தமிழர் அரசியல் ‘குறிக்கோள்களை’ புறந்தள்ளிய யதார்த்த அரசியலுக்குள் செல்லவில்லை!

(புருஜோத்தமன் தங்கமயில்மதுரி தமிழ்மாறன்)

இலங்கை தொடர்பாக தற்சமயம் ஒரு ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ நடவடிக்கையை சர்வதேச சமூகம் கையாள்வதால் உள்நாட்டு/வெளிநாட்டு தமிழ் அரசியல் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள்/செயற்பாட்டாளர்கள் சந்திக்கும் தேக்க நிலையின் விளைவு பற்றி யோசித்ததன் விளைவாகவே இப்பத்தி.

இலங்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைமுக ஆதரவுடனும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டுப் பங்களிப்புடனும் கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சர்வதேச ஈடுபாட்டுடன் ஒரு உள்நாட்டு விசாரணையே ஒத்துகொள்ளப்படுள்ளது. இதில் சர்வதேச ஈடுபாடு என்பது எந்தளவிலானது என்பது தொடர்பாக தற்போது விவாதங்கள் உள்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. அது மட்டுமின்றி, தற்போதைய அரசாங்கத்தின் ‘உண்மையான குறிக்கோள்’ என்ன என்பது தொடர்பாகவும் (அதற்கு உண்மையிலேயே தேசியப் பிரச்சினையை தீர்பதற்கான அரசியல் விருப்பம் (political will) இருக்கின்றதா?), அப்படியான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்போரின் கடும் போக்குவாத எண்ணங்கள் தொடர்பாகவும் கருத்துகள் தொடர்ந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

xcasdcasdcதமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தேசிய பிரச்சினையானது இரு சமாந்தர தளங்களில் பயணப்பட்டுள்ளது. அவையாவன, அதிகாரப் பகிர்வு மற்றும் உரிமைகளைக் கோருதல் என்பனவாகும். அதுவும் வெறும் மனித உரிமை மீறல்களைத் தாண்டி சர்வதேச குற்றங்களும், சர்வதேசத்தின் கண்முன்னேயே/ஈடுபாட்டுடன் பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வந்துள்ளன. இப்படியான ஒரு பயணத்தில் தற்போது வந்தடைந்திருக்கும் புள்ளி மிகவும் முக்கியமானது.

முள்ளிவாய்க்கால் பேரழிவு தொடர்பாக ‘யுத்தக் குற்றங்களை’ விசாரித்தல் (பொறுப்புகூறல்) மற்றும் புதிய அரசியல் யாப்பு அல்லது திருத்தம் ஒன்றினால் வழங்கப்படும் அதிகாரப்பகிர்வு மூலம் தேசிய பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணுதல் என்ற இரு விடயங்களில் தற்போதைய அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை தங்களின் புவிசார் அரசியல் தேவைகளுக்காக சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் தங்களின் குறிக்கோள்களை அடைவதற்கு ஏற்படும் முட்டுக்கட்டைகளை எதிர்நோக்கி எவ்வாறு வெற்றிகரமாக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் தங்களின் பணிகளை செய்வார்கள், அவர்களின் வகிபாகம் என்ன என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது.

தற்சமயம் உள்நாட்டு கட்சி பேதங்களால் அரசியல் யாப்பு/திருத்தம் விடயமே தடுமாறிகொண்டிருக்கின்றது, புதிய அரசாங்கமோ மறுபுறத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது ஆட்சிக்காலத்தில் உருவாக்கபட்ட ஏற்கனவே நடைமுறையில் இருந்த காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவை வைத்துக் காலங்கடத்த முயற்சித்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்பட இருக்கும் விசாரணை நடைமுறை தொடர்பாக தகவல்கள் இதுவரை இல்லை, அதற்கான செயற்பாடுகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை. சர்வதேச ரீதியில் ஒத்துகொண்ட ஒரு விடயத்திலிருந்து உள்நாட்டு முரண்பாடுகளை காரணம் காட்டி தப்பிக்க முடியாது என்று இந்த அரசாங்கத்திற்கு தெரிந்தே இருக்கும். ஆகவே, அதற்கான நடவடிக்கைகளை அது சீக்கிரம் ஆரம்பித்தேயாக வேண்டும். இந்த நேரத்தில் செயற்பாட்டாளர்களின் பங்கு என்ன?

இதிலேயே நாம் குறிக்கோள்மயவாதம் (Idealism) மற்றும் யதார்த்தவாதம் என்ற இரு கோட்பாடுகளையும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்ற ஒற்றை நோக்கில் அணுகவேண்டும். செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டளவு குறிக்கோள்மயவாதத்தினை தழுவியவர்கள். உதாரணமாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இழைக்கப்பட்ட உரிமை மீறல்களுக்கு காரணமான எல்லோருக்கும் தண்டனை பெற்று கொடுப்பதில் குறியாக இருப்பார்கள். இது பல சமயம் யதார்த்தத்தினை புறந்தள்ளி ஒரு மேலான குறிக்கோளினை தழுவியதன் போக்கிலானது. ஆனால், யதார்த்தம் வேறுமாதிரியாக முகத்தில் அறையும்.

இலங்கையின் தேசிய பிரச்சினை தொடர்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை அவதானித்தால் இது புரியும். தனி நாட்டுக் கோரிக்கை, இனப்படுகொலையை நிரூபித்தல் மற்றும் சர்வதேச விசாரணை என்பதனை உயர்ந்த குறிக்கோளாக சூடிக்கொண்டுள்ள செயற்பாட்டாளர்களால் இன்றைய இந்த தேக்க நிலை ஏற்றுகொள்ளப்படமுடியாதுள்ளது கண்கூடு. ஆனால், இதுவே யதார்த்தம். இந்த யதார்த்தத்தினை ஏற்று கொள்ள முடியாத சிலர் யதார்த்தத்தின் போக்கில் தேசிய பிரச்சினையை அணுகுவோரை துரோகி பட்டம் சூட்டி தம் ஆதங்கத்தை தீர்த்துக் கொள்கின்றனர்.

cSXcsaxc குறிக்கோள்மயவாதம் என்பது உண்மையில் செயற்பாட்டாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கே தேவைப்படுகின்றது. உயர்ந்த குறிக்கோள் ஒன்றை நோக்கி பயணித்தல் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு வகையிலான மனதிருப்தியை அளிக்கின்றது. ஆனால், யதார்த்தம் இதற்கான முட்டுக்கட்டையாக இறங்கும்போது கடுமையாக எதிர்க்கப்படுகின்றது. செயற்பாட்டாளர்களுக்கு சிறு வெற்றிகளும் பாரிய உத்வேகத்தைக் கொடுக்கும் அது மட்டுமின்றி இப்படியான வெற்றிகள் தொடந்தும் கிடைத்தால் தான் இன்னும் நம்பிக்கையோடு செயற்படுவர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் செயற்பாட்டாளர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் போது பெரும் பங்களிப்பினை அளிக்கக் கூடியதாயிருந்தது. இதற்கு பெரும் காரணம் அப்போது இருந்த சூழ்நிலை, சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவைப் பெற்றிருந்த மஹிந்த அரசாங்கத்தினை தம் வழியில் கொண்டுவர மேற்கு நாடுகள் பிரயோகித்த அஸ்திரமே மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள். இங்கு யாருமே தமிழர் நலனை கருத்தில் கொண்டு செயற்படவில்லை.

இன்று, மேற்கு நாடுகளின் நண்பனாக இலங்கை இருக்கிறது. சூழ்நிலை மாறிவிட்டது, தமிழ்ச் செயற்பாட்டாளர்களின் தேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது அவர்களை ஒரு தேக்க நிலையில் தள்ளியுள்ளது. உள்நாட்டிலும் மக்கள் சற்றே கெடுபிடிகள் குறைவான ஒரு வாழ்க்கை முறையிற்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். இதுவே இன்றைய யதார்த்தம். இது, இதுவரை பெற்ற வெற்றிகளை அழித்து கொண்டு போகிறதோ/பின்னடைவுகளை ஏற்படுத்துகிறதோ என்ற எண்ணத்தை செயற்பாட்டாளர்களிடம் விதைத்துவிடுகின்றது.

உதாரணமாக இன்று யாரும் இனப்படுகொலை என்று பேசுவது இல்லை. அப்படி சொல்வோர் கடும் போக்குவாதியாக பார்க்கப்படுவர். ஆனால் குறிக்கோள்மயவாதம் மீது நம்பிக்கை கொண்ட ஒருவருக்கு இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று நிறுவுதல் ஒரு கட்டாயமாக இருக்கும், யதார்த்தம் அதனை ‘தற்சமயம்’ அனுமதியாது. யதார்த்தம் என்பது தற்சமயம் அரசியல் கைதிகளின் விடுதலை, அரச படைகளின் கைகளின் இருக்கும் காணிகளை விடுவித்தல், போன்ற மனித உரிமை பிரச்சினைகளில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறது. அதிலும், பெரும் வெற்றிகளை பெறவில்லை. யதார்த்தத்தினை ஒரு முகப்பாக வைத்திருப்பதன் ஆபத்தும் இதுவே.

யதார்த்தம் முட்டுக்கட்டையாக வருமிடத்து, யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்பது மக்களை மட்டுமல்ல செயற்பாட்டாளர்களையும் தங்கள் குறிக்கோள்களிலிருந்து வழுவ செய்துவிடுமோ என்ற அச்சமே இன்று மேலெழுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்களிலும் அதிகமாக காணப்படுவது இந்த அச்சமே.

யதார்த்தம் குறிக்கோள்களுக்கு முட்டுக்கட்டை இடுமிடத்து அதனை உள்ளீர்த்து தங்கள் செயற்பாடுகளை திட்டமிட செயட்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் தயாராக இல்லை. இது முற்றிலும் குறிக்கோள்மயவாதத்தினை தழுவியதால் யதார்த்தத்தினை பரிசீலிக்க மறுக்கின்ற நிலைமை. உதாரணமாக, சர்வதேச குற்றவியல் விசாரணையைக் கோருவோரினால் அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன, அது எவ்வாறு யாரின் ஆதரவினால் பெறப்படும் எனக் கூற முடியாது. ஏனென்றால், ஐக்கிய நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாடும் தன் தனிப்பட்ட அரசியல் நலன்களை கொண்டே எந்த முடிவையும் எடுக்கும். இதனாலேயே சர்வதேச விசாரணை என்பது ‘தற்சமயம்’ யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விடயமாகிறது. தனி நாட்டுக் கோரிக்கையும் இவ்வாறானதொரு நிலைமையையே அடைந்துள்ளது.

இவை தற்போதைய சூழ்நிலைகளே, குறிக்கோள்மயவாதம் போலன்றி யதார்த்தம் தொடர்ந்தும் மாற்றமடைகின்ற விடயம். இதனையே குறிக்கோள்மயவாதிகள் கவனத்தில் எடுக்க வேண்டும். யதார்த்தத்தினை ஏற்றுகொள்வதை விடுத்து அதனை உள்ளீர்ப்பதன் மூலம் அடிப்படைக் குறிக்கோளை நோக்கி நகர முடியும் என்று உணர்ந்தால் குறிக்கோள்மயவாதமும் யதார்த்தவாதமும் இணைந்து செயற்படக் கூடிய ஒரு புள்ளியினை ஏற்படுத்த முடியும். இதுவே செயற்பாட்டாளர்களுக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் தம் காரியங்களை முன்னெடுக்க உத்வேகத்தையும் கொடுக்கும்.

உதாரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இதனையே பொறுப்புக்கூறல் தொடர்பான தனது செயற்பாடுகளில் காட்டியுள்ளது, அதாவது மேற்கு நாடுகளும் தம்முடைய புவிசார் அரசியல் நலன்களை முதன்மையாக கொண்டே தமது நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றன என்பதனை சரியாக புரிந்துக் கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தன்னுடைய மறைமுக ஆதரவை அளித்தது. இது யதார்த்தத்தை உள்ளீர்த்து எடுக்கப்பட்ட முடிவே ஆகும். இதன் மூலம் அந்த தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தலில் தம்மையும் ஒரு பங்காளியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைத்துள்ளது. அத்தீர்மானத்தை எதிர்த்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரின் பங்கும் இல்லாமலேயே தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தல் இருந்திருக்கும். இதுவே யதார்த்தத்தை உள்ளீர்த்து செயற்படுதல் ஆகும்.

தேசிய பிரச்சினையின் (அதாவது வட-கிழக்கு வாழ் தமிழ் மக்கfgfsdgfsdgளின் அரசியல் மற்றும் உரிமை பிரச்சினைகளின்) தீர்வே குறிக்கோள்மயவாதத்தினை தழுவியோரின் குறிகோளாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் இந்த யதார்த்தத்தினை உள்ளீர்த்து பயணிப்பதால் அந்த குறிகோளினை அடைய முடியும். இதனை உணராது வெறும் குறிக்கோள்மயவாதத்தினால் உந்தப்பட்டு செயற்படுதல் உயர்ந்த இலட்சியமாக கொண்டிருக்கும் குறிக்கோளினை தகர்க்கும் செயலாகவே முடிகிறது. இதில் எந்த செயன்முறை குறிக்கோளினை அடைதல் என்பதை நோக்கி செல்கிறது என்று யோசிக்க வேண்டும்.

