இன்று அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாள்: மம்தா பானர்ஜி புகழாஞ்சலி

sdsd

annai_therasaநோபல் பரிசு பெற்ற சமூகச் சேவகி அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாளான இன்று மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அவருக்கு புகழாஞ்சலி சூட்டியுள்ளார்.

மறைந்த பிரபல சமூக சேவகியும் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரியுமான அன்னை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக திகழ்ந்த அன்னை தெரசா ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், லட்சியமாகவும் கருதி வாழ்ந்தவர்.

1910-ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா, இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில் அறப்பணிகள் செய்தார். 1951-ம் ஆண்டு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. தனது சமூக சேவைகளால் மக்கள் மனங்களில் அவர் இமயமாக உயர்ந்தார். அவருக்கு 1979ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசு 1980-ம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பு செய்தது.

அன்னை தெரசா, தனது 87-வது வயதில் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் கொல்கத்தாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறந்த பிறகும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002-ம் ஆண்டு குணப்படுத்தி அன்னை தெரசா அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003-ம் ஆண்டு, போப் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார்.

முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும். இந்தநிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார்.

இதை தற்போதைய போப் பிரான்சிஸ் அங்கீகரித்துள்ளார். இரண்டாவது அற்புதத்தையும் அன்னை தெரசா செய்துள்ள நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கினார்.

இந்நிலையில், அன்னை தெரசாவுக்கு வரும் செப்டம்பர் 4-ம் தேதி வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்குகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அன்னை தெரசாவின் 106-வது பிறந்தநாளை இன்று உலகம் முழுவதும் உள்ள தொண்டு இயக்கங்களை சேர்ந்தவர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அவரது உன்னத சேவையை போற்றும் வகையில் தனது டுவிட்டரில் அவரை நினைவு கூர்ந்துள்ள மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ‘அன்னையின் பிறந்தநாளில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.

’நற்சேவைகள் அனைத்தும் அன்பின் பிணைப்பு சங்கிலியின் அடிப்படையில் ஆனவை’ என்று குறிப்பிட்ட அன்னை தெரசாவின் வைரவரிகளுடன் கூடிய அவரது புகைப்படத்துடன் மேற்கு வங்காளம் மாநில அரசின் சார்பில் இன்றைய நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் அன்னை தெரசாவின் முழுஉருவ உலோகச் சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். அன்னை தெரசாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட 23 திரைப்படங்கள் கொண்ட படவிழாவுக்கும் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Share This Post

Post Comment