கர்நாடகம், தமிழகத்தில் யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது – கருணாநிதி

ekuruvi-aiya8-X3

karunanithiதமிழர்கள் தாக்கப்படும் செய்தி வருத்தம் தருகிறது என்றும், கர்நாடகம், தமிழகத்தில் யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கேள்வி:– பரம்பிக்குளம் அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதாக தகவல் வருகிறதே?

பதில்:– பெங்களூருவில் சந்தோஷ் என்ற இளைஞர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அது போலவே கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் தமிழர்கள் தாக்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. அந்தச் செய்திகளைப் படித்துவிட்டு தமிழ்நாட்டிலும் பரவலாக இப்படிப்பட்ட தாக்குதல் நடைபெறுவதாக வருகின்ற செய்திகள் பெரிதும் வருத்தத்தைத் தருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் கர்நாடகத்தில் நடைபெற்றாலும், தமிழகத்தில் நடைபெற்றாலும் அது தேவையற்றவை என்பது தான் என்னுடைய கருத்து. இனிமேலாவது அப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்தில் உள்ள அணைகள் அனைத்திலும் நாற்பது கோடி ரூபாய் செலவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பராமரிப்புப் பணிகளைப் பார்வையிட சென்ற, சென்னை, பொள்ளாச்சியிலிருந்து பொதுப்பணித் துறையின் 12 அதிகாரிகள் 10–9–2016 அன்று பரம்பிக்குளம் பகுதிக்குச் சென்றுள்ளனர். பரம்பிக்குளம் அணைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில், தமிழக அதிகாரிகள் சென்ற வாகனங்களை, பரம்பிக்குளம் மாவட்ட வன அலுவலர் ரஞ்சித்குமார் தலைமையிலான கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். எனவே தமிழக அதிகாரிகள் தமிழகம் திரும்பியிருக்கிறார்கள்.

ஏற்கனவே பல முறை தமிழக அதிகாரிகளை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததுடன், திருப்பி அனுப்பியும் இருக்கிறார்கள். தமிழகப் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியையும் கேரள வனத்துறையினர் உடைத்திருக்கிறார்கள். தொடர்ந்து நடைபெற்று வரும் இப்படிப்பட்ட அத்துமீறல் சம்பவங்களைத் தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இனியாவது தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடமும், கேரள அரசிடமும் தொடர்பு கொண்டு, இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுத்து பரம்பிக்குளம்–ஆழியாறு ஒப்பந்தத்தைப் பாதுகாத்திட வேண்டும்.

கேள்வி:– காவிரிப்பிரச்சினையில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி கர்நாடக அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறாரே?

பதில்:–மத்திய அரசிலே அங்கம் வகிக்கும் மந்திரிகள், ‘‘இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்வேன்; மக்களிடத்தில் வேறுபாடு காட்ட மாட்டேன்’’ என்று பதவிப்பிரமாணம் எடுத்துப்பணி புரிவதால்; இதுபோன்ற பிரச்சினைகளில் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக நடுநிலையோடு நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். அவர் தெரிவித்து இருக்கும் கருத்து சரியல்ல; பாரபட்சமானவை என்பதால் கண்டனத்திற்குரிய கருத்துகளாகும்.

அனைத்துக்கட்சி கூட்டம்

கேள்வி:– காவிரிப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தும், ஜெயலலிதா கூட்டவில்லையே?

பதில்:– 28–7–1998 அன்று பிரதமராக இருந்த வாஜ்பாய், காவிரிப்பிரச்சினையில் நடுவர் மன்ற இடைக் காலத்தீர்ப்பினை நடைமுறைப்படுத்துவது பற்றிப் பேசுவதற்காக தமிழக முதல்–அமைச்சர் என்ற முறையில் டெல்லிக்கு நான் வர வேண்டுமென்று எழுதியிருந்தார். ஒருவார காலம் தான் இடைவெளி இருந்தது. இருந்தாலும் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி, அவர்களின் கருத்துகளைக் கேட்டபோது, மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் நான் டெல்லிக்குப் போகலாம் என்று கூறிய நேரத்தில், அந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மட்டும் போகக்கூடாது என்று கூறியதும் நினைவிற் கொள்ளத்தக்கது.

ஜனநாயகம்– சகிப்புத்தன்மை– எதிர்க்கட்சிகளை மதித்தல்– மாற்றுக் கருத்துகளைச் செவிமடுத்தல்– கலந்தாலோசனை– அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதெல்லாம் அ.தி.மு.க. அகராதியில் இடம் பெறாதவை.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment