கனமழையால் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது

ekuruvi-aiya8-X3

Mumbai_mazhaiமும்பையில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. மும்பை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று மதியம் வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இடை இடையே மழையின் தீவிரம் குறைந்து தூறல் போட்டது. ஆனாலும் மழை விட்டபாடில்லை.

இதனால் மும்பை நகரை மழை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது.

கிழக்கு மற்றும் மேற்கு விரைவு சாலையிலும் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியது. எனவே மேற்கு விரைவு சாலையில் வாகனங்கள் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் இடுப்பு அளவிற்கு மேல் தேங்கியது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் 30–க்கும் அதிகமான பெஸ்ட் பஸ்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்பட்டன. மேலும் மழை வெள்ளத்தில் பஸ் மற்றும் வாகனங்கள் ஆங்காங்கே சிக்கி கொண்டன.

மும்பை போக்குவரத்தின் உயிர் நாடியாக விளங்கும் மின்சார ரெயில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. சயான், மஸ்ஜித் ரெயில் நிலையப்பகுதியில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. தண்டவாளம் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியதால் சி.எஸ்.டி. – தானே இடையே ஸ்லோ ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டது. மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றன. மும்பை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தன. மேலும் துறைமுக வழித்தடத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் ரெயில்கள் தாமதமாகவே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

மும்பையில் பெய்த பலத்த மழைக்கு விமானமும் தப்பவில்லை. உள்நாட்டு, பன்னாட்டு விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் சாலை, ரெயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் நேற்று மும்பையில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share This Post

Post Comment