தேர்தல் வாக்குகளைக் குறிவைக்கும் புதிய வரவுசெலவுத் திட்டம்

ekuruvi-aiya8-X3

quintus‘சமத்துவத்துக்கும் வளர்ச்சிக்குமான’ புதிய வரவுசெலவுத் திட்டம் என்ற தலைப்புடன், பிரதமர் யஸ்ரின் ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் நிதியமைச்சர் பில் மோனோ தயாரித்து, கடந்த பெப்ரவரி 27ம் திகதி வெளிவந்துள்ள 2018ம் ஆண்டுக்கான கனடிய மத்திய அரசின் வரவுசெலவுத் திட்டம், கனடிய நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பல்வேறு சாதக பாதக நிலைகளைத் தோற்றுவிக்கலாமென நம்பப்படுகின்றது.

மருத்துவ வசதிகள் குறித்த மேலதிக திட்டங்கள் எதையும் உள்வாங்காது, அதை ஆராய்வதற்கென புதிய குழுவொன்றை மட்டும் சிபாரிசு செய்திருப்பது, மக்கள் மத்தியில் நீண்டகாலத் தேவையாக உள்ள ‘எல்லோருக்கும் இலவச மருந்தும் மருத்துவமும்’ என்ற விடயத்தில் வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. குழந்தைப் பேற்றின்போது வழங்கப்படும் விடுமுறையை தாய் மட்டுமல்லாமல், தகப்பன் அல்லது ஒருபால் சேர்க்கையில் வாழும் துணை அல்லது ஒன்றாக இணைந்து வாழும் துணை போன்ற ஏனையவர்களும் பகிர்ந்து கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு பொதுவாக வரவேற்பைப் பெற்றுள்ளபோதும், தாய்மார் தங்களது முழுமையான விடுமுறைக் காலத்தைக் குறைத்துக்கொண்டு வேலைக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் இந்த யுக்தி தாய்மாரிடம் வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நிதிப் பற்றாக்குறையற்ற சீரான வரவுசெலவுத்திட்டத்தை 2019ல் கொண்டுவந்துவிடுவதாக தேர்தல் காலத்தில் அறிவித்த லிபரல் கட்சி, 2018ல் கொண்டுவந்துள்ள இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறையாக துண்டுவிழும் தொகை 19.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இணையத்தள பாதுகாப்பு, கனடிய வரித்திணைக்கள சீரமைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, குடிநீர் தூய்மை, ஆதிக்குடிகளின் குடியமர்வு என்று பல்வேறு விடயங்களுக்கும் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது துண்டுவிழும் பாரிய நிதிப் பற்றாக்குறையை எந்த வகையில் நிவர்த்தி செய்வது என்பதற்கான எவ்வித திட்டமும் உள்ளடக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக இந்த வரவுசெலவுத்திட்டம், 2019ல் வரவுள்ள தேர்தலைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருப்பதை மைய ஊடகங்கள் கோடுபோட்டுக் காட்டியுள்ளன.

சமத்துவம் என்ற போர்வைக்குள், பெண்கள் ஏதோ பெரிதளவில் இதுவரை புறந்தள்ளப்பட்டது போலவும், பெண்களின் உரிமைகள் 2017 வரை கனடாவில் மறுக்கப்பட்டு வந்தது போன்றும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கி, அவற்றை சரிசெய்ய ‘சமத்துவ’ பெண்கள் சமுதாயத்தை இந்த வருடம் புதிதாக உருவாக்குவதே லிபரல் கட்சியின் முழுநேர பணியாக அமையவிருப்பதாக தனது உரையில் மறைமுக விளங்கங்களை நிதியமைச்சர் வழங்கியது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.

அண்மையில் வெளியான நனோஸ் கருத்துக்கணிப்பில், கனடாவில் வாழும் ஆண் வாக்காளர்களில் 33 வீதமானவர்களே லிபரல் ஆட்சியை ஆதரிப்பதாகவும், 38 வீதமான ஆண்கள் கொன்சவ்வேட்டிவ் ஆட்சியை விரும்புவதாகவும் வெளியான தகவல்களும், பெண் வாக்காளர்களைப் பொறுத்தவரை, 42 வீதமானவர்கள் லிபரல் ஆட்சியை ஆதரிக்க, 25 வீதமானவர்கள் கொன்சவ்வேட்டிவ் கட்சியை ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தங்களுக்குப் பெருவாரியான ஆதரவைத் தருகின்ற பெண் வாக்காளர்களைத் தொடர்ந்தும் குளிர்ச்சிப்படுத்துவதன் மூலம், தங்களது வாக்குப்பலத்தை வரவிருக்கும் தேர்தலிலும் உறுதிசெய்து விடலாம் என்ற நோக்குடனேயே இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை கனடிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பல மைய ஊடகங்களும் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ள நிலையில், உதாரணத்திற்காக, சிபிசி இணையத்தளத்தில் பத்திஎழுத்தாளர் ஆரன் வெரி எழுதிய ஆய்வுக் கட்டுரையில், பின்வரும் பகுதி வெளிவந்துள்ளது:-

‘……

“…… from the word “equality” on the cover to more than a dozen measures within — is a budget for women.

If not for women, Justin Trudeau’s government would be in serious trouble. And not only because they comprise half the cabinet: the support of women is carrying this government through the difficult midterm portion of its mandate.

According to the last opinion tracking by Nanos Research, the Liberals actually trail the Conservatives in support among men: 38 per cent to 33 per cent. But among women, the Liberals lead 42 per cent to 25 per cent. And the latter gap is enough to give the governing party an overall lead.

In that sense, it seems only right that the Liberals should pay special heed to what used to be called “women’s issues” — though there are important issues of justice, welfare and economics here, too.”

பெண்களுக்கான அதிகபட்ச சலுகைகளை யஸ்ரின் ரூடோ கொடுக்கத் தவறும் பட்சத்தில், அவரது ஆட்சி கவிழ்ந்து விடலாம் என்று ஆரூடம் கூறுமளவுக்கு, அவரது வரவுசெலவுத் திட்டத்தின் அதிரடி அறிவிப்புக்கள் அமைந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது.

பெண்களுக்கு போதிய சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால், ஏதோ பெண்களின் சமத்துவநிலை நேற்றுவரை கனடாவில் மதிக்கப்படாமல் இருந்ததுபோல குரலெழுப்பி, அதை சரிசெய்வதற்கான புதிய திட்டங்களை நாம்தான் புதிதாகக் கொண்டுவருகிறோம் என்பதுபோல காட்டநினைப்பது அவசியமற்றது மட்டுமல்ல, அது பொய்யான முன்னெடுப்பும்கூட.

பெண்களுக்கு மிகவும் அதிகபட்ச சிரமங்களைக் கொடுக்கின்ற, குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்ற விடயத்திலும், குழந்தை பராமரிப்பு விடயங்களிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வரிச்சலுகைகளோ, மேலதிக வேலை வாய்ப்புக்களோ, மேலதிக நிதி உதவியோ வழங்கப்படாத நிலையில், பேச்சளவில் மட்டும் பெண்களுரிமை பற்றி வரவுசெலவுத் திட்ட உரையில் பேசியிருப்பதும் பல கேள்விகளைத் தோற்றுவித்திருக்கிறது.

வெளிவந்திருக்கும் வரவுசெலவுத் திட்டம் பற்றி சஸ்கச்சுவான் மாகாண முன்னாள் நிதியமைச்சர் ஜனிஸ் மைக்கினன் கருத்துக் கூறுகையில், பெண்களுக்கு சமஅளவில் வேலை வாய்ப்புக்களை வழங்குவதாக உறுதியளிக்கும் வரவுசெலவுத் திட்டத்தில், அவர்களது குழந்தைகளின் பராமரிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் போதிய நிதி வழங்காமல் தவிர்த்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிடும் அவர், கியூபெக் மாகாணத்தைப்போல, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு போதிய நிதி ஒதுக்குவதன்மூலம் மட்டுமே உயர்மட்ட தொழில்வாய்ப்புக்களுக்கு பெண்களை சமஅளவில் கொண்டுவர முடியுமென்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நடுத்தரவர்க்கத்தினருக்கான வரவுசெலவுத் திட்டம் என்று சுட்டப்பட்டாலும், நிதி ஒதுக்கீடு விடயத்தில் போதிய அளவு அது கவனத்தில் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீற் சிங், மருத்துவ உதவி, மருந்து விநியோகம் போன்ற அடிப்படை விடயங்களில்கூட நிதிஒதுக்கீடு வழங்காமல், நடுத்தர வருமானமுள்ளவர்களுக்கான வரவுசெலவுத் திட்டம் என்று கூறுவது தவறு என்று கூறியுள்ளார்.

நப்ஃதா ஒப்பந்தம் உட்பட பல்வேறு நெருக்கடியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், நிதிநிலுவை பற்றி எந்த அக்கறையுமில்லாமல், மேலதிக நிதிச் செலவுகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் தாராளமாக அறிவித்திருப்பது, நாட்டின் எதிர்கால நிதிநிலையை சிக்கலுக்குள்ளாக்கும் என்று எச்சரித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அன்ரூ சியர்.

கனடாவின் பொருளாதாரமும் நிதிநிலையும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் ஆறு இலட்சம் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 40 வருடங்களில் வேலைவாய்ப்பின்மை நிலை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையில், ஒரு சாதகமான வரவுசெலவுத்திட்டத்தை தாங்கள் அறிவித்திருப்பதாக நிதியமைச்சர் பில் மோனே கருத்துக் கூறி, தனது திட்டங்களை நியாயப்படுத்தியுள்ளார்.

அரசாங்க இணையத்தளங்களில் இவ்வாண்டுக்கான முழுமையான வரவுசெலவுத் திட்டத்தைப் பார்வையிடவும் தரவிறக்கம் செய்யவும் வாய்ப்புள்ளது.

மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில்
குயின்ரஸ் துரைசிங்கம் அவர்களால் எழுதப்பட்டது

 

Share This Post

Post Comment