சூப்பர் கம்ப்யூட்டர்கள் – சீனாவை முந்திய அமெரிக்கா

ekuruvi-aiya8-X3

Super-computersசூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் போட்டியில், தற்போது சீனாவை அமெரிக்கா முந்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள உலகின் முன்னணி சூப்பர் கம்ப்யூட்டரை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான சக்திவாய்ந்த ‘சம்மிட்’ என்னும் சூப்பர் கம்ப்யூட்டரை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

இந்த கம்ப்யூட்டரால் நொடிக்கு 2 லட்சம் டிரில்லியன் அல்லது 200 பெட்டாபிளாப்ஸ் கணக்கீடுகளை மேற்கொள்ள முடியும்.

தற்போதுவரை உலகின் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரான சீனாவின் சன்வே டைஹுலைட், ஒரு நொடிக்கு 93 பெட்டா பிளாப்ஸ் கணக்கீடுகளை மேற்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர், வானியல், இயற்பியல், உயிரியல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்படும்.

ஐபிஎம் மற்றும் என்விடியா நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர், அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அளவில் மிகப் பெரியதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் சிறப்புவாய்ந்த மற்றும் தீவிரப் பணிகளை செய்வதற்காக ஆயிரக்கணக்கான பிராசசர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டரில் 4 ஆயிரத்து 608 கம்ப்யூட் சர்வர்கள் மற்றும் 10 பைட்ஸுக்கும் மேற்பட்ட நினைவகத்தையும் கொண்டுள்ளது.

சம்மிட் சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கப்படும்போதே மரபணு குறியீட்டை ஒப்பிட்டுப் பார்த்து கணக்கீடுகளை மேற்கொள்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாக அந்த ஆய்வகத்தின் இயக்குநரான தாமஸ் சச்சாரியா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட உலகின் 500 முன்னணி சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவின் 143 கம்ப்யூட்டர்களும், சீனாவின் 202 கம்ப்யூட்டர்களும் இடம்பிடித்திருந்தன.

அமெரிக்காவின் இதற்கு முந்தைய சூப்பர் கம்ப்யூட்டரான ‘டைட்டன்’, அந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித் திருந்தது.

‘‘இந்தப் பட்டியலில் யார் முதலிடத்தைப் பெறுகிறார் என்பது எவ்வளவு முக்கியம் என்றும், அதற்கான போட்டியில் தற்போது நாங்களும் இருக்கிறோம் என்றும் எங்களுக்குத் தெரியும்’’ என்று இந்த சூப்பர் கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்காவின் எரிசக்தித்துறைச் செயலாளர் ரிக் பெர்ரி கூறினார்.

‘‘ஒரு சாதாரண மேஜைக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள 30 ஆண்டுகால தரவுகளை ஒரே மணிநேரத்தில் கணக்கீடு செய்யும் திறனுடையது எங்களின் புதிய சூப்பர் கம்ப்யூட்டர்’’ என்றார் அவர்.

இதற்குப் போட்டியாக சீனா என்ன சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.

சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் சூப்பர் போட்டி!

Share This Post

Post Comment