தி.மு.க.வின் பரிந்துரைகளை அலட்சியம் செய்தால் அடுத்தகட்ட நடவடிக்கை – ஸ்டாலின்

Facebook Cover V02

stalin_0312சென்னை கோட்டையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- கட்டண உயர்வுக்கு எதிராக ஏற்கனவே தி.மு.க. போராட்டம் நடத்திய பிறகு ஒரு ரூபாய் குறைப்பதாக அரசு அறிவித்தது, இப்போது அதுபோன்று உறுதி அளித்தார்களா?

பதில்:- ஆய்வறிக்கையை வாங்கிக்கொண்டார்களே தவிர, எந்தவித உறுதிமொழியும் தரவில்லை.

கேள்வி:- ஆய்வறிக்கை கொடுத்த பிறகும் அரசு எதுவும் செய்யவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பதில்:- தற்போது எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன கூட்டங்கள் நடைபெறுகின்றன. நிர்வாகம் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்ற காரணத்தால்தான், எதிர்க்கட்சியான நாங்கள் நிர்வாகத்தை எப்படி சீரமைப்பது என்ற யோசனைகளை வழங்கி இருக்கிறோம்.

அந்த பரிந்துரைகளை நிறைவேற்ற முன்வந்தால் நாங்கள் வரவேற்போம். ஒருவேளை, அலட்சியம் செய்தால், மீண்டும் அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.

கேள்வி:- போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க ஏதாவது ஆலோசனை இந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறதா?

பதில்:- பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டிக்கெட் அச்சடிப்பது, உதிரி பாகங்கள் வாங்குவது ஆகியவற்றில் கமிஷன், லஞ்சம் வாங்குவது போன்றவற்றை கட்டுப்படுத்தினாலே, கடன்சுமை குறையும்.

கேள்வி:- 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகும், தி.மு.க.தான் நஷ்டம் ஏற்படுத்தியது என அ.தி.மு.க. அமைச்சர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

பதில்:- அவர்கள் செய்து வரும் தவறுகளை மூடி மறைப்பதற்காக அபாண்டமான, தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். அதற்கான பதில்களை நாங்கள் தெளிவாக அளித்திருக்கிறோம்.

கேள்வி:- பட்ஜெட் தாக்கல் செய்யும்போது இந்த பிரச்சினை எழுப்பப்படுமா?

பதில்:- நிச்சயமாக கேள்வி எழுப்புவோம். அதுமட்டுமல்ல, தற்போது மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறந்திருப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்புவோம்.

இதுபற்றி பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘மறைந்த முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் படம், பாராளுமன்றத்தில் திறக்கப்படவில்லையா?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதுவொரு அபத்தமான கேள்வி.

இந்த படத்திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக கவர்னர் ஆகியோரை இவர்கள் அழைத்தும், அனைவரும் ஏன் மறுத்தார்கள் என்பதை அமைச்சர் ஜெயக்குமார் சொல்ல வேண்டும். காரணம், ஊழல் செய்து அதற்காக நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற குற்றவாளியான ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால், இப்போது பெங்களூரு சிறையில் முதல் குற்றவாளியாக சசிகலாவோடு இருந்திருப்பார்.

நான் அவரை கொச்சைப்படுத்தி பேசுவதாக யாரும் கருதக்கூடாது. அப்படிப்பட்டவரின் படத்தை சட்டமன்றத்தில் வைப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்களுடைய கட்சி அலுவலகத்தில், சொந்த இடங்களில் வைத்துக்கொள்ளட்டும். அதுபற்றி யாரும் கவலைப்படவில்லை.

ஆனால், மக்களின் வரிப்பணத்தில் செயல்படும், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய சட்டமன்றத்தில் அவரது படத்தை வைக்கிறார்கள் என்றால், அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அரசு அலுவலகங்களில் அவரது படங்கள் இருப்பது தவறு என்று எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூலமாக ஏற்கனவே நீதிமன்றத்தை நாடி, அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. தீர்ப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Share This Post

Post Comment