சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம் செங்கோட்டையில் மோடி இன்று தேசிய கொடி ஏற்றுகிறார் டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு

red-fort-delhiஇந்திய சுதந்திர தினவிழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடியின் உயிருக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாலும், சமீப காலமாக காஷ்மீர் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி அடிக்கடி நடைபெற்று வருவதாலும் மத்திய உளவுத்துறையினர் பிரதமர் மோடிக்கு மிக அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கும்படி கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இதனால் பிரதமர் சுதந்திர தின உரையாற்றும் செங்கோட்டை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பை தீவிரப்படுத்தும்படி டெல்லி போலீசார் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதன் காரணமாக, பாரம்பரியம் மிக்க டெல்லி செங்கோட்டை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.

விழா நடைபெறும் பகுதியில் யாரும் எளிதில் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஏற்கனவே, கடந்த ஒரு வாரமாக ‘பாரத் பார்வ்’ கலாசார நிகழ்ச்சி டெல்லி ராஜபாதையில் நடைபெற்று வருவதால் பல்வேறு அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

டெல்லி செங்கோட்டையில் தேசிய பாதுகாப்பு படையின் மறைந்திருந்து துப்பாக்கி சூடு நடத்தும் அதிரடிப்படை வீரர்கள், கமாண்டோ படையினர் கொண்ட ஒரு சிறப்பு குழு மைதானத்தின் உட்புற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

வான்வழியில் இருந்து தரைப்பகுதி வரை பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கழுகுக் கண் பார்வையுடன் தலைநகர் டெல்லி கண்காணிக்கப்படுகிறது. ஆள் இல்லாத குட்டி விமானங்கள் பறப்பது மற்றும் வான் வழியாக எறி பொருட்கள் வீசப்படுவது ஆகியவற்றை தடுக்கும் விதமாக விமான எதிர்ப்பு பீரங்கிகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளன.

வான்வழி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு வசதியாக பாரா கிளைடிங், ஆள் இல்லாத பறக்கும் சிறிய வாகனங்கள், வெப்பக்காற்று பலூன்கள் ஆகியவற்றை டெல்லியில் பறக்க விடுவதற்கு ஏற்கனவே டெல்லி போலீசார், அக்டோபர் மாதம் 10–ந் தேதி வரை தடை விதித்து இருக்கின்றனர்.

இது தவிர டெல்லி செங்கோட்டையின் அருகாமையில் உள்ள பகுதிகளை டெல்லி போலீசார் மேற்பார்வையிட்டு வருவதுடன், அப்பகுதியில் வசிக்கும் 9 ஆயிரம் மக்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளனர். செங்கோட்டையை நோக்கியுள்ள கட்டிடங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். அங்குள்ள 605 பால்கனிகள் மற்றும் 104 கதவுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் மரங்களையும் கண்காணிப்பு பகுதியாக முகமையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

சுதந்திர தினவிழாவில் மோடி பங்கேற்றுவிட்டு செல்லும் வரை செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் நுழைவதும், அங்கிருந்து வெளியேறுவதும் நிறுத்தி வைக்கப்படுகிறது.

சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நெருக்கமாக கண்காணிக்கும் வகையில் சிறப்பு தகவல் மற்றும் கட்டளை மையம் ஒன்றை செங்கோட்டை அருகே ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

சுதந்திர தினவிழாவின்போது பிரதமர் மோடி அங்கு வரும் மக்களிடம் நேரடியாக சென்று கலந்துரையாடுவது வழக்கம். இதற்கு முன்பு 2 முறை அவர் இப்படி பொதுமக்களை சந்தித்து இருப்பதால், கள நிலவரத்துக்கு ஏற்ப சிறப்பு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் தனது 7 ரேஸ்கோர்ஸ் சாலை இல்லத்தில் தொடங்கி செங்கோட்டை வரும் பாதை வரை, பொருத்தப்பட்டுள்ள 200–க்கும் அதிகமான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 2 மின்கோபுர விளக்குகள் மூலம் 3 கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

செங்கோட்டை பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் டெல்லி போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் துணை ராணுவத்தைச் சேர்ந்த 60 மோப்ப நாய்களும் கூடுதல் பாதுகாப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.

சுதந்திர தினவிழாவையொட்டி செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான நடவடிக்கைகளை மூத்த போலீஸ் அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் கடந்த மாதம் 10–ந் தேதியே தொடங்கி விட்டனர். அப்பகுதியில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதுபற்றிய தகவல்களை அவ்வப்போது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் வருகின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும், இன்று வரை, சூரிய அஸ்தமனத்துக்கு பின்பு ஜொலிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை மந்திரி டெல்லியில் நேற்று பாதுகாப்பு அமைப்புகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள், பயங்கரவாதிகளின் எல்லைப் பகுதி ஊடுருவல் மற்றும் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்போரின் நடவடிக்கைகள் முறியடிப்பு குறித்து அதிகாரிகள் விரிவாக விளக்கினர்.

குறிப்பாக காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி கொல்லப்பட்ட பின்பு அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இதேபோல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைப்புகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


Related News

 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
 • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
 • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
 • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *