ஆதார் உதவி எண்கள் மொபைல் போன்களில் பதிவாகியிருந்த விவகாரம்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த கூகுள்

ekuruvi-aiya8-X3

google-04இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை இந்திய தனித்துவ அடையாள ஆவண நிறுவனமான உடாய் வழங்கி வருகிறது. இந்த நிலையில், உடாய்  மையத்தின் சேவை உதவி எண்கள், ஆண்ட்ராய்டு போன்களின் காண்டக்ட்  பட்டியலில் தானாக பதிவானதாக நேற்று திடீர் சர்ச்சை எழுந்தது. சமூக வலைதளங்களில், நெட்டிசன்கள் பலரும், தங்கள் போன்களிலும் இவ்வாறு தானாக ஆதார் மையத்தின் பழைய உதவி எண்ணான 18003001947 பதிவாகி இருப்பதாக பதிவிட்டனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள், செல்போன்களுடன் ஆதார் ஆணையம் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் சிலர் விமர்சனத்தை முன்வைத்தனர்.
ஆனால், ஆதார் ஆணையம் இந்த தகவலை முற்றிலும் மறுத்தது. 1947 என்ற எண் மட்டுமே தற்போது செயல்பாட்டில் இருப்பதாகவும், உதவி எண்களை பதிவிடுமாறு எந்த ஒரு செல்போன் நிறுவனத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தது. ஏற்கனவே, ஆதார் எண்களால், தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் களவு போகும் அபாயம் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் நிலையில், ஆதார் எண்கள் தானாக பதிவானது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆதார் உதவி எண்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களில் பதிவானதற்கு ஆண்ட்ராய்டு இயங்குதளமே காரணம் என்று கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில்,  2014 ஆம் ஆண்டு உடாய் சேவை எண்ணும் 112 என்ற பேரிடர் உதவி எண்ணும்  ஆண்ட்ராய்டு இயங்கு தளம் (setup wizard) -ல் கவனக்குறைவாக கோடிங் செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது வரை இது தொடர்வதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள கூகுள், பயனாளர்களின் ஆண்ட்ராய்டு கருவிகளில் அங்கீரிக்கப்படாத எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்பதற்கு உறுதியளித்துக்கொள்கிறோம். இன்னும் சில வாரங்களில் இப்பிரச்சினை சீர் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment