களைகட்டும் தேர்தல் திருவிழா

Thunder Bay யில் இருந்து  Toronto  வரை  தெருவோரங்களில்  காளான்களாக  முளைக்கும் தேர்தல் பதாகைகள்  முன்னறிவிப்பது  ஒண்டாரியோ மாகாணத்தின் நகரசபை அல்லது  பிராந்திய நிர்வாகசபை உறுப்பினர்  தெரிவு  பற்றியதாகும். மாகாண  ரீதியாக பல  நகரங்களில்   நகரபிதா, பிராந்திய முதல்வர், நகரசபை  உறுப்பினர்கள், பிராந்திய நிர்வாக  சபை  உறுப்பினர்கள் மற்றும்  கல்விச்சபை  அறங்காவலர்கள்   போன்றோரை  தெரிவு  செய்யும்  நோக்கில்  இந்த தேர்தல்  நடைபெறுகிறது. முன்னெப்போதும்  இல்லாதபடி  டொரோண்டோ, மார்க்கம், மிசசாகா, வோன், ஏஜாக்ஸ், ஒட்டோவா நகர் உள்ளடங்கலாக ஆறு  நகரசபைகளில்  28 தமிழர்கள் போட்டியிடுகின்றார்கள்.

புதிய  வட்டாரங்கள்  புதிய  சோதனை

டொரோண்டோ  மாநகரசபை உறுப்பினர் எண்ணிக்கையை 25 ஆக  குறைப்பதில்  இருந்து வந்த  குழப்பநிலை  நீங்கிய பின்னர் பிரேரிக்கப்பட்டிருக்கும் 1,7,9,12,13,15,22ம்  வட்டாரங்களில்  தமது  நடப்பு  சகாவுக்கு  எதிராக  தேர்தலில்  போட்டியிட  நிர்ப்பந்திக்கப்பட்ட  நிலை  காணப்படுகிறது. இவர்களில்  பெரும்பாலானவர்கள் தமது  வட்டாரங்களில்  இருந்து வரும்  வாகன  நெரிசல் பிரச்சினைகள்  வீதி  திருத்த  வேலைகள்   பூங்கா  புனரமைப்பு  போன்ற அன்றாட பிரச்சினைகளை  முன்னிறுத்தியே பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

டொரோண்டோ மாநகரசபை  வட்டாரக்குறைப்பின்  பின்னதாக  Scarborough Agincourt கான  22ம்  வட்டாரத்தில்  Rob Ford  முதல்வராக  இருந்தபோது  துணை  முதல்வராக  இருந்த  Norm Kelly கும் இதே தொகுதியை   மத்திய  அரசாங்கத்தில்  மிக  நீண்டகாலம்  பிரதிநிதித்துவபடுத்திய  Jim Karygiannis  இடையில்  விமர்சனப்போக்கான  கடும் போட்டி  நிலவிவருகிறது. டுவிட்டரில்  Norm  Kelly  750000கும்  மேற்பட்ட  தொடர்பவர்களுடனும்  Jim தனக்கு  விடுக்கப்படும்  தொலைபேசி  அழைப்புகளுக்கு  அதிகபட்சம் 48 மணிநேரத்துக்குள்  பதில்  அழைப்பு  விடுக்க  கூடிய நிலையிலும் இருப்பது  இவர்களில்  இருவேறுபட்ட நிர்வாக  திறனை  காட்டுவதாக  அமைகிறது. 22ம் வட்டாரத்தில் நகரசபை  ரீதியாக  மக்கள்  என்ன  முடிவை  எடுப்பார்கள்  என்பது மிகுந்த  கேள்விக்குரியதாக  இருந்துவருகிறது.

25வது  வட்டாரத்தில்  நீதன்  ஷானின்  மீள் தெரிவு

Scarborough – Rouge Park  25ம் வட்டாரத்தில்  நம்மவர்  நீதன் ஷான்   போட்டியிடுவது  பெரும்பாலானோர்  அறிந்ததே. நம்மவர்  நீதன் மிக  நீண்ட  அரசியல்  பின்னணி  கொண்டவர்.  மார்க்கத்திலும் டொரோண்டோ  கல்விச்சபையிலும் அறங்காவலர் பதவிவகித்த  இவர் நடுத்தர வர்க்க மக்களுக்கு நன்மை பயக்கும் புதிய ஜனநாயக  கொள்கைகளில்  ஈர்ப்புடையவர். இதுவரை  டொரொண்டோ நகரையும் இலங்கையின்  வடமாகாண சபையையும்  தொடர்பாடல்  ரீதியாக இணைப்பதில் பெரும் பங்கு  நீதனேயே  சாரும். அத்துடன் வடமாகாண  உற்பத்திகளுக்கான சந்தையை கனடாவில் திறப்பதற்கு  நீதன் பின்னணியிலுள்ளார்.

