தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடிக்க தமிழ், முஸ்லிம் மீனவர்களுக்கே உரிமை!

Thermo-Care-Heating

Capture-2முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புக் குளத்தில் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை தமிழ், முஸ்லிம் மீனவர்களுக்கு மாத்திரமே உரித்தானது எனவும், இதனைமீறி எவரும் குளத்தில் இறங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள மீனவர்கள் தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடிப்பதற்கான உரிமை தமக்கும் வழங்கப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், இந்தக் குளத்தில் காலம் காலமாக மீன்பிடித் தொழில் ஈடுபட்டுவரும் தமிழ், முஸ்லிம் மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் முத்தரப்பு மீனவப் பிரதிநிதிகள் கலந்துரையாடி இதற்குத் தீர்வை எட்டுமாறு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தண்ணிமுறிப்புக் குளத்தில் இதுவரை காலமும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் மாத்திரமே தொடர்ந்தும் தொழிலில் ஈடுபட்டுவரமுடியும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலதிகமாக தற்போது அனுமதி கோருவோர் தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடமுடியாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இம்முடிவை 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மாவட்ட நீதிமன்றமும் இதற்குத் தடை விதித்திருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கருத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தீர்மானத்தை மீறினால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ideal-image

Share This Post

Post Comment