சிறிலங்காவின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் சீனா

ekuruvi-aiya8-X3

Yi-Xianliang-cmஇனப்பிரச்சினை மற்றும் ஆட்சி விவகாரம் போன்ற எந்த விடயங்களிலும் இதுவரை கண்ணை மூடி அமைதி காக்கும் கோட்பாட்டைப் பின்பற்றி வந்த சீனா, தற்போது சிறிலங்காவின் உள்விவகாரங்கள் தொடர்பாகக் கருத்துக்களைக் கூறத் தொடங்கியுள்ளது.

ஜனவரி 2015ல் சீன ஆதரவுக் கோட்பாட்டைப் பின்பற்றிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து வெளியேறிய பின்னரே சீனாவின் சிறிலங்கா மீதான நிலைப்பாடு மாறியுள்ளது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சித் தோல்வியையடுத்து, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது மேற்குலகம் மற்றும் இந்தியா ஆகியவற்றுடனான நட்புறவைப் பலப்படுத்தி வரும் நிலையில் சீனா பாரியதொரு போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கைச்சாத்திடப்பட்ட சீன-சிறிலங்கா உடன்படிக்கைகள் தற்போதும் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில் சில திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. சீனா பல பில்லியன் டொலர்களை வழங்கியுள்ள நாடுகளின் அரசியல் விவகாரங்களில் பங்குபற்ற வேண்டும் என்பது சீனர்களின் அழுத்தமாக உள்ளது.

‘சிறிலங்கா விடயத்தில் சீனா அரசியல் ரீதியான தலையீட்டை மேற்கொள்ள விரும்புகிறது’ என வடக்கு மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இவ்வார ஆரம்பத்தில் சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங் யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்தை மேற்கொண்ட பின்னரே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். சீனத் தூதுவர் சிறிலங்காவிற்கான தனது அண்மைய பயணத்தின் போது கச்சதீவுக்கு அண்மையிலுள்ள நெடுந்தீவுக்குப் பயணம் செய்ததானது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.

வடக்கு மாகாணத்திற்குப் பயணம் செய்வதில் கவனம் செலுத்தும் மேற்குலக மற்றும் இந்திய இராஜதந்திரிகள் மற்றும் தலைவர்கள் போன்றே சீனத் தூதுவர் ஜி ஷியான்லியாங்கும் வடக்கிற்குப் பயணித்துள்ளமை அதிக கவனத்தைக் குவித்துள்ள ஒரு விடயமாகும். அதாவது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் மாகாணங்களுக்கான சுயாட்சிக் கோரிக்கையானது வலுப்பெற்றுள்ள நிலையில் சீனத் தூதுவரின் வடக்கிற்கான பயணமும் சிந்தனையைத் தோற்றுவித்துள்ளது.

ஆனால் மேற்குலக மற்றும் இந்தியத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் வடக்கிற்கான தமது பயணத்தின் போது தமது நோக்கம் என்ன என்பதைக் கூறுவார்கள். ஆனால் சீனத் தூதுவர் எவ்வித கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை. விக்னேஸ்வரனுடனான சந்திப்பின் போது, எவ்வித பிளவுகளும் இன்றி ஒன்றிணைந்த இலங்கையின் அரசியல் யாப்பைப் பின்பற்றுமாறு சீனத் தூதுவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் துரித பொருளாதார அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படாது எனவும் தூதுவர் தெரிவித்திருந்தார்.

தற்போது புதிதாக வரையப்படும் அரசியல் யாப்பானது யதார்த்தமானதாகவும், அரசியல் மற்றும் பொருளாதார நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருக்க வேண்டும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

ஆனால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேசங்களில் 150,000 வரையான சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு அமைதி மற்றும் சமாதானத்தை எட்டமுடியாது எனவும் விக்னேஸ்வரன், சீனத் தூதுவரிடம் தெரிவித்தார்.

சிறிலங்காவின் வடக்கிற்கான பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் சீனத் தூதுவர் ‘மூலோபாயக் கற்கைகளுக்கான பிராந்திய மையத்துடன்’ மிகவும் உறுதியான கருத்துக்களை முன்வைத்திருந்தார். சிறிலங்காவின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக சீனத் தூதுவர் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இன நல்லிணக்கம் என்பதற்கு அப்பால் பொருளாதார அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் ஏனெனில் சமாதானம் மற்றும் புரிந்துணர்வு போன்றன துரிதமான சமத்துவமான பொருளாதார அபிவிருத்தி மூலமே உத்தரவாதம் அளிக்கப்படுவதாகவும் சீனத் தூதுவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்குலக நாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை போன்றவற்றுடன் இணைந்து சிறிலங்காவால் மேற்கொள்ளப்பட்டுவரும் சர்ச்சைக்குரிய மீளிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக சீனா அவநம்பிக்கை கொண்டுள்ளது. சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீடு செய்வதை சீனத் தூதுவர் எதிர்த்துள்ளார். இவ்வாறான வெளித்தலையீடானது நாட்டில் இயல்புநிலை மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் தாமதத்தை ஏற்படுத்தும் என்பது சீனத் தூதுவரின் கருத்தாகும். இதற்கு எடுத்துக்காட்டாக முன்னாள் யூகோசிலோவியா மீதான அனைத்துலக குற்றவியல் விசாரணை 1993 தொடக்கம் எவ்வித தீர்வும் எட்டப்படாது தொடர்வதாக சீனத் தூதுவர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் கோட்பாடுகள் உறுதித்தன்மை அற்றவையாகக் காணப்படுவதாகவும் பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் அமைப்புக்கள் உள்ளதால் அதிகாரங்கள் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளதாகவும் இவை அனைத்தும் அபிவிருத்திக்கு இடையூறு விளைவிப்பதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

இந்திய-சிறிலங்கா பொருளாதார மற்றும் தொழினுட்ப கூட்டுறவு உடன்படிக்கைக்கு சீனா ஆதரவளிப்பதாகவும் ஏனெனில் சிறிலங்கா தொடர்ந்தும் அனைத்துலக மற்றும் பிராந்திய உடன்படிக்கைகளை மேற்கொண்டு தனது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளதாகவும் சீனத் தூதுவர் தெரிவித்தார்.

இவ்வாறான அபிவிருத்தியானது நாட்டில் இன மீளிணக்கத்திற்கு வழிவகுக்கும் எனவும் சீனத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

வழிமூலம் – New Indian express
ஆங்கிலத்தில் – P.K.Balachandran
மொழியாக்கம் – நித்தியபாரதி

Share This Post

Post Comment