6 மாதத்தில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும் – மு.க.ஸ்டாலின்

ekuruvi-aiya8-X3

stalin_18திராவிட இயக்க தமிழர் பேரவையின் சமூக நீதி பாதுகாப்பு மாநாட்டின் நிறைவு விழா பொதுக்கூட்டம் சைதாப்பேட்டையில் நேற்று இரவு நடந்தது. மாநாட்டு பொதுக்கூட்டத்திற்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மத்தியமந்திரி ஆ.ராசா, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களுக்கு, சமூக நீதியின் அடிப்படையில் உரிமைகளை கருணாநிதி பெற்று கொடுத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக கருணாநிதி உயர்த்தினார். உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, வன்னியர் உள்ளிட்ட சமுதாயத்திற்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது என சமூக நீதியை காத்தவர் கருணாநிதி.

அவரால் தான் இன்றைக்கு நாம் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அந்த உரிமையை பெற்று வருகிறோம். கருணாநிதி ஒரு திட்டத்தை செயல் படுத்துகிறார் என்றால் முதலில் அது தமிழகத்திற்கு பலன் அளிக்கும், பிறகு இந்தியாவிற்கே பலன் அளிக்கும்.

நீட் தேர்வு காரணமாக அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டாரே ஏன்?. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானமாக மசோதா நிறைவேற்றியபோது தி.மு.க. ஆதரித்தது. அந்த தீர்மானம் என்ன ஆச்சு?. அதை பற்றியெல்லாம் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் கவுதமன் மற்றும் மருத்துவ மாணவர்கள் நீட் தேர்வு குறித்து என்னிடம் கலந்து ஆலோசித்தார்கள். அவர்களிடம் நாங்கள் என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம், தொடர்ந்து குரல் கொடுக்கிறோம் என்று தெரிவித்தேன்.

ஆளுங்கட்சியில் 50 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். எங்கள் எம்.பி.க்களும் சேர்கிறோம், பிரதமரையோ, ஜனாதிபதியே சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு கோர எங்களுடன் இணைந்து போராட அவர்கள் தயாராக இருக்கிறார்களா?. நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு ஆட்சியில் இருந்தே கொள்ளையடிக்க வேண்டும்.

மோடி எங்களை அழைத்து சமாதானம் செய்தார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று மோடி என்னிடம் வலியுறுத்தினார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார் என்றால் இது கட்டபஞ்சாயத்து தானே. இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள். நான் சொன்னது உண்மையாகி விட்டது அல்லவா?. இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் வந்து விட்டது.

விரைவில் மக்கள் எதிர்பார்த்த தேர்தல் வர போகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வர போகிறது. இந்த தீர்ப்பு வந்த பிறகு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவு வரும். மெஜாரிட்டியை நிரூபிக்கவில்லை என்றால், ஆட்சி கவிழும். 6 மாதத்தில் தி.மு.க. ஆட்சி வரும்.

6 மாதத்தில் வரும் தேர்தலில் மக்களை சந்தித்து, வெற்றி பெற்று ஆட்சியில் அமருவோம். அப்படி அமையும்போது, சமூக நீதி மாநாட்டையை வெற்றிகரமாக நடத்துவோம் என்று அவர் பேசினார்.

Share This Post

Post Comment