சிறப்பு புலனாய்வு குழு விசாரணை இல்லை வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ekuruvi-aiya8-X3

supreme_court_15உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றின் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை அகற்றுவதற்கு கல்லூரி நிர்வாகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்’ வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை சாதகமாக முடித்து தருவதாக கல்லூரி நிர்வாகத்துக்கு வாக்குறுதி அளித்து ஒடிசா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி குத்தூசி பேரம் நடத்தியதாகவும், இதில் பெரும் தொகை கை மாறியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி குத்தூசி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் இப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரின் பெயரும் அடிபட்டு வருகிறது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வக்கீல் காமினி ஜெய்ஸ்வால் தரப்பில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை ஊழல் தொடர்பாக ‘எஸ்.ஐ.டி.’ என்று சொல்லப்படுகிற சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், அருண் மிஷ்ரா, ஏ.எம். கன்வில்கர் ஆகியோரை கொண்ட அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் சாந்தி பூ‌ஷண், பிரசாந்த் பூ‌ஷண் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் இந்த வழக்கில் நீதிபதி ஏ.எம். கன்வில்கர் விசாரணையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.

இறுதியில் நீதிபதிகள் மீதான ஊழல் புகார் மீது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கையை நிராகரித்து, பொது நல வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறி இருக்கிற முக்கிய அம்சங்கள் வருமாறு:–

* இந்த வழக்கில் சரி பார்க்கப்படாததும், ஆதாரம் இல்லாததுமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாபெரும் அமைப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

* முதல் தகவல் அறிக்கையின் அடிப்படை உண்மைகளைக்கூட ஆராயாமல், தலைமை நீதிபதி மீது பொறுப்பற்ற விதத்தில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் புகார் கூறி உள்ளனர்.

* இந்த வழக்கு அவமதிப்புக்குரியது. ஆனால் வழக்குதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடவில்லை.

* நாங்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல; இருந்தபோதிலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்; நீதித்துறை உத்தரவின் மூலம் ஒரு நீதிபதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.

Share This Post

Post Comment