யதார்த்தமாக சிந்தித்தால்  பழைய  வட்டாரப்பிரிவுகளின் படி தேர்தல்  முன்னெடுக்கப்பட்டிருந்தால் நீதனுக்கு  இது சவால்கள்  இல்லாத  மீள்  நிரூபணம்  சார்ந்த  வெற்றியாக  இருந்திருக்கும். மாறாக மாகாண  அரசின்  வட்டாரக்குறைப்பின்  விளைவாக    கணிசமான  வாக்காளர்களை  இந்த  வட்டாரம்  உள்வாங்கிய  நிலையில்  குறுகிய  கால  அவகாசத்தில் பல புதிய  வாக்காளர்களுக்கு  நீதன்  ஷான்  அவர்கள்  தம்மை  அறிமுகப்படுத்தும் சவால் இருக்கும்  என்பது  உண்மை. மிக பெரும்  இளையோர் தொண்டர் பலமும் வட்டாரத்தின் 72வீத சிறுபான்மை பரம்பலையும் நீதன் ஷான்  தனக்கு  சாதகமாக பயன்படுத்துவார்  என்பது வெளிப்படை. இதுவே நீதன்  ஷானை சக்திவாய்ந்த  வேட்பாளராக இனம் காட்டுகிறது.

மார்க்கம்  7ம்  வட்டாரத்தில்  நடப்பது  என்ன ?

 திரு  லோகன்  கணபதியின்  மாகாண அரசியல்  பிரவேசத்தை  அடுத்து கடந்த  ஜூனில் மார்க்கம்  நகரசபை    வட்டார உறுப்பினர்  பதவியை  வெற்றிடமாக  அறிவித்து  2014ம்  ஆண்டு  வேட்பாளர்  காலிது உஸ்மான்  அவர்களை கோட்பாடுகளுக்கு  அமைய நியமித்தது. இவ் உறுப்பினரின் பதவி  நியமனம்  சார்ந்தே  இருந்து வந்தது. இந்நிலையில் நம் மத்தியில்  நன்கு  அறிமுகமான  சமூக செயற்பாட்டாளர்களான மலர் வரதராஜா  கிள்ளி செல்லையா உள்ளடங்கலாக  ஐந்து  தமிழர்கள்  மற்றும் காலிது  உஸ்மான் என மொத்தமாக  9 வேட்பாளர்களுக்கிடையில் போட்டி நிலவுகிறது.

மேம்பட்ட போக்குவரத்து துரிதமான பனி அகற்றும்  சேவை போதைவஸ்து தாக்கம் இல்லாத சமூகம் இளையோர் முதியோர் வேலைத்திட்டம்  போன்றவற்றை  முன்னிலைப்படுத்தும்  மலர் வரதராஜா தமது வட்டாரத்தில் அதிகரித்துவரும்  விபத்துகள்  குறித்து அதிக கரிசனை  கொண்டுள்ளார். ஒன்றிணைந்து  மார்க்கத்தை  முன்னோக்கி  நகர்த்துதல்  எனும்  தொனிப்பொருளில் போட்டியிடும்  கிள்ளி செல்லையா தமது வட்டாரத்தில் வீதி சமிக்கைகளை  சரி செய்வதும் விபத்துக்களை தவிர்ப்பதும் தமது  முதல் பணி  என்கிறார். விபத்துகளில்  உயிர்கள்  பறிக்கப்படுவதை  பற்றி  அக்கறை  எடுத்து  செயலாற்றக்கூடிய  ஒருவரை  நகரசபைக்கு  அனுப்புங்கள்  என்று  அழைப்பு விடுக்கிறார். இருவரும்  தகுதிவாய்ந்த  கனேடிய  பல்கலைக்கழக  பின்னணி  உள்ளவர்கள்  என்பதும் நீண்டகாலமாக  சமூகம் சார்ந்த  செயட்பாட்டாளர்கள் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

தேர்தல்  களம் சொல்லும்  சேதி

திருப்பு முனைகளுக்கும்  திடீர்  சர்ச்சைகளுக்கும் பஞ்சமே  இல்லாத  கனேடிய  தேர்தல் களம்  கடந்த காலங்களில்  ஆக்கபூர்வமாக செயற்பட கூடிய   தமிழ் அரசியல்  பிரமுகர்களை  இனம் காட்டியது வரலாற்றுண்மை. அதுவே  கனேடிய  தமிழர்களை  அரசியல் ரீதியாக  நிலை நிறுத்த முயன்று வருவதும்  உண்மை. மாறாக  நாணயத்தின்  மறு பக்கமான  பூவாக அரசியல் அமைப்புக்கு அமைவாக தமிழ் வீடு  விற்பனை முகவர்கள் என்கிற  துரும்பை  மாத்திரம்  பயன்படுத்தி  அரசியல்  நீரோட்டத்துக்குள்  குதிக்க பலர்  முயல்வது தேர்தலில்  நிற்பதற்கு  அடிப்படை தகுதியாக  குறைந்தபட்சம்   நான்கைந்து  வீடுகளையாவது  விற்று இருக்க வேண்டுமா  என்கிற  எதிர்மறையான  கேள்வியையும் சமூகவலைத்தள கருத்துக்கள் தொடுக்கின்றன. விழும்  வாக்குகள்  நிதானமாக  நாணயத்தின் தலைகளுக்காக  இருக்கும் பட்சத்தில்  தலைகளும் நாணயமாக  இருக்கும்.

Triden V Balasingam

Related News

 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும்
 • நான்கு தமிழர்கள் டொரோண்டோ ,மார்க்கம் கல்விச்சபைகளில் வெற்றி
 • உளுக்கு, சுளுக்கு, வாதம்
 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *