கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க. தான் காரணம் – ஜெயலலிதா

ekuruvi-aiya8-X3

JJ_216எவ்வளவு கூச்சல் போட்டாலும் உண்மையை மறைக்க முடியாது என்றும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க. தான் காரணம் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில், தி.மு.க. உறுப்பினர் க.பொன்முடி (திருக்கோவிலூர் தொகுதி) பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

உறுப்பினர் க.பொன்முடி:- கவர்னர் உரை நீண்டகால திட்டங்கள், சமீபகால திட்டங்கள் என்று எதுவும் இல்லை. ஆசைகள் தான் சொல்லப்பட்டுள்ளது. 1991-ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நேரத்தில், தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் பேசும்போது, கச்சத்தீவை மீட்பேன் என்று பேசினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு தி.மு.க. உறுப்பினர்களுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் கருணாநிதி, முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

1974-ம் ஆண்டிலும், 1976-ம் ஆண்டிலும் அப்போதைய மத்திய அரசு இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டபோது, அவர்களுடைய தலைவர், அன்றைய முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்?. அதைத் தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா?. அதை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்தினாரா?. ஒன்றுமேயில்லையே.

தாரை வார்த்துவிட்டு, இத்தனை ஆண்டுகள் கழித்து, 1991-ல் நீங்கள் பேசினீர்களா இல்லையா என்றால், நான் பேசினேன், ஒரு மாநில அரசின் அதிகார வரம்பு எதுவரை உள்ளது என்பதை, உணர்ந்து, அறிந்து பேசினேன். மத்திய அரசு மூலமாக நான் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று பேசியிருக்கிறேனே தவிர, நான் ஒரு படையைத் திரட்டிக் கொண்டு, கச்சத் தீவை மீட்பேன் என்று பைத்தியக்கரத்தனமாக பேசவில்லை.

இன்றைக்கு இவ்வளவு பேசுகின்ற தி.மு.க. உறுப்பினர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது ஏன் பேசாமல் இருந்தார்கள்?. அன்றைய தி.மு.க. முதல்வர் ஏன் மவுனம் சாதித்தார்? ஏன் அதைக் கொடுக்க அனுமதித்தார்?.

உச்சநீதிமன்றம் மூலமாக நடவடிக்கை எடுத்தது நான். 2008-ம் ஆண்டு மத்திய அரசை அணுகி, அணுகி, எந்தப் பயனுமில்லை என்று தெரிந்த பிறகு, நான் தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது இங்கே முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. (இந்த நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றனர்)

எதிர்க்கட்சியினர் எவ்வளவுதான் கூச்சல் போட்டாலும், உண்மைகளை மறைக்க முடியாது.

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு தி.மு.க. தான் காரணம். அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான் காரணம். இன்று மீனவர்கள் படும் அல்லல்களுக்கெல்லாம், இன்னல்களுக்கெல்லாம் காரணம் தி.மு.க.தான், தி.மு.க.தான், தி.மு.க.தான். அதை எத்தனை கூச்சல் போட்டாலும் மறைக்க முடியாது.

2008-ம் ஆண்டு நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபொழுது அப்போது மத்திய அரசின் சார்பில் அதற்கு கவுன்டர் அபிடவிட் பைல் செய்யப்படவேண்டும். அதைப்போலவே உச்சநீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தமிழக அரசும் ஒரு நோட்டீஸ், கவுன்டர் அபிடவிட் அங்கே பைல் செய்யவேண்டும்.

அந்த நேரத்தில் கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா?. மத்திய அரசு என்ன அபிடவிட் பைல் செய்கின்றது என்பதைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் தமிழக அரசின் அபிடவிட் பைல் செய்யலாம் என்றார். இதுதான் கச்சத்தீவை மீட்கும் லட்சணமா?. அந்த உணர்வாவது தி.மு.க. வுக்கு இருக்கிறதா?.

அன்றையதினம், என்னுடைய வழக்கை தூக்கி எறிய வேண்டும். கச்சத்தீவை மீட்க முடியாது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடியாது. அது முடிந்து போன பிரச்சினை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கவுன்டர் அபிடவிட் பைல் செய்தது.

அதே ரீதியில்தான் தமிழக அரசும் அன்றையதினம் கவுன்டர் அபிடவிட் பைல் செய்தது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதற்கு மேலும் இதைப்பற்றி தி.மு.க.வினர் பேசுவதற்கு அருகதையில்லை என்பதை மீண்டும் அறுதியிட்டு உறுதியாக கூறுகிறேன்.

உண்மையாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.விற்கு இருந்தால் அவர்களாக நடவடிக்கை எடுக்கவில்லை. 2008-ம் ஆண்டு, நான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபொழுது அப்போது தமிழக அரசு தி.மு.க. தலைமையில் இருந்தது. தமிழக அரசு தன்னை அதே வழக்கில் இணைத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா?. செய்திருக்க வேண்டாமா?. அந்த வழக்கில் தன்னையும் தமிழக அரசு இணைத்துக்கொண்டு இருக்க வேண்டாமா?. ஏன் செய்யவில்லை.

அதன் பிறகு நான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2011-ம் ஆண்டில் இந்தச் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன் பிறகு வருவாய் துறை மூலமாக தமிழக அரசை இந்த வழக்கில் நான் இணைத்திருக்கிறேன். அந்தக் காரியத்தை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ஏன் செய்யவில்லை.

உறுப்பினர் க.பொன்முடி:- 1974-ல் கச்சத்தீவு கொடுத்தபோது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி முடிவு எடுத்தது. நான் சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் மட்டும் மத்திய அரசாங்கத்தை கேட்டு செய்கின்றீர்களா?.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அனைவரும் சம்மதித்து அந்த முடிவின்படிதான் கச்சத்தீவு தரை வார்க்கப்பட்டது என்றால் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று அர்த்தம். அப்படியானால் நான் ஏன் மீட்கவில்லை என்று என்னைப் பார்த்து ஏன் கேள்வி கேட்கிறீர்கள்.

உறுப்பினர் க.பொன்முடி:- தயவு செய்து உங்களைப் பார்த்து நான் ஏன் மீட்கவில்லை என்று கேட்கவில்லை. ஆனால், 1991-ல் இருந்து இதுவரை உங்கள் வாதப்படி 6 முறை முதல்-அமைச்சராக இருந்த நீங்கள் அதற்காக….?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- 6-வது முறையாக நான் முதல்-அமைச்சராக ஆகியிருப்பது உண்மைதான். முதல்-அமைச்சரான நாள் முதல் 1991 முதல் இன்று வரை எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கச்சத்தீவை மீட்பதற்கு என்னால் முடிந்த நடவடிக்கைகளை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வகையில் நான் செய்து கொண்டுதான் இருக்கிறேன். நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் ஒரே ஒரு ஆண்டுதான் அ.தி.மு.க. மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்தது. அந்த நேரத்தில் தமிழகத்தின் சார்பில் நாங்கள் வைத்த எந்தக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கவில்லை என்பதால்தான் அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.

அந்த ஒரு ஆண்டை தவிர, மற்ற அனைத்து ஆண்டுகளிலும் மத்தியிலே காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி ஆனாலும் சரி, பா.ஜ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி ஆனாலும் சரி, தி.மு.க. அதிலே அங்கம் வகித்தது. அப்போது நீங்கள் உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களுடைய தலைவர் இங்கேயும் ஆட்சியில் இருந்தார், மத்தியிலும் ஆட்சியில் இருந்தார்.

அப்போது நான் சொல்வதைத்தான் பாரதப் பிரதமர் கேட்கிறார், என்னுடைய ஆலோசனைப்படிதான் பாரதப் பிரதமரே செயல்படுகிறார் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டு உங்கள் தலைவர், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியும் அப்போது ஏன் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, கச்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி அத்தனை ஆண்டுகள் தூங்கிவிட்டு, இப்பொழுது திடீரென்று விழித்துக் கொண்டு சட்டமன்றத்திற்கு வந்து, நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று என்னைப் பார்த்துக் கேட்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

(அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச, அதன்பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது பேச்சை தொடர்ந்தார்)

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, 29-6-1974 அன்று செய்தியாளர்கள் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியிடம், ‘கச்சத் தீவை பிரதமர் இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் அறிவித்துள்ளாரே, உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டதற்கு, அதுபற்றி நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்று பதில் கூறியுள்ளார் கருணாநிதி.

வழக்குத் தொடர முடியும் என்றும், வழக்குத் தொடரப்படும் என்றும், தமிழக மீனவர் பிரச்சினையில் நேரடி தொடர்பில்லாத வாஜ்பாய் அறிவித்த பின்னரும், அதுபற்றி எந்த அக்கறையும் காட்டாமல் தமிழக மீனவர்களுக்கு துரோகம் இழைத்தவர்தான் கருணாநிதி என்பதை மீண்டும் கூறுகிறேன். இதைப்பற்றி விவரமாகத் தெரியாத உறுப்பினர்களுக்காக, புதிய உறுப்பினர்களுக்காக சில விவரங்களை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

ஆர்ப்பாட்டம் நடத்துவது, போராட்டம் நடத்துவது, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவது, பிரதமருக்கு கடிதங்கள் எழுதுவது, இதெல்லாம் ஓரளவுக்குத்தான். அதற்கு எந்தப் பலனுமில்லை. நானும் இவற்றையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். எந்தப் பலனுமில்லை என்ற பிறகுதான், நீதிமன்றத்திற்குச் செல்வதுதான் ஒரேவழி என்று உச்சநீதிமன்றத்திற்குச் சென்றேன். ஏனென்றால் இதற்கு ஒரு முன்மாதிரி இருக்கிறது.

1960-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. அன்றைய மத்திய அரசு பெருபாரி என்னும் பகுதியை அன்றைய கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்க்க வேண்டும் என்று விரும்பியது. இப்போது, அது பங்களாதேஷ். அன்றையதினம் அது கிழக்கு பாகிஸ்தான். அப்போது இதுபற்றி ஜனாதிபதி கருத்துக் கேட்டதற்கு உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்தது.

பெருபாரியை கிழக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏன் செல்லாது, ஏனென்றால், இந்தியாவின் ஒரு பகுதியை வேறு நாட்டிற்கு, அயல் நாட்டிற்கு தாரை வார்க்க வேண்டும் என்றால், பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஒரு அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும், ஒரு ‘கான்ஸ்டிடியூஷனல் அமென்மண்ட்’ கொண்டுவர வேண்டும். அந்த ‘அமென்மண்டை’ கொண்டு வந்து இரு பாராளுமன்ற அவைகளும் அதை நிறைவேற்றிய பிறகுதான் இந்தியாவின் எந்தப் பகுதியையும் வேறொரு நாட்டிற்கு தாரை வார்க்க முடியும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Share This Post

Post Comment