தாயகத்தில் தமிழர் பெரும்பான்மையை இழப்பதற்கான காரணங்களும், விளைவுகளும்.

தமிழர்கள் மரபு வழியாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் சனத்தொகை திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. 1901-ம் ஆண்டு இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகையில் 26.69 சதவீதமாக இருந்த தமிழர், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 11.15 சதவீதமாக குறைந்துள்ளனர். அத்துடன் தமிழரின் இனப்பெருக்க வீதம் 1.5 இருக்கும் அதேவேளை, முஸ்லிம்களின் இனப்பெருக்க வீதம் 12 ஆகவும்,  சிங்களவர்களின் இனப்பெருக்க வீதம் 5.7%ஆகவும் இருக்கிறது.

இவ்வாறு தமிழர் எண்ணிக்கை தமிழர் தாயகப் பகுதிகளில் குறைவடைந்து செல்வதற்கான காரணங்கள் என்ன ?அவற்றின் விளைவுகள் என்ன ? என்பவை பற்றி பார்க்கலாம்.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்

darsini-rajhஇலங்கை அரசு சிங்களவர்களை ஆசை காட்டியோ அல்லது பலவந்தப்படுத்தியோ தமிழர் பகுதியில் குடியேற்றுகின்றனர். இதனால் தமிழர் செறிந்து வாழும் பகுதி குறைக்கப்படுகிறது. சிங்களவர்கள் தங்கள் வியாபார நிறுவனங்களை தோற்றுவித்து, தமிழர் விளை நிலங்களில் பயிரிட்டு, தமிழர் மீன்பிடி நிலைகளில் மீன்பிடித்து படையினர் பாதுகாப்பு வழங்க, அரசு அமைத்துக் கொடுத்த வீட்டில் பல சலுகைகளைப் பெற்று வாழ்கின்றனர். பல இடங்களில் தமிழர் வாழ்விடங்களில் முஸ்லிம்களும் இவ்வாறே குடியேற்றப்படுகின்றனர்.

ராணுவம் அகற்றப்படாமை

புலிகள் மீண்டும் தோற்றம் பெற்று விடக்கூடாது என்று காரணம் காட்டி, தமிழர் தாயகப்பகுதியில் படையினர் அகற்றப்படாமலே உள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பு நிலைகள் மற்றும் வாழ்விடங்களுக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்படாமலே இருக்கின்றன. இவற்றில் பல இடங்களில்  படையினர்  தம் குடும்பங்களை குடியேற்றி உள்ளனர். காலப்போக்கில் இவை நிரந்தர குடியிருப்புக்களாக மாறலாம்.

ராணுவத்தில் தமிழ்ப் பெண்களை இணைத்துக் கொள்வது, சிங்கள இராணுவம், சிங்கள வர்த்தக நிறுவனங்கள், சிங்கள குடியிருப்புகள் பல்கிப் பெருகும் போது, காதல் என்ற போர்வையில் கலப்புத் திருமணங்கள் நடைபெறும். இளம் பெண்கள் சிங்களவர்களால் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவது மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது என்பன அதிகரிக்கும். இதன் மூலம் வேண்டாத கருச்சிதைவுகள், நாளடைவில் குழந்தைப் பேறின்மை அதிகரிக்கும்.

மது, போதைப் பாவனை அதிகரிப்பு

தமிழ் பகுதிகளில் மதுபான சாலைகள் அதிகரிக்கின்றன.  பலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். கொலை, கொள்ளை, வெட்டுக்குத்து என்பற்றில் மிகச்சாதாரணமாக ஈடுபடுபவர்களாகவும் மாற்றப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கை காப்பாற்றவேண்டியர்கள் முன்னிலையிலேயே இவை நடைபெறுகின்றன. இவை எல்லா நாடுகளிலும் இடம்பெறும் பொதுவான விடயங்களாகப் பார்க்கப்பட்டாலும் இங்கு, அவை வேண்டுமென்று ஊக்குவிக்கப்படுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். இந்தக் குற்றச்செயல்கள் இல்லாத ஒரு சமூகமாக ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் தமிழர் வாழ்ந்தனர் என்பதையும் ஞாபகப்படுத்தவேண்டும். இப்படியான சமூக சீரழிவுகளால் திருமணத்துக்கு வரன் அமையாத நிலை, திருமணத்தில் நம்பிக்கை அற்ற தன்மை, விவாகரத்து என்பன அதிகரிக்கும். இதனால் குழந்தைகளை பெற்றுக்கொள்வது தடைப்படும் அல்லது குழந்தைகள் நல்ல பராமரிப்பின்றி சிரமப்படுவர்.

கருக்கலைப்பு செய்யும் வீதம் அதிகரிப்பு

ekuruvi_night-2018வன்னியில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வெளியேறி வவுனியா வந்த கருவுற்ற தமிழ்த் தாய்மார்களுக்குக் கருக்கலைப்பு செய்யும்படி வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு படை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்திருந்தனர். அவர்களுக்கு சிங்களத்தில் எழுதப்பட்ட படிவங்களை வழங்கி, கையெழுத்துப் பெறப்பட்டு பல சலுகைகளும் வழங்குவதாகக் கூறி கருக்கலைப்பு செய்ய வைத்தனர்.

வட கிழக்கில் 80,000-கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இவர்களில் பலருக்குக் குழந்தைகள் இல்லை. அல்லது அவர்களை சரியான முறையில் பராமரிக்கும் வசதி அற்றவர்களாக உள்ளனர்.  .

ஆண்களின் பாதிப்பு 

போரின் பின்பு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பலருடன், இன்னும் அரசியல் கைதிகளாக  இருந்து வெளிவந்த பலரும் அனுபவித்த சித்திரவதைகளின் பலனாக, குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையை இழந்து பலர் மனதுக்குள் வெந்துபோய் உள்ளனர்.

காணாமல் போகச்செய்தல் மற்றும்  நடந்து முடிந்த இன அழிப்பு காரணமாக ஆண்களின் சனத்தொகை குறைவாக இருத்தல் முக்கிய காரணங்களில் ஒன்று. இலங்கையில் உள்ள ஆண், பெண் விகிதாசாரம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மானுட வள அபிவிருத்தி நிலையம் நடத்திய ஆய்வில், ஆண்கள் 46 சதவீதமாக உள்ளனர். அதிலும் வடக்கில் 2013 சனத்தொகை மதிப்பீட்டின் பிரகாரம், 80 வீதமான குடும்பங்களில் ஆண்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

திருமணத்தில் ஏற்படும் தடைகள்

இன்றும் எம்மவரிடையே திருமணத்தின் போது சாதி, மதம், பிரதேச வேறுபாடுகள் பார்க்கப்படுகின்றன. வறுமை, சீதனம் கொடுக்க முடியாமை, குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய தேவை கருதி, காலம் தாழ்த்தியே திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தை கிடைப்பதிலும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

நோய் பாதிப்பு / இறப்பு

போரின் பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் அவதியுறும் பலரின் பிள்ளைகள் வறுமை காரணமான போஷாக்கின்மையாலும், அனாதரவாகப்பட்டவர்கள் – சரியான பராமரிப்பின்றியும், நோய் காரணமாகவும் இளவயதிலேயே மரணமாகின்றனர். அல்லது குறைபாடு கொண்டவர்களாக மாறுகின்றனர்.

இலங்கையில் ஏனைய இனத்தவர்களை விடவும் தமிழர் அதிக அளவில் புற்று நோய்க்கு உள்ளாவதாக யாழ் போதனா மருத்துவமனை தரவுகள் காட்டுகின்றன. 2008-ல் 748 ஆக இருந்த புற்று நோயாளிகள், 2011-ல் 1382 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கு குறைந்த நிலப்பரப்பில் கூடுதல் விளைச்சளைப் பெற பயன்படுத்தும் இரசாயன உரங்கள், களை கொல்லி மருந்துகள் மற்றும் மலசல கூட கழிவுகள் கிணற்றுள் கலப்பது என்பவை கூறப்படுகின்றன.

சுன்னாகம் மின்சார சபை வளாகத்தில் புதைக்கப்பட்ட கழிவு எண்ணெய், பல ஊர்களின் கிணற்றில் காணப்பட்டது நாம் அறிந்ததே. 2014ல் தேசிய நீர் வழங்கல் அதிகார சபை ,150 கிணறுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு, 73 சதவீத கிணறுகளில் கழிவு எண்ணெய் பரவியிருப்பதை உறுதி செய்தும், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு எதிர்காலத்தில் பல பிரச்சனைகளும் வர இடமுண்டு.

புலம் பெயர் நாடுகளுக்கான இடம்பெயர்வுகள்

இனப்பிரச்சனையைக் காரணம் காட்டி 80களில் JRஅரசு, தமிழ் இளைஞர்கள் வெளிநாடு செல்ல ஊக்கமளித்தது. அதனைத் தொடர்ந்து போர் உச்சம் பெறத்தொடங்கிய காலப்பகுதிகளில், பல ஆண்கள் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், சிலர் வருமானத்தை நாடியும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சென்று குடியேறத் தொடங்கினர். இவை அனைத்தும் சேர்ந்து இன்று தமிழர் தாயாகப் பகுதிகளில் தமிழரின் இருப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளன.

ஏற்படப்போகும் விளைவுகள் :

தாயகப்பகுதிகளில் தமிழர் சிறுபான்மை ஆவதன் மூலம், தாயகக் கோரிக்கை அர்த்தமற்றதாக மாறும். தாயகம், தேசியம், தன்னாட்சி, சுய நிர்ணய உரிமை என்பவை பற்றிய பேச்சுக்கும் இடமில்லாமல் போகும். இலங்கை முழுவதும் பரவி வாழும் சிறுபான்மை இனமாக தமிழர் மாறிப்போவர். அவர்களுக்கென்று  தனியான பிரதேசம் இருக்கப்போவதில்லை.  இதன் மூலம் பிரதேச சபை தலைவர்களாகக் கூட தமிழர் இருப்பதற்கான வாய்ப்பு குறையும். அத்துடன், நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்ப் பிரதிநித்துவம் கேள்விக்குறியாகும். இந்த அபாயத்தைத் தடுக்க, தமிழர் நாம் ஒற்றுமையுடன் சிந்தித்து செயலாற்றும் தருணம் இது !

சாத்தியமான தீர்வுகள் :

முக்கியமாக தமிழர் நிலம் பறிபோகாது தடுக்கப்பட வேண்டும். தாயகப் பகுதிகளில் இருந்து ராணுவம் முற்றாக அகற்றப்பட வேண்டும். தமிழ் தாய்மார் குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு அவர்களின் பொருளாதாரம் மேம்படுத்தப் படவேண்டும். மது, போதைக்கு அடிமையாகாது எமது இளைய சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும். முடிந்தவரை கலப்புத் திருமணங்கள் இடம்பெறாது இருக்க வேண்டும்.  இவை அனைத்தும் செய்யப்படக் கூடிய சாத்தியமான விடயங்களே. இதன் மூலமே, தமிழர் நாம் எம் தாயாகப் பிரதேசம் பறிபோகாது தடுக்க முடியும்.

மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில் தர்சினி ராஜ் அவர்களால் எழுதப்பட்டது

 


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *