தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் – பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை

bus_strike_16கோரிக்கைகள் தொடர்பாக தொழிற்சங்கத்தினருக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் இருந்தே போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொடங்கின.

நேற்று நடந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. இதனால் தகுந்த நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டி இடத்திற்கு செல்ல பஸ்கள் கிடைக்காததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அழைத்து பேசினார். போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர் அப்போது கேட்டறிந்தார்.

இந்த கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் காம்பிளே ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–

போக்குவரத்து தொழிலாளர்களின் 13–வது புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 10 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆனால் அந்த வேலை நிறுத்தம் தோல்வியில் முடிந்திருக்கிறது.

75 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. ரெயில் சேவையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களை கூடுதலாகவும், சிறப்பு ரெயில்களையும் நாங்கள் கேட்டுக்கொள்ளும் வரை இயக்க தெற்கு ரெயில்வே ஒப்புக்கொண்டிருக்கிறது.

தனியார் பஸ்களையும் மிகச் சிறப்பாக இயக்கி வருகிறோம். பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாமல் பஸ் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இன்று (நேற்று) பணிக்கு வராத ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் நாளை (இன்று) பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் ஓட்டுனர் உரிமம், நடத்துனர் உரிமம் வைத்திருக்கக்கூடிய நபர்களைத் தற்காலிகமாக தேர்வு செய்து அவர்களை வைத்து தினக்கூலி அடிப்படையில் 100 சதவீத பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை படிப்படியாக வழங்குவதற்கு முதல்–அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, போராடும் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்பவேண்டும்.

நாளை (இன்று) சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரம் தனியார் பஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

முத்தரப்பு பேச்சுவார்த்தையை இன்று (நேற்று) நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால் மேலாண்மை இயக்குனர் உள்பட அதிகாரிகள் அனைவரும் பஸ்களை இயக்கும் பணியில் உள்ளனர். நாளை (இன்று) பேச்சுவார்த்தையில் அரசு கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

பயிற்சி அளிக்கும் அரசின் ஓட்டுனர்களை வைத்து, தற்காலிக ஓட்டுனர்களாக தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்களின் திறமையை பரிசோதித்த பிறகுதான் பஸ்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வங்கி கணக்கில் அவர்களுக்கான தொகை நாளையில் இருந்து வரவு வைக்கப்படும். 500 கோடி ரூபாய்க்கு முதல்–அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதை அதைக் கொடுத்துவிட்டு, மீதி இருக்கும் தொகையை எப்படியெல்லாம் கொடுக்கலாம் என்று கலந்து பேசி முடிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறோம். மக்களுக்கு போக்குவரத்து சேவையை தடையில்லாமல் வழங்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காலை சென்னை தியாகராயநகர் பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

வேலைநிறுத்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு, எல்.பி.எப் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால் அண்ணா தொழிற்சங்கங்கள் உள்பட 37 தொழிற்சங்கங்கள் அரசுக்கு ஆதரவு தெரிவித்து பேருந்துகளை இயக்கி வருகின்றன.

போக்குவரத்து தொழிலாளர்களின் பணத்தை நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் பேச்சுவார்த்தையை மதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Related News

 • சபரிமலை விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் பாரதீய ஜனதா வெளிநடப்பு
 • கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு
 • அரசு முறை பயணமாக வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
 • தமிழகத்தை நெருங்கும் கஜா புயல் இன்று இரவு முதல் மழை பெய்யும்
 • அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம் – சபரிமலை தந்திரி
 • நாடு மக்களால் நடத்தப்படுகிறது; ஒரு மனிதரால் அல்ல என்பது கூட பிரதமர் மோடிக்கு தெரியாது – ராகுல் காந்தி
 • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
 • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *