மீனவ கிராமங்களில் கவர்னர் நேரில் ஆய்வு: பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல்

ekuruvi-aiya8-X3

tn_governorதமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி பதவி ஏற்றார்.

தமிழ்நாட்டில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக அவர் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல்படுத்தினார்.

சமீபத்தில் கோவைக்கு சென்ற கவர்னர் பன்வாரிலால் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டார். பிறகு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி கவர்னர் மூலம் தமிழக அரசியலில் குறுக்கீடு செய்வதாக கண்டனம் தெரிவித்தனர்.

என்றாலும் கவர்னர் தனது ஆய்வுப்பணிகளை நிறுத்தப் போவதில்லை என்று அறிவித்தார். அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நேரடி ஆய்வு செய்வேன் என்று கூறினார்.

அதன்படி நேற்று அவர் நெல்லை மாவட்டம் சென்றார். அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். பஸ் நிலையத்தில் தூய்மை பணி செய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடி கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அதன் பின்பு ஒக்கி புயலால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டு கடும் சேதத்தை சந்தித்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்றிரவு சென்றார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அவர் தங்கினார்.

இன்று காலை அவர் ஒக்கி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடற்கரை கிராமங்களுக்கு சென்றார். கவர்னரின் பயணத்திட்டத்தில் இடம் பெறாத இந்த நிகழ்ச்சிகளால் அதிகாரிகள் திணறினார்கள். அதைப்பற்றி கவலைப்படாத கவர்னர், குளச்சல் கடற்கரை கிராமத்திற்கு சென்றார்.

குளச்சலில் உள்ள ஒரு மண்டபத்தில் திரண்டிருந்த மீனவர்கள், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மீனவ அமைப்பினர் மற்றும் குளச்சல் ஆலய பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பாதிரியார் எட்வின் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்கள் குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளிக்காற்றில் சிக்கி, மாயமாகி விட்டதாகவும் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

மீனவர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை நேரில் பார்த்தேன். மீனவ கிராமங்களில் காணப்படும் சோகம் மனதை உலுக்குகிறது. மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு என்னுடன் அதிகாரிகளும் வந்துள்ளனர்.

அவர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். மீனவ அமைப்புகள் கொடுத்த கோரிக்கையை உரியவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்பு குளச்சல் 1-ம் நம்பர் பகுதியில் புயலில் சிக்கி பலியான மீனவர் டேவிட்சன் வீட்டிற்கு சென்றார். வீட்டின் உள் அறைக்கு சென்ற அவர் அங்கிருந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கவர்னரை கண்டதும் டேவிட்சனின் உறவினர்களும், அங்கு கூடி இருந்த மீனவப் பெண்களும் கதறி அழுதனர். கடலில் மாயமான தங்கள் உறவினர்களை கண்டுபிடிக்க உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறினார்கள்.

கவர்னர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். பின்னர் டேவிட்சனின் மனைவி மற்றும் குழந்தைகளையும் ஆறுதல்படுத்தினார்.

குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மட்டுமின்றி விவசாயிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஏராளமான பயிர்கள் நாசமாகிவிட்டது. ரப்பர் மரங்களும் விழுந்து விட்டன.

எனவே அந்த பாதிப்புகளுக்குள்ளான பகுதிகளுக்கும் செல்ல கவர்னர் பன்வாரிலால் முடிவு செய்தார். அதன்படி தோவாளைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் வழியில் பூதபாண்டி அருகே திடீரென அவரது வாகனம் வேறு பாதைக்கு சென்றது.

தெரினங்கோப்பு என்ற ஊருக்கு சென்ற அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களுக்கும் ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு அவர் தோவாளை, பகுதியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அங்கிருந்த மக்களிடமும் குறை கேட்டார்.

தொடர்ந்து மாலையில் அவர், குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் நடக்கும் ஆய்வு கூட்டத்திலும் பங்கேற்கிறார். கவர்னரின் இந்த அதிரடி ஆய்வும், குறை கேட்பு நிகழ்ச்சியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கும், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இன்று பிற்பகல் அவர், கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள ராமாயண கண்காட்சி கூடத்தையும்,கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தையும் பார்வையிடுகிறார்.

மாலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்படுகிறார்.

Share This Post

Post Comment