தனிமை சிறையில் இருந்து விடுவிப்பு! இலங்கை அகதி உதயகலா உண்ணாவிரதத்தை கைவிட்டார்

Facebook Cover V02

uthayakalaதனிமை சிறையில் இருந்து தன்னை போலீசார் விடுவித்ததை அடுத்து, அகதி உதயகலா உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார். இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராஜ் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அகதியாக தனுஷ்கோடிக்கு வந்தார்.

தயாபரராஜ், அவரது மனைவி உதயகலா மற்றும் 3 குழந்தைகளிடம் விசாரணை நடத்திய போலீஸார், தயாபரராஜ் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தயாபரராஜ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உதயகலா மண்டபம் முகாமில் உள்ள தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தண்டனை முடிந்த தயாபரராஜ், திருச்சியில் உள்ள அகதி முகாமில் தங்கியுள்ளார். ஆனால் உதயகலா தொடர்ந்து தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால், தனிமை சிறையில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உதயகலா, கடந்த 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தகவல் அறிந்த முகாம் அதிகாரிகள் மற்றும் போலீஸார், உதயகலாவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உதயகலாவோ, தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால், மண்டபம் அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்த உதயகலாவை போலீஸார் விடுவித்தனர். மேலும், விடுவிக்கப்பட்ட உதயகலாவிற்கு, மண்டபம் முகாமில் மறுவாழ்வு துறையினர் தனி வீடு ஒதுக்கீடு செய்துள்ளனர். இதையடுத்து உதயகலா தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

Share This Post

Post Comment