ராஜிதவின் கருத்து தமிழர்மேல் திணிக்கும் இனவாதம் – ரவிகரன்!

Thermo-Care-Heating

ravikaran-8546554652தமிழரின் காணியைப் பிடித்து விகாரை அமைப்பதனை சரி என்றும் அதனை யாரும் தடுக்க முடியாதென்றும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

எங்கள் காணியைப் பிடித்து அவர்கள் விகாரை அமைப்பதனை நாங்கள் தடுக்காவிட்டால் யார் தடுப்பது என்றும் கேள்வியெழுப்பியிருக்கும் ரவிகரன் அங்கு விகாரை அமைக்கும் உரிமை எவருக்கும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொக்கிளாயில் விகாரை அமைப்பது சரி என்றும் அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பில் வினவியபோதே மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான கொக்குளாய்ப் பகுதியை தற்போது சிங்கள மக்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். அந்தப் பகுதில் அதிகளவிலான சிங்கள கடற்தொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதே போன்று அதிகளவிலான குடும்பங்களும் தற்போது அங்கு வந்திருக்கின்றனர்.

இவ்வாறு அங்கு பல வழிகளிலும் சிங்கள ஆக்கிரமிப்புக்களும் சிங்கள மயமாக்குகின்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதன் தொடர்ச்சியாகவே அந்தப் பகுதியில் பாரிய பௌத்த விகாரையொன்றும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விகாரை அமைப்பதானது தொடக்கத்திலேயே பெரும் சர்சைகளை ஏற்படுத்தியிருந்ததுடன் இதற்குப் பாரிய எதிர்ப்புக்களும் கிளம்பியிருந்தன.

ஏனெனில் அங்கு தனியாருக்குக்குச் சொந்தமான காணியொன்றை அங்கு வந்திருக்கின்ற பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாகப் பிடித்து வைத்திருந்தார். அதன் பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் மிக வேகமான விகாரை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந் நிலையில் இந்த விடயம் தொடர்பாக எனக்குத் தெரியப்படுத்தப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கும் சென்றிருந்தேன்.

இதன் பின்னர் மேற்படி விடயத்தை மாகாண சபையிலும் தெரிவித்திருந்தேன். தொடர்ந்து இதனை தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரி மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்து. இவ்வாறான நிலையிலும் அங்கு விகாரை அமைப்பதிலேயே அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

குறிப்பாக 1981 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட சிங்கள மீனவர்கள் என்ற பொருள்படவே அங்கு சிங்களவர்கள் வந்திருந்தனர். இதற்கு முன் அந்த மாவட்டத்தில் எங்குமே விகாரைகள் இருக்கவில்லை. ஆயினும் இராணுவம் அந்தப் பகுதியை ஆக்கிரமித்ததன் பின்னரே அந்தக் காணியைப் பிடித்து அதாவது தமிழர் ஒருவருக்குச் சொந்தமான காணியைப்பிடித்து விகாரையை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். சம்பவ இடத்திற்கும் சென்றிருந்தேன். ஆனால் இதனைத் தடுக்க வேண்டியவர்களே இதற்கு ஒத்திசைவாக இருக்கிகன்றனர். இங்கு சகலரும் கவனம் செலுத்தாமல் இருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது. விகாரை அமைக்கப்படுகின்ற இக்காணியானது ஒரு தமிழரின் காணியாக இருக்கின்றது. அதில் அடாத்தாக விகாரை அமைக்கும் பணியையே செய்கின்றனர்.

இதனை நாங்கள் தடுக்க முடியாதென்றால் யார் தடுப்பது. மதத் திணிப்பின் ஊடாக எங்களது குரல்கள் தடுக்கப்பட்டு மதத்திணிப்புக்கள் நடக்கிறது. காணிச் சட்டத்தின் படி தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரம் இருக்கிறது. குடியேற்றப்பட்ட சிங்கள மீனவர் எனக் குறியிட்டு அரசு வெளியிட்ட வர்த்தமானியும் இருக்கிறது.

அது பொய்யா, எங்கள் மண்ணில் நடக்கிறதை நாங்கள் எவ்வாறு கதைக்க முடியாமல் இருக்க முடியும். தமிழருக்கு கதைக்கவோ தடுக்கவோ முடியாதென்று சொல்ல முடியாது. அங்கு தமிழரின் காணியைப் பிடித்து விகாரை அமைக்க சிங்களவருக்குத் தான் உரிமையில்லை. அந்தக் காணி உரிமையாளர் அகதியாகத் தான் இருக்கிறார்.பௌத்த ஆதிக்கத்தின் ஊடாக எங்கள் குரல்களை அடக்கும் வேலைகள் நடக்கிறதென்பது தான் உண்மை. ஆகவே அமைச்சரின் கூற்றை ஒருபொதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது எங்கள் மீதான அவர்களின் ஆதிக்கமாகவே உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment