திருமலை தடுப்பு முகாமில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்களா?

Facebook Cover V02

trinco-tourcher-cernterயுத்த காலத்தில் கடத்தப்பட்டு மற்றும் காணாமல் போன பலர் திருகோணமலையிலுள்ள தடுப்பு முகாமில் வதைக்கப்பட்டதாக கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டதோடு, அதற்கான ஆதாரமாக சில புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள 5 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பில், புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் பரபரபப்பு தகவலொன்றை குறிப்பிட்டுள்ளது.

அதாவது, குறித்த 11 பேரும் திருகோணமலையிலுள்ள கன்சைட் எனும் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை உள்ளிட்ட விபரங்களை, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருணாகொட அறிந்திருந்ததாக, புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் உள்ளிட்டோரின் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை, நேற்று (புதன்கிழமை) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதவான் லங்கா ஜயரத்னவிடம் புலனாய்வுத் துறையினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வசந்த கருணாகொடவை எதிர்வரும் தினங்களில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணை தொடர்பிலான பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா, மன்றில் அறிவித்துள்ளார்.

அத்தோடு, மாணவர்களின் கடத்தல் தொடர்பில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது சாட்சியமளித்த, 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் கன்சைட் தடுப்பு முகாமிற்கு அருகில் சேவையில் இருந்த லெப்டினண்ட் கொமாண்டர் வெலகெதரவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், குறித்த அச்சுறுத்தலை கடற்படையின் முக்கிய உறுப்பினர்களே விடுத்துள்ளதாகவும் மன்றின் கவனத்திற்கு நிஷாந்த டி சில்வா கொண்டுவந்தார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்கு சட்டமா அதிபர் தரப்பிலிந்து ஆலோசனை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அடுத்த வழக்கு விசாரணையில் சட்டமா அதிபர் தரப்பில் மன்றில் ஆஜராகுவதற்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை நியமிக்குமாறு சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த காலத்தில் நடந்தேறிய இவ்வாறான பல கடத்தல்களை, அப்போதைய பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோட்டாவின் பணிப்பின் பேரில் கடற்படையினரே முன்னெடுத்ததாக தொடர்ந்தும் பல சாட்சி விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அத்தோடு, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்கள், யுத்த பிரதேசங்களுக்கு மேற்கொண்ட விஜயங்களின் பின்னர், திருகோணமலையில் ஒரு வதை முகாம் இருந்ததாகவும், அங்கு பலர் வதைக்கப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனினும், இதனை பாதுகாப்பு தரப்பும் அரசாங்கமும் மறுத்து வந்திருந்தது. இந்நிலையில், கடற்படையினர், இராணுவ புலனாய்வு பிரிவினர் என்பவர்கள் மீது தொடர்ந்து பல குற்றங்கள் சுமத்தப்பட்டு வருகையில், கடந்த கால கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாட்டை, அப்போது பாதுகாப்பிற்கு பொறுப்பாகவிருந்தவர்கள் கொண்டுள்ளனர் என்பதில் மறுப்பதற்கில்லை.

Share This Post

Post Comment