதல்வர் சர்வாதிகாரி ஜெயலலிதாதான்.

மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்த போதுதான், ரூ.1553 கோடியில் சேலம் உருக்காலை திட்டம், ரூ.1800 கோடியில் மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம், நோக்கியா ஆலை, ஒரக்கடத்தில் வாகன சோதனை ஆய்வு மையம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், மேம்பாலங்கள், நான்குவழி, ஆறுவழி சாலைகள், சென்னை, தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களில் சரக்குகள் கையாள விரிவாக்கம், சென்னை அருகே கடல்சார் பல்கலைக்கழகம், திருவாரூரில் பல்கலைக்கழகம், சேலத்தில் மருத்துவமனை, திருச்சியில் இந்திய மேலாண்மை நிறுவனம், பொடா சட்டம் ரத்து, மத்திய அரசு கல்வி, வேலைவாய்ப்பில் பிற்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, தமிழகத்தை சேர்ந்த பல அமைச்சர்கள் இருந்தோம். அப்போதெல்லாம் பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ முதலமைச்சர் கருணாநிதியையோ, மற்ற அமைச்சர்களையோ விரும்பினால் மறு வினாடியே தொடர்புகொள்ள முடிந்தது. ஆனால் இன்று ஜெயலலிதாவை உடனே தொடர்பு கொள்ள முடியுமா? கலந்து பேசிட முடியுமா? அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியாது.

இதனால் தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் வரவில்லை. நோக்கியா போன்ற பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு போய்விட்டன. புதிய திட்டங்களை பேச முடியவில்லை.

புதிய மின்திட்டங்களுக்கு அனுமதி பெற முடியவில்லை. கருணாநிதி ஆட்சியிலிருந்த போது கட்டிய தலைமை செயலகத்தை, சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தனர். அதை ஜெயலலிதா சீர்குலைத்தார். மதுரவாயல் திட்டத்தை முடக்கினார். தமிழக பிரச்னைகள் குறித்து, 37 அதிமுக எம்பிக்கள் பேசியதுண்டா? அவர்களை ஜெயலலிதா தனது சுயநலத்திற்காகவே பயன்படுத்தினார். ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, தமிழக மீனவர் நலனை விட்டு கொடுத்தார். ஜல்லிக்கட்டை இந்த அரசு தாரை வார்த்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தை வரவிடாமல் செய்தார்.

முல்லைப்பெரியாறு அணையில் மத்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்பான மனுவை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்றார். ஐந்தாண்டுகளாக ஆட்சி செயலற்று முடங்கி, தமிழகம் இருளில் மூழ்கி இருக்கிறது. தொழில் வளர்ச்சியில் 12வது மாநிலமாகவும், உள்கட்டமைப்பில் 15வது இடத்திற்கும், ஒட்டுமொத்த வளர்ச்சியில் 20வது இடத்திற்கும், வேளாண் வளர்ச்சியில் 21வது இடத்திற்கும் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. ஆனால், ஊழலில் மட்டும் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.

திமுக ஆட்சி அமைந்ததும் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இல்லாத ஆட்சியை உருவாக்குவோம். போலீஸ் சுதந்திரமாக செயல்படும். எந்த தலையீடும் இருக்காது. கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் இருக்காது. கடந்த 5 ஆண்டு ஆட்சியில் 2,400 விவசாயிகளின் தற்கொலையை வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, தற்போது கடனை தள்ளுபடி செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

பால் விலையை லிட்டருக்கு ரூ.14 என உயர்த்தியவர் ஜெயலலிதா. ஆனால், அதை குறைப்பேன் என்கிறார். மின் கட்டணத்தை ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தியவர், 100 யூனிட் இலவசம் என்கிறார். 5 ஆண்டுகளில் ஒரு மெகாவாட் மின் உற்பத்தியாவது செய்த யோக்கியதை இவரிடம் இருக்கிறதா? மக்களை ஏமாற்ற இது ஜெயலலிதா போடும் கடைசி நேர நாடகம். தமிழகத்தில் ஊழல் சாம்ராஜ்யம் முடியட்டும். திமுகவின் நல்லாட்சி மலரட்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஆங்கிலத்தில் அசத்திய ஸ்டாலின் மதுரை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் 25 நிமிடம் பேசினார். அவரது பேச்சை அருகில் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறினர்.

அதை ராகுல் ஆர்வத்துடன் கூர்ந்து கேட்டார். இடை இடையே ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார். ‘இந்திராவின் பேரனே இந்தியாவின் இளம் தலைவரே வருக, வெல்க என ஸ்டாலின் பேசியதைக் கண்டு, தொண்டர்கள் ஆரவாரம் எழுப்ப, அருகிலிருந்தவரிடம் ஆங்கிலத்தில் அதனை கேட்டுணர்ந்த ராகுலும் கை தட்டி மகிழ்ந்தார்.


Related News

 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை – எடப்பாடி பழனிசாமி
 • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
 • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *