3 ஆண்டுகளில் கணக்கில் காட்டாத ரூ.72 ஆயிரம் கோடி பறிமுதல்

ekuruvi-aiya8-X3

500rs3 ஆண்டுகளில் கணக்கில் காட்டாத சுமார் ரூ.72 ஆயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தகவல் அளித்து உள்ளது.

மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு அங்கமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து வருமான வரித்துறையினர் நாடு முழுவதிலும் நடத்திய அதிரடி சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத பணம் கோடிக்கணக்கில் சிக்கியது.

இந்த நிலையில், செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்வதற்கு மக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

2014-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான 3 ஆண்டுகளில் வருமான வரித்துறையினர் நாடு முழுவதிலும் 2,027 சோதனைகளை நடத்தி ரூ.71,941 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்து உள்ளனர்.

இதில், ரூ.69,051 கோடி ரொக்கமாகவும், ரூ.2,890 கோடி மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

2016-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி முதல் 2017-ம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ரூ.5 ஆயிரத்து 400 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ரூ.110 கோடி புதிய நோட்டுகள் ஆகும். இதே காலகட்டத்தில் 303.367 கிலோ அளவிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share This Post

Post Comment