சிறுவாணி ஆற்றில் அணை கட்ட கேரளாவை அனுமதிக்கக்கூடாது – தீர்மானம் நிறைவேறியது

ekuruvi-aiya8-X3

JJ_1208சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு உள்ளது. இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
 
சிறுவாணி நதி, அட்டப்பாடி பள்ளத்தாக்கில், கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி அம்மாநிலத்திற்குள்ளேயே ஓடி, பவானி ஆற்றுடன் கேரள எல்லைக்குள்ளேயே சேருகின்ற ஒரு நதியாகும். இந்த ஆறு, பன்மாநில நதியான காவிரி நதியின் துணை உப நதியாகும். காவிரி நடுவர் மன்றத்தில், கேரள அரசு, பவானிப்படுகையில், 27 டி.எம்.சி. அடி நீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கோரியது. அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக 4.5 டி.எம்.சி. அடி நீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக்கோரியது. காவிரி நடுவர் மன்றம், அதன் 5.2.2007-ம் நாளிட்ட இறுதி ஆணையில், கேரள பவானி படுகைக்கென மொத்தம் 6 டி.எம்.சி. அடி நீரை ஒதுக்கீடு செய்தது. இதில், அட்டப்பாடி பாசன உபயோகத்திற்காக 2.87 டி.எம்.சி. அடி நீர் ஒதுக்கீடு செய்தது.
காவிரி நடுவர் மன்ற ஆணையை எதிர்த்து கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களை 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தன. 1956-ம் ஆண்டு பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் பிரிவு 5(3)-ன் கீழ் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு விளக்கங்கள் கோரும் மனுவினை காவிரி நடுவர் மன்றத்தில் 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தது. பின்னர், 5.5.2007-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தது.
 
இவ்விரு மனுக்களிலும் 2-வது போக பாசன பரப்பையும் மற்றும் அதற்குரிய நீரை ஒதுக்கீடு செய்ததை மறுபரிசீலனை செய்து தொன்று தொட்டு பாசனம் மேற்கொண்டு வரும் பகுதிகளில் இரண்டாம் போக நன்செய் பயிரை அனுமதித்து அதற்குரிய நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென்றும், கர்நாடகாவிற்கும், கேரளாவிற்கும் பாசனம் செய்வதற்காக பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர்த்தேவையை குறைக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.
அதே தருணத்தில், 1974-க்கு முன்னர் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பாசனப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த இரண்டாம் போக பாசனப் பரப்பை அனுமதித்து அதற்குரிய நீரை ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
ஜூன் 2012-ல் அட்டப்பாடி பாசனத்திட்டத்திற்காக கேரள அரசு அணை ஒன்று கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து, நான் அன்றைய பிரதமருக்கு 21.6.2012-ம் நாளிட்டு அனுப்பிய கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கங்கள் கோரும் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரையிலும், நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையிலும், கேரள அரசு காத்திருந்து அவைகளில் முடிவு தெரியும் வரையில் எந்த ஒரு திட்டத்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என தெரிவித்து,
பிரதமர் இப்பிரச்சினையில் தலையிட்டு, கேரள அரசு, கட்ட உத்தேசித்துள்ள அட்டப்பாடி பாசனத்திட்டம் அல்லது வேறு எந்த ஒரு திட்டத்தையும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கட்ட வேண்டாம் என கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டேன். மேலும், மத்திய நீர் வளக்குழுமம் கேரள அரசின் அணை கட்டும் திட்டத்திற்கு எந்த ஒரு தொழில் நுட்ப அனுமதியும் வழங்கக்கூடாது எனவும் அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டேன்.
 
இந்நிலையில், கேரள அரசு, தன்னிச்சையாக அட்டப்பாடி பள்ளத்தாக்குத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்காக, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவிடம் இடம் நிலையான ஆய்வு வரம்புகளை அளிக்க கேட்டுக்கொண்டது.
கடந்த மார்ச் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற்ற 92-வது கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இக்குழு, தமிழ்நாடு அரசின் கருத்தினைப் பெறுமாறும், தமிழ்நாடு அரசு அதன் கருத்தினை அளித்த பின் தான், கேரள அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முடிவு எடுத்தது.
 
தமிழ்நாடு அரசுக்கு 10.5.2016 அன்று கிடைக்கப்பெற்ற கேரள அரசின் கடிதம் பரிசீலனையில் இருந்த போதே, கேரள அரசு, தமிழ்நாடு அரசின் கருத்தினை பெறாமலேயே, தன்னிச்சையாக இத்திட்டத்திற்கான பரிந்துரைக்காக மீண்டும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவினை அணுகியது.
கடந்த ஆகஸ்டு மாதம் 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற்ற 96-வது கூட்டத்தில், ஒரு பொருள் நிரலாக சேர்க்கப்படாமல், ஒரு கூடுதல் பொருள் நிரலாக இது பரிசீலிக்கப்பட்டு, கேரள அரசு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு செய்வதற்கான, நிலையான ஆய்வு வரம்புகளை வழங்க பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இக்குழு தமிழ்நாட்டின் கருத்தினைப்பெறாமல் முடிவெடுத்துள்ளது என்பதைத் தெரிவித்தும், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு இதன் தொடர்பாக கடிதங்கள் ஏதும் வரவில்லை என்பதை எடுத்துரைத்தும், அவ்வாறு கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பதாக இக்குழுவின் நடவடிக்கை குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, உண்மைக்கு மாறானதாகும் என்றும் நான் 27.8.2016 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளேன்.
 
