எம் மக்களின் உயிர்த் தியாகங்களை வரலாற்றின் வெற்றிப் பக்கங்களாக மாற்றுவோம்! தமிழ் மக்கள் பேரவை

ekuruvi-aiya8-X3

mullivaikkal-01-720x480முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களின் தியாகங்களை வரலாற்றின் வெற்றிப் பக்கங்களாக மாற்றுவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. நாளை (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

‘தமிழர் வரலாற்றில் இத்தினம் என்றும் மறைக்கப்படவோ, மறக்கப்படவோ முடியாதது மட்டுமன்றி, இதனைத் தடுக்கும் சகல முனைப்புகளுக்கும் முகம் கொடுக்கும் காலமிது. எனவே, நாம் நிதானமாக செயற்பட்டு அவ்வாறான முயற்சிகளை முறியடித்து, வரலாற்றில் இந்நாள் வேரூன்றி பதிய, புத்திசாதூரியமாக செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நேர்ந்த இவ்வாறான அவலம், உலகில் எந்த ஒரு இனத்துக்கோ அல்லது மக்களுக்கோ எந்த வேளையிலும் நிகழாமல் இருக்க வழிகோலும், ஒரு ஞாபகார்த்த தினமாகவும் இருக்க வேண்டும். அந்தவகையில், நாளை முள்ளிவாய்க்காலில் வடக்கு முதல்வரின் தலைமையில் ஒன்றுகூடி, எம் மக்களின் தியாகங்களை வரலாற்றின் வெற்றிப் பக்கங்களாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

அத்தோடு, போரின் போது கொல்லப்பட்ட மக்கள் அனைவரதும் பெயர்கள் பதிக்கப்பட்ட ஒரு நிரந்தர நினைவுத் தூபியைக் கொண்ட நினைவு மண்டபத்தை அமைக்க, வட மாகாணசபை தனது சகல பலத்தையும் பிரயோகித்து உடனடியாக செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு, தனது தீர்வுத்திட்ட இறுதி வரைபை வெளியிட்டு அது இன்று சர்வதேச நாடுகளிடமும், ஐ.நாவிடமும் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கௌரவமான ஒரு நிரந்தரத் தீர்வு அவசியம். அத்தோடு, இறுதிப் போரின் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் அதற்கான சர்வதேச விசாரணையின் அவசியமும்.

இதேவேளை, தமிழ் மக்கள் பேரவையின உபகுழுக்களில் ஒன்றான, பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழுவை, முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18இல் எம்மக்களின் தியாகங்களின் மேல் தலை வணங்கி, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளோம். இவ் உபகுழுவினதும், இதில் இணைந்து பங்காற்ற இருக்கும் சர்வதேச சட்ட நிபுணர்களின் பெயர்களும் வெகுவிரைவில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு, பேரவை தனது அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment