திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!

ekuruvi-aiya8-X3

thirumurugan-gandhi-arrestedமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, இளமாறன், அருண், டைசன் ஆகிய 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே மாதம் 21-ந்திகதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார்.

ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினாவில் நடந்து வந்தது. இந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. காவல் துறையின் அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் துறை கமி‌ஷனர் மே 28-ந்திகதி உத்தரவு பிறப்பித்தார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி திருமுருகன் உள்ளிட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் ஏ.செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் கமி‌ஷனர், புழல் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

கடந்த 13-ந்திகதி இந்த மனு மீதான விசாரணையின்போது 19-ந் திகதிக்கு (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

திருமுருகன்காந்தி, இளமாறன், அருண், டைசன் ஆகிய 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share This Post

Post Comment