தமிழ் தேசிய மதம்

ekuruvi-aiya8-X3

14898142157_50aea20bc3_bவெளிநாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டு சிறிலங்காவுக்கு கடத்தி செல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரை சகல விசாரணைகளுக்கும் உட்படுத்தி முடிந்த காலப்பகுதியொன்றில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து பேசினாராம். அப்போது அந்த முக்கிய உறுப்பினரிடம் சில முக்கிய விடயங்களை பேசிவிட்டு -‘போர் முடிந்துள்ள தற்போதைய – அமைதியான – காலப்பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழர்களுக்கு அள்ளி வழங்கி அவர்களது மனதில் போர் குறித்த நினைவுகளையும் புலிகள் பற்றிய எண்ணத்தையும் முற்றாக துடைத்தெறியப்போகிறோம். இவற்றைவிட தமிழ் மக்களின் மனங்களில் லாவகமாக இடம்பிடிப்பதற்கு வேறு என்ன வழி” – என்று கோத்தபாய கேட்டாராம்.

அதற்கு சாதுவான புன்னகையோடு பதிலளித்த அந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் –

“மக்களின் மனங்களில் இடம்பிடிப்பதற்கு என்ன செய்வது என்பதை யோசிப்பதற்கு முதல், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். தமிழ் மக்களை பொறுத்தவரை, கோயில்கள் – காணிகள். இந்த இருவிடயங்களும் அவர்களும் மிகவும் முக்கியமானவை. உணர்வுபூர்வமானவை. இவற்றில் நீங்கள் கை வைத்தீர்களானால் அதற்கு பிறகு நீங்கள் எதை செய்தாலும் அவர்களின் மத்தியில் அவை எடுபடப்போவதில்லை” – என்று கூறினாராம்.

இந்த சம்பாஷணையில் உள்ள யதார்த்தத்தினை கோத்தபாய புரிந்தாரோ இல்லையோ, புலிகள் தங்களின் ஆட்சிக்காலம் முழுவதும் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

விடுதலைப்புலிகளது ஆட்சியின் எந்தக்காலப்பகுதியிலும் அவர்களது கட்டுப்பாட்டிலிருந்த மக்களின் வெறித்தனமாக மத நம்பிக்கை, அதன் வழி நீண்ட கோயில் கலாச்சாரங்கள், மத ரீதியான மூட நம்பிக்கைகள், அதன் வழியாக வீண் செய்யப்பட்ட பல லட்சக்கணக்கான பணம் என்பவற்றை அவர்களால் கட்டுப்படுத்தவே முடிந்திருக்கவில்லை. மாறாக, விடுதலைப்புலிகளின் தலைவரையே முருகனுக்கு உருவகித்து பாடல் பாடுமளவுக்குத்தான் சைவ சமயம் என்பது போராட்டத்தை சுற்றிவளைத்து வைத்திருந்தது. ஈழ விடுதலைப்போராட்டத்தில் இது வெளிப்படையாக தெரியும் விடயமாக இல்லாவிட்டாலும், அகவயமாக வியாபித்துக்கிடந்த உண்மை.

இன்னொரு விதத்தில் கூறப்போனால், உலகின் மிகப்பலம்வாய்ந்த மக்கள் இராணுவங்களில் ஒன்றாக பல்வேறு தரப்பினராலும் வியந்து போற்றப்பட்ட விடுதலைப்புலிகளினால்கூட தங்களது கட்டுப்பாட்டிலிருந்த – தீவிரமான மத நம்பிக்கையில் ஊறிப்போய் கிடந்த – மக்கள் கூட்டத்தின் விசர் கூத்துக்களை ஒருபோதும் நேர் சீரான வழிமுறைகளுக்குள் கொண்டுவரமுடியவில்லை.

அப்போதே அந்த நிலையென்றால், இப்போது?

போர் முடிந்து இன்னமும் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றே தெரியாத ஒரு மண்ணில் இன்றைக்கும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி கோயில் கும்பாபிஷேகம் நடத்துகின்ற ஒரு இனமாக திமிரோடு நிற்பதும் –

ஒரு இனத்தின் மிகப்பெரிய விடுதலைக்காக போராடிய அமைப்பின் போராளிகள் இன்னமும் சமூகத்தின் தீண்டப்படாதவர்களாக நடத்தப்படுகின்ற மண்ணில் அவர்களிலும் பார்க்க மேலான கடவுள் தமக்குள்ளார்கள் என்று அதே மண்ணில் காவடிகள் எடுக்கும் பக்திமான்கள் வாழ்வதும் –

தமிழர் தாயகத்தில் மாத்திரம்தான் சாத்தியமாகிக்கிடக்கிறது..

என்னைப்பொறுத்தவரை, ஈழத்திலுள்ள சைவ நம்பிக்கையும் அதற்காக எமது மக்கள் காண்பிக்கும் வெறித்தனமான பக்தியும் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் அட்டகாசங்களைவிட பயங்கரமானது. ஆனால், அந்த அரியண்டங்களிலிருந்து ஈழத்தின் மத நம்பிக்கை தனித்து தெரிவதற்கு காரணம், எம்மவர்கள் பிற மதங்களின் மீது ஆக்கிரமிப்பு செய்வதில்லை. பிற மதங்களின் மீது வன்முறைகளில் இறங்குவதில்லை. தங்களது வெறித்தனமான பக்தியை கலாச்சார அடையாளமாகவும் பண்பாட்டுக்கூறாகவும் காலம் காலமாக பேணிவருவதால் பெரியளவிலான வரலாற்று பாதகங்கள் எதுவும் நிகழவில்லை. வேறுவகையில் சொல்லப்போனால், ஈழத்திலுள்ள சமய நம்பிக்கை – பிற மதங்களை காயப்படுத்தாத – இராஜதந்திர ரீதியான பக்தியில் நிலைநிற்கிறது. அது எமது மக்களுக்குள் கலந்து கிடக்கும் வடிவமே வேறு.

இந்த மத நம்பிக்கையானது பன்னெடுங்காலமாக மக்களாலேயே வரைவிலக்கணப்படுத்தப்பட்டு ஊறிப்போய் கிடப்பதும் சமரசம் செய்யமுடியாத அகவயமான கூறுகளோடு பயணிப்பதும் எம்மினத்தில் அமிழ்ந்து கிடக்கும் அதிசயங்களில் ஒன்று.

மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் திட்டம் போடுவதுபோல இந்த சமய நம்பிக்கையின் வழியாக புதிதாக எதுவும் செய்துவிடவும் முடியாது. அதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராகவும் மாட்டார்கள்.

‘புதினம்’ இணையத்தளத்துக்காக அனிதா பிரதாப்பினை செவ்வி கண்ட பின்னர், அடுத்ததாக நான் பா.ஜ.க.வின் இல. கணேசனை செவ்வி கண்டிருந்தேன். அப்போது அவர், “விடுதலைப்புலிகள் மாத்திரம் தங்களது போராட்டத்தினை இந்து மத போராட்டமாக அறிவித்திருந்தால், பா.ஜ.க. எப்பவோ ஆதரவளித்திருக்கும்” என்றார். “அவரது கருத்து குறித்து என்ன நினைக்கிறீர்கள்” – என்று தமிழ்ச்செல்வன் அவர்களிடம் கேட்டபோது – அவர் வழக்கத்தைவிட அதிகமாக சிரித்தார்.

ஆக, தமிழர் தாயகம் இந்து மதத்தினை தங்களின் மீது திணிக்கப்படுகின்ற அடையாள அழிப்புக்கு எதிரான கருவியாக பயன்படுத்துவதற்கு நினைத்திருந்தால் அது எப்பவோ நடந்திருக்கும். அது அன்றைக்கும் நடக்கவில்லை. இன்றைக்கும் நடக்கவில்லை. என்றைக்கும் நடக்கப்போவதில்லை.

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தின் பலமே அதுதான்.

தமிழ் தேசியத்திலிருந்து எந்த மதத்தினை தூக்கி வெளியே போட்டாலும் அது போராட்டத்திற்கு எந்த பங்கத்தையும் ஏற்படுத்தாது.

ஆனால், சிங்கள தேசியத்திலிருந்து பௌத்தத்தினை தூக்கி வெளியில் போட்டுப்பாருங்கள். அவர்களது தேசியம் சிரிக்கத்தொடங்கிவிடும்.

இதை புரிந்துகொள்ளாத, மறவன்புலவு சச்சிதானந்தம் இப்போது மாட்டு இறைச்சியை menu கார்ட்டிலிருந்து அகற்றுவதற்கு மூலம் எங்களது சனங்களுக்கு தான் நினைத்தவாறு சாமத்திய வீடு செய்யலாம் என்று நினைப்பது படு முட்டாள்தனம்.

ப. தெய்வீகன்

Share This Post

Post Comment