
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாமி தரிசனம் செய்து விட்டு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ரூ. 70-க்கு 4 லட்டுகள் என்ற சலுகை விலையில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.
லட்டுகள் டோக்கன் மூலம் வழங்கப்படுவதால் எப்பொழுதும் நீண்ட வரிசையில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் பக்தர்கள் சிலர் வரிசையில் நிற்க சிரமப்பட்டு லட்டு வாங்குவதை தவிர்த்து விடுவர். ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபு, மதுரையை சேர்ந்த செந்தில் குமார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நாகார்ஜுனா, தெலுங்கானாவை சேர்ந்த ரமேஷ் மற்றும் பெங்களூரை சேர்ந்த சுப்பிரமணியம் ஆகியோர் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
இவர்கள் 5 பேரும் வரிசையில் நின்று ரூ.70-க்கு சலுகை விலையில் 4 லட்டுகளை வாங்கி, அதனை கோவிலுக்கு வெளியே பக்தர்களிடம் ஒரு லட்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்க தொடங்கினர். பின்னர் அவர்கள் கோவிலில் உள்ள தர்ம சத்திரங்களில் தங்கி, அன்னதானத்தில் சாப்பிட்டுக்கொண்டு லட்டு வாங்கி விற்பதையே தங்களது தொழிலாக்கி கொண்டனர்.
அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு அழைத்து விசாரித்தபோது இது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 லட்டு டோக்கன்களும், ரூ.10 ஆயிரத்து 520-ம் பறிமுதல் செய்யப்பட்டது.