மேலும், இப்பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, வல்லுநர் மதிப்பீட்டுக்குழு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கு அளித்த பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெற மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதனைச் சார்ந்த முகமைகளுக்கு அறிவுரை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளேன்.
காவிரிப்படுகையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும், கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் நீர் ஆதார அமைச்சகம் ஆகியன அனுமதி அளிக்கக்கூடாது எனவும், நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இந்த சூழ்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு 96-வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் வழங்க அளித்த பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், காவிரிப்படுகையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும் கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் மத்திய அரசை கேட்டுக்கொள்ள பின் வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.
 
“சிறுவாணி நதி, அட்டப்பாடி பள்ளத்தாக்கில், கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி அம்மாநிலத்திற்குள்ளேயே ஓடி, பவானி ஆற்றுடன் கேரள எல்லைக்குள்ளேயே சேருகின்ற ஒரு நதி. இந்த ஆறு, பன்மாநில நதியான காவிரி நதியின் துணை உப நதியாகும். எனவே தான், காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையில் சிறுவாணி நதி, பவானி ஆற்றுப்படுகை ஆகியவற்றில் கிடைக்கப்பெறும் நீரையும் கணக்கில் கொண்டு மாநிலங்களுக்கிடையே காவிரி நதிநீர் பங்கீட்டு அளவைப்பற்றி குறிப்பிட்டுள்ளது.
2012-ம் ஆண்டு ஜூன் மாதம் அட்டப்பாடி பாசனத் திட்டத்திற்காக கேரள அரசு அணை ஒன்று கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அன்றைய பிரதமருக்கு 21.6.2012 அன்று கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மற்றும் காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கங்கள் கோரும் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரையிலும், நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையிலும், கேரள அரசு எந்த ஒரு திட்டத்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது என கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டதுடன், மத்திய நீர் வளக்குழுமம் எந்த ஒரு தொழில் நுட்ப அனுமதியும் வழங்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
 
அதைத் தொடர்ந்து, தமிழக அரசால் இது குறித்து மத்திய அரசுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. 19.9.2013 அன்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய நீர் ஆதார அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவினைப்பெற்ற பின்னர், காவிரி நடுவர் மன்றத்தின் இசைவைப் பெறும்படி கேரள அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது என தெரிவித்தது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக்குழு 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற்ற 92-வது கூட்டத்தில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு கேட்டுக் கொண்ட கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசின் கருத்தினை பெறுமாறும், தமிழ்நாடு அரசின் கருத்து பெறப்பட்ட பின் தான், கேரள அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் முடிவு எடுத்தது.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழு 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 11 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற்ற 96-வது கூட்டத்தில் கேரள அரசின் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு செய்வதற்கான நிலையான ஆய்வு வரம்புகளுக்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
மத்திய நீர் ஆதார அமைச்சகத்தின் 19.9.2013 நாளிட்ட கடிதத்திற்கும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக்குழுவின் மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெற்ற கூட்ட முடிவிற்கும் முரணானதாக இந்த பரிந்துரை உள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழு கூடுதல் பொருள் நிரலாக இந்தப் பொருளை எடுத்துக் கொண்டு அவசர கதியில் ஒப்புதல் வழங்கியுள்ளது வருத்தத்திற்கு உரியது.
 
இந்த கூட்ட நடவடிக்கை குறிப்பில், மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசுக்கு பல கடிதங்கள் அனுப்பியும், தமிழ்நாடு அரசின் பதில் கிடைக்கப் பெறவில்லை என உண்மைக்கு மாறாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு எதிராக அவசர கதியில் இந்தக் குழுவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என இம்மாமன்றம் கருதுகிறது.
மத்திய நீர் ஆதார அமைச்சகத்தின் 19.9.2013-ம் நாளிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளபடியும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக்குழுவின் 92-வது கூட்டத்தில் தெரிவித்துள்ளபடியும், தமிழ்நாடு அரசு மற்றும் காவிரி நடுவர் மன்றத்தின் இசைவு பெறாத நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் 96-வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கான பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என இந்த மாமன்றம் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
 
மேலும், காவிரிப்படுகையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும், மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.”
இந்த தீர்மானத்தை இம்மாமன்றம் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களையும், மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாகக் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
 
அதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தை வரவேற்று அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கர், எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கர்ணாஸ் ஆகியோர் பேசினர். இறுதியாக சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்து, பேசினார்.
இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Share This Post

Post Comment