இங்கு செயற்பாட்டாளர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கண்காணிப்பு பொறிமுறைகள் (UN Human Rights Monitoring Mechanisms), சிறப்பு நடைமுறைகள் (UN Special Procedures), மனித உரிமைகள் பேரவையை என்பதனை ஏன் தொடர்ந்தும் முக்கியத்துவத்துடன் அணுகவேண்டும் என்றால், அங்கு அவர்கள் செய்யும் விவாதங்களே இலங்கை அரசாங்கத்தின் மீதான தொடர்ந்தும் அழுத்தங்களை வைத்திருக்க உதவும். ஒரு வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முதற்கொண்டு இலங்கை தொடர்பாக விவாதிக்கப்படுதலே குறிப்பிட்டளவு வெற்றி என்பதனையும் மனதில் நிறுத்தி இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமாக சர்வதேசம் தொடர்ந்தும் இலங்கை மீது ஒரு கண் வைத்துக் கொண்டிருப்பதனால், இலங்கை அரசாங்கமும் அவதானிப்புடனேயே செயற்படவேண்டியுள்ளது, தன்னுடைய நற்பெயரை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினை போலன்றி தற்போது இருக்கும் மேற்கு நாடுகளிடம் நட்பாக இருக்கும் புதிய மைத்திரி- ரணில் அரசாங்கத்திற்கு இந்த தேவை மிக அதிகம். இந்த யதார்த்தம் கூட செயற்பாட்டாளர்களிற்கு உத்வேகம் அளிக்கவல்லது தான். இதனை, மதியாது தொடர்ந்து யதார்த்தம் நீங்கிய குறிக்கோள்மயவாதம் மூலம் இதை அணுகினால் அதாவது சர்வதேச விசாரணை தான் வேண்டும், தனி நாடு வேண்டும் (தனி நாட்டுக்கான சர்வசன வாக்கெடுப்பு கோரிக்கை) என்ற கோசங்களை எழுப்புதல், தற்போதைய அரசாங்கமும் மஹிந்த ஆட்சியில் இருந்த மாதிரியான ஒரு நேரெதிர் விளைவினை பதிலாக கொடுக்க எத்தனிப்பதில் முடிவடையும். இதனால், அதிகம் பாதிக்கப்படப் போவது தாயகத்தில் ஏற்கனவே அல்லற்படும் மக்களே. இத்தகைய யதார்த்தத்தை புறந்தள்ளிய முடிவுகளை அம்மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவோரினால் ஒரு போதும் எடுக்க முடியாது. அது மக்களை இன்னும் கஷ்டத்தில் தள்ளும் ஒரு செயற்பாடாகும். இதனை செயற்பாட்டாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே இங்கு வெளிபடுத்தப்படும் அவா.

செயற்பாட்டு தளம் மந்தமான நிலையில் இருப்பது மனித உரிமைகள் விடயங்களில் ஆபத்தானது. உரிமைகளைப் பெறுதல் தொடர்பில் தொடர்ந்தும் பேசிக்கொண்டிருத்தல் கட்டாயம், குறிக்கோள்மயவாதத்தின் பாற்பட்டு விடயங்களை அணுகினாலும், அதனுள்ளும் யதார்த்தத்தினை உள்ளீர்த்து மாறிவரும் சூழ்நிலைகளை சரியாக அனுமானித்து செயற்பாட்டு உத்திகளை அதற்கேற்ப தீட்டவேண்டும். இதுவே இன்றைய கட்டயாயமாகிறது. மாறாக குறிக்கோள்மயவாதத்தினை முற்றாக தழுவியதன் பயனாக அறியாமலேனும் நம் எதிரிகள் என்று வரிந்துக்கொண்ட பெளத்த சிங்கள பேரினவாதிகளுக்கு தமிழர் விரோத போக்கினை பரப்புவதற்கு ஆதரவுகொடுப்பதாக இருந்துவிடக்கூடாது. அவ்வறியாமை கடைசியில் தாயகத்தில் உள்ள மக்களையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுதலே அவசியமானது, இதனை யதார்த்தத்தினை உள்ளீர்த்து செயற்படுதல் மூலம் சரி செய்யலாம்.

இந்த இடத்தில், தமிழர் தரப்புக்குள் காணப்படும் அரசியல் நோக்கு, புலமை மற்றும் அணுகுமுறைகள் தொடர்பில் எழுந்திருக்கின்ற முரண்பாடுகளை கவனித்தால் அவற்றின் முட்டுப்பாடுகளை உணர்ந்து கொள்ள முடியும். அதாவது, 2009 இறுதி மோதல்களுக்குப் பின்னராக தாயகத்திலுள்ள மக்களின் ஏமாற்றம் மற்றும் நம்பிக்கையிழப்பு என்பன நம்பிக்கைகளின் பக்கம் நகருதலுக்கான அணுகுமுறைகளின் சார்பில் யதார்த்தப் போக்கு அதிகம் எழுந்ததாக கொள்ளப்பட்டது. குறிப்பாக, தேர்தல் அரசியலை மக்கள் எதிர்கொண்ட விதம் தொடர்பில் குறிக்கோள்மயவாதிகளினால் கடும் அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டது. தேர்தல்களை, தற்காலிக (ஜனநாயக) இடைவெளிகளை கருத்தில் கொண்டு எதிர்கொள்ளாமல் எதிர்காலத்துக்கான தீர்க்கமான நோக்கோடு எதிர்கொள்ளவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக மாறியது. அதாவது, ஆட்சி மாற்றங்களுக்கு வாக்களித்தமை என்பது எந்தவித அரசியல் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டவை அல்ல என்பதே அது.

தாயக மக்கள் தேர்தல் அரசியலை யதார்த்தத்தின் போக்கில் அணுகினார்கள் என்று கூறப்பட்டாலும், அதற்குள், வெளித்தெரியாமல் பெருமளவாக குறிக்கோள்மயவாதத்தின் கூறுகளே இருந்தன. இன்னமும் இருக்கின்றன. அதுதான், திரும்பத் திரும்ப தேர்தல் வாக்களிப்பின் போது ஓரணியில் மக்கள் திரள்வதற்கான காரணமாகவும் இருந்தன. ஆனால், அரசியல் உரையாடல்களின் போது கடும்தொனியிலான கருத்துப் பகிர்வை மக்கள் வெளிப்படுத்துவதிலிருந்து தற்காலிகமாக நகர்ந்திருக்கின்றார்கள் என்பது உண்மை. அதனையே, குறிக்கோள்மயவாதிகள் படுமோசமான யதார்த்தமாக கருதிக் கொள்கின்றார்கள். இதனை இருதளங்களில் இயங்கும் சாதாரண மக்களின் நிலைப்பாடுகளின் போக்கில் உணர்ந்து கொள்ள முடியும்.

அதாவது, தாயகத்திலுள்ள மக்களின் அரசியல் முடிவுகள் தேர்தல் வாக்களிப்பைத் தாண்டி வெளிவருவது குறைவு. காணாமற்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் தொடர்பிலான போராட்டங்கள், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் போராட்டங்கள் மற்றும் காணி மீட்புப் போராட்டங்கள் என்கிற அளவினைத் தாண்டி தமிழ் மக்கள் இப்போது பெருவரியாக ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டக்களங்களில் இணைவதில்லை. அது, ஒப்புநோக்கப்படும் போது, யதார்த்தத்தின் போக்கில் தமிழ் மக்கள் தங்களின் போராட்ட வழிமுறைகளை தொலைத்துவிட்டதான கருது நிலையை உருவாக்கிவிட்டிருக்கின்றது.

ஆனால், புலம்பெயர்ந்துள்ள மக்கள் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் நீதி கோரி வீதிகளில் இறங்கினார்கள். இன்னமும், அதற்கான முனைப்புக்களில் குறிப்பிட்டளவில் பங்களிக்கத் தயாராக இருக்கின்றார்கள். அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் உள்ளிட்ட விடயங்களில் பேரணியாக ஒருங்கிணைகின்றார்கள். அதனை அவர்கள் பெரும் ஓர்மத்தின் போக்கிலும் கொள்கின்றார்கள். அப்படியான ஒருங்கிணைவொன்றை தாயக சூழல் கடந்த காலத்தில் அனுமதிக்கவில்லை. அதன்போக்கில் தம்மை தமக்குள் சுருக்கிக் கொண்டது போல தாயக மக்கள் உணர்ந்து கொண்டிருந்தது உண்மை. அந்த நிலையை, சில யதார்த்த அணுகுமுறைகளின் சார்பில் வெற்றிகொள்ள வேண்டியதன் அவசியமும், அழுத்தமும்கூட அவர்கள் மீது இறக்கி வைக்கப்பட்டது. அதன்போக்கிலேயே, குறிக்கோள்மயவாதிகளின் வேண்டுகோள்களை மீறி தேர்தல்களில் ஒருங்கிணைந்து ஆட்சி மாற்றக் கோரிக்கைகளுக்கு வாக்களித்தனர். அதனை, தமது குறிக்கோள்களை நோக்கிய நகர்வுகளை மெல்ல சீர் செய்வதற்கான போக்கானது என்றும் கொள்ளலாம். அவை, மீளவும் போராட்ட அணுகுமுறைகளையும், ஒருங்கிணைவையும் நோக்கி நகர்வதன் போக்கிலான எண்ணப்பாடுமாகும்.

இதனை இன்னொரு வடிவிலும் சொல்லாம். உயிர் வலியிருக்கும் மக்கள் தம்மை தக்க வைத்துக் கொள்வதினூடே தமது உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பது மாதிரியானது. அவ்வாறான நிலையில், உயிரினைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முனைப்புக்கள் பிரதானமானவை. அதுவே, மீண்டும் எழுந்து உரிமைகளுக்கான கோரிக்கையின் பக்கம் நகர வைக்கும். ஆக, யதார்த்தம் என்பது குறிக்கோள்மயவாதிகளின் எண்ணப்பாடுகளை முழுமையாக நீக்கம் செய்வது அல்ல. குறிப்பாக, தாயகத்திலுள்ள மக்கள் அப்படியான நிலைப்பாட்டின் போக்கில் இல்லை. மாறாக, உரிமைகளைக் கோருவதற்காக உயிர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தருணங்களை கையாண்டிருக்கின்றார்கள். அதுவே, யதார்த்தம். அந்த யதார்த்தம் குறிக்கோள்களைப் புறந்தள்ளியவை அல்ல. அவை, குறிக்கோள்களை தக்கவைப்பதற்கானவை.

இந்த இடத்தில் இன்னொரு விடயம் துருத்திக் கொண்டு நிற்கிறது. அதாவது, யதார்த்தம் என்கிற முன்வைப்போடு எம்முடைய அரசியல் இருப்பு நிலையை ஒட்டுமொத்தமாக விட்டுக்கொடுக்கும் மனநிலையொன்று சிறு தரப்பினரிடம் மேலெழுந்து வருகின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை. அந்தத் தரப்பு அரசியல் உரையாடல்களின் போது வெளிப்படுத்தும் கருத்துக்களும், வியாக்கியானங்களும் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆள்மன அரசியல் வெளிப்பாட்டின் அல்லது குறிக்கோளின் பக்கத்திலிருந்து வருபவை அல்ல. அதனை, கருத்தில் கொள்ள வேண்டியது குறிக்கோள்மயவாதிகள், செயற்பாட்டாளர்கள், அரசியல் நோக்கர்கள் உள்ளிட்டவர்களின் கடமையாகும். அதாவது, குறிக்கோள் எனும் நிலைப்பாட்டிலிருந்து அரசியல் நகர்வுகள்- சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் முற்றுமுழுதாக மக்களின் எண்ணங்களைப் புறக்கணிக்கும் சிறு தரப்பினர் போன்றதொரு இன்னொரு தரப்பே அது. ஆக, தமிழ் மக்களின் அரசியல் ‘குறிக்கோள்களை’ புறந்தள்ளிய யதார்த்த அரசியலுக்குள் செல்லவில்லை. மாறாக, குறிக்கோள்களை பிரதானமாகக் கொண்டு யதார்த்த களத்தினை எதிர்கொண்டு செல்கின்றது!

puro  asdassdasd


Related News

 • களைகட்டும் தேர்தல் திருவிழா
 • தேர்தல் உள்ளே வெளியே …..
 • நீதனின் வெற்றி (கேள்வி குறியில் ) யார் கையில் ?
 • ஓக்ரோபர் 22ல் வாக்களியுங்கள், உங்களுக்கு பணியாற்றக்கூடிய தலைமைக்கு : ஜோன் ரோறி
 • கனடா இனி கஞ்சா தேசமா? அனுமானமா?
 • கனடாவில் திரையிடப்படும் உரு
 • நம்பிக்கைத் தமிழர்களும் தமிழர்களின் நம்பிக்கையும்
 • தேர்தலில் நிற்பவர் யாரோட ஆள்?!
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *