‘தட்கல்’ முன்பதிவு முறையில் நூதன மோசடி சி.பி.ஐ. அதிகாரி கைது

ekuruvi-aiya8-X3

train_29ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களிலும், ரெயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘ஐ.ஆர்.சி.டி.சி.’ மூலமாகவும் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட கால அவகாசத்தில்தான் பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை பெற முடியும்.எனவே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்கிற அடிப்படையில் தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

தட்கல் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். இதனால் பயணிகள் தட்கல் முன்பதிவிற்காக தனியார் ஏஜெண்டுகளை நாடுகின்றனர்.

ஏஜெண்டுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெறும் வகையில் ரெயில்வே துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

எனினும் பல இடங்களில் ஏஜெண்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முறைகேடு செய்து அதிக எண்ணிக்கையிலான தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெறுவதை ரெயில்வே துறை கண்டறிந்தது. இது குறித்து சி.பி.ஐ. ரகசிய விசாரணை நடத்தியது.

இதில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கி, கம்ப்யூட்டர் மவுசில் ஒரே ஒரு கிளிக் செய்து நூற்றுக்கணக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் புதிய சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தியது. அப்போது இந்த சாப்ட்வேரை வடிவமைத்தது சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வரும் அஜய் கார்க் (வயது 35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 26–ந் தேதி இரவு அஜய் கார்க்கை டெல்லியில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அணில் குப்தா என்பவரை உத்தரபிரதேசத்தில் கைது செய்தனர்.

Share This Post

Post Comment