எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் அதிருப்தி.. ஓபிஎஸ் அணியில் இணைவாரா?

Facebook Cover V02

Thopur_venkatacalamபெருந்துறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் இன்று நடைபெற்ற அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ஓபிஎஸ் அணிக்கு அவர் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அதனையடுத்து, தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். பிப்ரவரி 5ஆம் தேதி தனது முதல்வர் பதவியை அவர் திடீரென ராஜினாமா செய்ததும், முதல்வராக பொறுப்பேற்க சசிகலா காய் நகர்த்தினார்.

இதனையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த ஓபிஎஸ், சசிகலாவிற்கு எதிராக குரல் எழுப்பினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் கட்சி இரண்டாக பிளவு பட்டது. கூவத்தூரில் 122 எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர். ஓபிஎஸ் அணியில் பல எம்எல்ஏக்கள் இணைந்தனர். எம்பிக்களும் இணைந்து ஆதரவு தெரிவித்தனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதனைத் தொடர்ந்து, சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.

இதனிடையே அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், மூத்த நிர்வாகி பொன்னையன் உள்பட பலர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். இதுவரை பன்னீர்செல்வம் அணிக்கு அவர் உள்பட 12 எம்எல்ஏக்கள் ஆதரவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரின் ஆதரவும் உள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து அதிமுக எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் பங்கேற்கவில்லை.

பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வெங்கடாசலம் முன்னாள் அமைச்சர் ஆவார். மேலும் வெங்கடாசலம் ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனின் எதிர் அணியை சேர்ந்தவர். தற்போது செங்கோட்டையன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஓபிஎஸ் அணியில் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது, அனைவரும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்று எம்.எல்.ஏக்கள் சார்பாக தோப்பு வெங்கடாசலம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment