அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாமா?: புதுவை முதல்வரின் உத்தரவை ரத்து செய்த ஆளுநர்

ekuruvi-aiya8-X3

_93273711_5eb458e4-2b99-46c0-bca6-75c450585936இந்தியாவில் உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை விதித்து முதல்வர் நாராயணசாமி பிறப்பித்த உத்தரவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரத்து செய்துள்ளார்.

வாட்ஸ் ஆப்புக்கு தடை விதித்த நாரயணசாமி

கடந்த 2 ஆம் தேதியன்று அரசு ஊழியர்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

அதில், புதுச்சேரி அரசின் பல அதிகாரிகள் தங்களுடைய அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு தளமாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தி வருவதை அரசு அறிவதாகவும், இது அலுவகல ரகசியங்கள் சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட வழிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து அரசு அதிகாரிகள், கூட்டுறவு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்கள் ஆகியோர் அதிகாரப்பூர்வ வேலைகளுக்கு இது போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், அதிகாரப்பூர்வ வேலைகளுக்காக இதுபோன்ற சமூக ஊடகங்களுக்கு எந்தவொரு குழுவும் சேர்க்கப்படக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு உத்தரவை மீறி செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நல்லெண்ண நடவடிக்கைகள் மட்டுமின்றி அபராதமும் விதிக்கப்படும் என்றும்,ஒருவேளை அவசியம் இருக்கும் பட்சத்தில் தலைமை செயலாளரிடமிருந்து அனுமதி பெற்று சமூக வலைத்தளங்களில் அரசாங்க வேலைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில், புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பு வெளியான உடன். வாட்ஸ் ஆப்பில் பல்வேறு குழுக்களில் இணைந்திருந்த அரசு ஊழியர்கள் வேக வேகமாக வெளியேறினார்கள்.

முதல்வரின் உத்தரவை ரத்து செய்த கிரண் பேடி

முதல்வர் நாரயணசாமி பிறப்பித்த தடை உத்தரவு செல்லாது என அறிவித்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், கடந்த 2 ஆம் தேதி புதுச்சேரி அரசின் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகள், வழிகாட்டுமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது உத்தரவையும், முதலமைச்சர் வெளியிட்டுள்ள உத்தரவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் கிரண்பேடி வெளியிட்டுள்ளார்.

_93277310_c3d432e8-16c9-4704-a7fa-46626d36155eமுதல்வரின் உத்தரவை தான் ஏன் ரத்து செய்தேன் என்பதற்கும் ட்விட்டரில் அவர் விளக்கமளித்துள்ளார். “முதல்வரின் உத்தரவு, தொழில்நுட்பம் அல்லாத காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது புதுவையின் வளர்ச்சிக்கு நல்லதல்ல,” என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான ஆளுநர் கிரண் பேடி முன்னர் தில்லி சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளாராக நியமிக்கப்பட்டவர்.

ஆளுநரின் இந்த நடவடிக்கை, மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலக்குழு உறுப்பினர் முருகன் கருத்துத் தெரிவித்தார்.

Share This Post

Post Comment