தமிழக தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்

ekuruvi-aiya8-X3

tamilnaduதமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் அமைப்பான “பண்பாடு மக்கள் தொடர்பகம்” 234 தொகுதிகளிலும் கள ஆய்வு நடத்தி கருத்து கணிப்பு மேற்கொண்டது.

மார்ச் 29-ந்தேதி முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரை அதாவது நேற்று முன்தினம் வரை ஒரு மாதமாக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

அந்த கருத்து கணிப்பு முடிவுகள் இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

அதில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் எந்த கட்சி தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 39.40 சதவீதம் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 35.22 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணிக்கு 12.34 சதவீதம் பேரும், பா.ம.க.வுக்கு 4.72 சதவீதம் பேரும், பா.ஜ.க.வுக்கு 3.11 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 1.21 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எந்த கட்சி தலைமையில் ஆட்சி அமைவதை விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 37 சதவீதம் பேர் தி.மு.க.வையும், 32.9 சதவீதம் பேர் அ.தி.மு.க.வையும் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் அ.தி.மு.க.வை விட தி.மு.க.வை கூடுதலாக 4.1 சதவீதம் பேர் ஆதரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி அமைவதை விரும்புவதாக 16 சதவீதம் பேரும், பா.ம.க. தலைமையில் ஆட்சி அமையும் என்று 10 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்து கணிப்பு ஆய்வுப் படி தி.மு.க.வுக்கு 112 முதல் 124 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு 67 முதல் 90 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணிக்கு 5 முதல் 11 இடங்களில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும், பா.ம.க.வுக்கு 3 முதல் 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க. வுக்கு ஒன்று அல்லது 2 இடங்களில் வெற்றி கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளுக்கும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளில் மக்கள் அதிருப்தி தெரிவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதுபோல தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக எந்த கட்சியும் இல்லை என்று 65.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்க யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக 88 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாய்ப்பு இருப்பதாக 81 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மு.க.ஸ்டாலினுக்கு 77 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டாக்டர் அன்புமணிக்கு 35.58 சதவீதம் பேரும், விஜயகாந்துக்கு 30 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசையை 20.80 சதவீதம் பேரும், சீமானை 17.38 சதவீதம் பேரும், வாசனை 16.29 சதவீதம் பேரும், திருமாவளவனை 14.71 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர்.

கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் தி.மு.க. தேர்தல் அறிக்கை அதிக நம்பிக்கை ஏற்படுத்துவதாகவும் மக்கள் இந்த கருத்து கணிப்பில் கூறியுள்ளனர்.

சிறந்த தேர்தல் அறிக்கையில் பா.ம.க.வுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

Share This Post

Post Comment