
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. 3 அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக நேற்று எடப்பாடி அணியினர் கூடி கட்சி நிர்வாகிகளை நியமிக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களை சந்தித்து டி.டி.வி.தினகரன் ஆதரவு திரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூரில் வருகிற 14-ந்தேதி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதன் ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. சாமி மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.
கூட்டம் நடைபெற உள்ள மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் தற்போதுவரை போலீஸ் தரப்பில் எந்த தகவலும் இல்லை.
இந்த நிலையில் அ.தி.மு.க. அம்மா அணியின் நகர செயலாளர் சரவணன் மதுரை ஐகோர்ட்டில் இன்று அவசர மனு தாக்கல் செய்தார். அதில் மேலூரில் வருகிற 14-ந்தேதி தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளோம். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
எனவே பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
அப்போது மேலூர் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.