துப்பாக்கியால் சுட்டதில் ராமேசுவரம் மீனவர்கள் 2 பேர் காயம்: கடலோர காவல்படை மீது வழக்கு

ekuruvi-aiya8-X3

rameswaramராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ராணி அபாதா-77 என்ற கப்பல் அந்த பகுதியில் ரோந்து வந்தது.

கடலோர காவல்படை கப்பலில் இருந்து 7 வீரர்கள் இறங்கி, ஒரு ரப்பர் படகு மூலம் அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை விரட்டியடித்ததோடு, மரிய ஜெபமாலை என்பவரது படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதில் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ் (வயது 37), ஜான்சன் (32) ஆகிய மீனவர்கள் மீது துப்பாக்கி குண்டு உரசிச் சென்றதில் அவர்கள் காயமடைந்தனர். மேலும் படகில் இருந்த குவிட்டோ (38), சாண்ட்ரோ (38), நிசாந்த் (21), ஜாக்சன் (32) ஆகிய மீனவர்களையும், கடலோர காவல் படையினர் தாக்கி விட்டுச் சென்றனர்.

தாக்கப்பட்ட மீனவர்கள் நேற்று காலை ராமேசுவரம் திரும்பினர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மீன்துறை உதவி இயக்குனர் ஐசக் ஜெயக்குமார், கியூ பிரிவு போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் உள்பட போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட படகை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது படகு எவ்வித சேதமும் அடையவில்லை என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மீனவர் பிச்சை மண்டபம் கடலோர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடுக்கடலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர் தப்பி வந்த ராமேசுவரம் மீனவர்கள் சார்பில் குவிட்டோ என்ற மீனவர் கூறியதாவது:-

நமது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நாங்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது அந்த பகுதியில் வந்த இந்திய கடலோர காவல்படையினர் எங்கள் படகை நோக்கி வேகமாக வந்தனர். பின்பு சிறிய ரோந்து படகில் வந்த கடலோர காவல் படையினர் 7 பேர் எங்கள் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்பு எங்கள் படகில் இறங்கி, எங்கள் அனைவரையும் தாக்கி, தலைகீழாக நிற்க வைத்து எங்களை கொடூரமாக தாக்கினர். அப்போது எங்களை இந்தியில் பேச வேண்டும் என்றனர். தமிழில் பேசினால் அடிப்போம் என்று கூறினர்.

தமிழ் எங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இந்தியில் தான் பேச வேண்டும் என்று கூறியபடியே மீண்டும் தாக்கினர். மீனவர்களாகிய உங்களால் தான் எங்களுக்கு பிரச்சினை வருகிறது என்று கூறிய அவர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் 6 பேரையும் தாக்கி விட்டு ரோந்து கப்பலுக்கு திரும்பிச் சென்றனர்.

மீனவர்களை பாதுகாக்க வேண்டிய கடலோர காவல்படையினரே எங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த சம்பவத்தில் எங்கள் படகில் இருந்த 2 பேர் பலத்த காயமடைந்தனர். மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய கடலோர காவல்படையினர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ராமேசுவரத்தில் அனைத்து மீனவர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், சகாயம், எமரிட், சேசு உள்பட நிர்வாகிகள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், “இதுவரை இலங்கை கடற்படையினரால் மட்டுமே மீனவர்கள் தொல்லைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்போது இந்திய கடலோர காவல்படையினரே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து, இன்று (புதன்கிழமை) மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தம் செய்வது; நாளை (வியாழக்கிழமை) ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது” என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இளைஞரணி அமைப்பாளர் ஜெரோன்குமார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்து காயமடைந்த மீனவர்களை சந்தித்தனர். அவர்கள் கூறும்போது, “மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடலோர காவல்படையே இதுபோன்ற துப்பாக்கி சூட்டை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினர்.

Share This Post

Post Comment