சிறிலங்கா கொடுத்த வாக்குறுதிகள் கடந்த ஓர் ஆண்டு காலமாக கிட்டத்தட்ட முடங்கிப் போயுள்ளது – அலி குசேன் ஆதங்கம்! நக்கீரன்

ekuruvi-aiya8-X3

dsdwsd ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் (ஐநாமஉ) பேரவையின் 37 ஆவது  அமர்வு பெப்ரவரி 26 தொடக்கம் மார்ச் 23, 2018 வரை ஜெனிவாவில் நடைபெற இருக்கிறது. ஐநாமஉ பேரவை ஆண்டில் 3 அமர்வுகளை நடத்துகிறது. அவையில் உறுப்புரிமை வகிக்கும் நாடுகளில் 2/3 பெரும்பான்மை நாடுகள் கேட்டுக் கொண்டால் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவசர விடயங்கள் பற்றி விவாதிக்கச்  சிறப்புக் கூட்டத் தொடர்களை ஐநாமஉ பேரவை கூட்டலாம்.  பேரவையின் 38 ஆவது அமர்வு எதிர்வரும் யூன் 18 –  6 யூலை இல் நடைபெற இருக்கிறது.

மனித உரிமைப் பேரவை ஐக்கிய நாடுகள் முறைமையின் கீழ் செயற்படுகிறது. நாற்பத்து நான்கு நாடுகள் உறுப்புரிமை வகிக்கும் இந்தப் பேரவை உலகளாவிய மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பொறுப்பாக இருக்கிறது.  இந்தப் பேரவை 1950 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. sdswdwsd

ஐநாமஉ பேரவையின் 37 ஆவது அமர்வில் குடிபெயராளர் மனித உரிமை பாதுகாப்பு, சித்திரவதை மற்று மனித உரிமை பாதுகாப்பாளர்கள் தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்படும். அதே நேரம் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெறும் புருண்டி, சிரியா, தென் சூடான், சிறிலங்கா, மைனமார், எரித்தியா,  கொரியா மக்கள் குடியரசு, ஹொன்டுறாஸ், சீனா, பாலஸ்தீனம், மாலி  மற்றும் கவுத்தமாலா போன்ற நாடுகள் பற்றியும்  விவாதிக்கப்படும்.

சிறிலங்காவில் மீளிணக்கத்தை மேம்படுத்துதல்,  பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் பற்றி மனித உரிமை உயர் ஆணையாளர் அலுவலகம் எழுத்து மூலம்  தாக்கல் செய்யும் 14 நாடுகள் பற்றிய  உவகளாவிய கால மீளாய்வு  அறிக்கைகள் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளளப்படும். இந்த  14 நாடுகளில் சிறிலங்காவும் ஒன்றாகும்.

இந்த 37 ஆவது அமர்வில் சிறிலங்காவின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக மனித உரிமை பேரவை தொடர்ந்து முக்கிய பங்காற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அல் குசேன் கேட்டிருக்கிறார். அதுமட்டும் அல்லாது எல்லா உறுப்புரிமை  நாடுகளும்  பொறுப்புக் கூறலை,  உலகளாவிய  நியாயாதிக்கம்   உட்பட  வேறு வழிகளில்  வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 

ekuruvi-nifgt_gif-1ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் ‘சிறீலங்காவில் மீளிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள்’  அறிக்கையில் சனவரி 2015 தொடக்கம் சிறிலங்கா  மனித உரிமை ஆணையாளரது  அலுவலகத்தோடு மேற்கொண்ட ஆக்கபூர்வமான தொடர்பாடல் பற்றித்  தனது   பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார். ‘அதே சமயம் மார்ச் 2017 இல் கூறியவாறு ஆக்கபூர்வமான கூட்டுச் செயற்பாடு ஒத்துக் கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதாக இருக்க வேண்டும். தீர்மானம் 30/1 தீர்மானத்தில் கூறப்பட்ட பொறுப்புக் கூறல், அரசியலமைப்பு சீர்திருத்தம், இடைக்கால நீதி போன்றவை தொடர்பாக சிறிலங்கா கொடுத்த வாக்குறுதிகள் கடந்த ஓர் ஆண்டு காலமாக கிட்டத்தட்ட முடங்கிப் போயுள்ளது. நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள்  போதுமானதாக இருக்கவில்லை,  முடிவுற்றதாகவும் காணப்படவில்லை,   இவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை, அவற்றை முன்னோக்கி நகர்த்துவதற்கு  அரசியல் மட்டத்தில்  போதுமான  ஆதரவு இருக்கவில்லை’  குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணையாளர் தனது  மார்ச் 2017   அறிக்கையில் குறிப்பிட்டவாறு இந்த அறிக்கை மீளிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக  நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1,  மார்ச் 2017 தொடக்கம் சனவரி 2018 வரையான காலப் பகுதியில்  எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது என்பது பற்றியது ஆகும்.  குறிப்பாக நிலைமாற்று நீதி தொடர்பான நடவடிக்கைகள் அரசு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது பற்றியது ஆகும்.

இப்போது ஐக்கிய நாடுகள் மனிவுரிமை ஆணையளாரால்  சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மனித உரிமை தொடர்பாக சிறிலங்காவில் நிலவும், குறிப்பாக பொறுப்புக் கூறல் பற்றி நிலவும்   நிலைமை பற்றி ஆராய்கிறது.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆணையாளர் விடுத்துள்ள அறிவுப்புகளில், அறிக்கைகளில்  பொதுவாக  பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி முன்னேற்றம் காணப்படவில்லை என ஆணையாளர் கவலை தெரிவித்தாலும் பொதுவான மனித உரிமைகள் தொடர்பாகக் காணப்படும் உறுதியான  முன்னேற்றம்  எமக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.  இருந்தும் 2017 இல் இனங்களுக்கு இடையில் அவ்வப்போது  இறுக்கம்  மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இவை முற்றாக மறைந்துவிடும் வாய்ப்பு இல்லை எனலாம்.

அரசாங்கம் இவ்வாறான கவலை தரும் நிகழ்வுகளைத்  தடுக்க நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இப்படியான சம்பவகங்கள் நாட்டில் அண்ணளவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுவது ஆழ்ந்த கவலையைத் தருகிறது. குறிப்பாக வெறுப்பான பேச்சுக்கள், தவறான தரவுகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக  மேற்கொள்ளப்படும் தத்தளிப்பு  மற்றும் அரசியல் சூழ்ச்சி  ஆழ்ந்த கவலை தருகிறது.

மேலும்  சித்திரவதை, கண்காணிப்பு, நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை, எடுத்துக்காட்டாக காணிகள் மீள்கையளிப்பு செய்யப்படாமை, பயங்கரவாத தடைச் சட்டம்  நீக்கப்படாமை, அந்தச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் முக்கியமான தரப்புக்களை எதிரிகள் ஆக்கிவிட்டுள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளுக்கு இந்தத் தரப்புக்கள் உதவியிருக்கக் கூடும்.

சிறிலங்கா அரசுக்கு தீர்மானம் 34/1 இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கியிருப்பதால் அடுத்த மார்ச் 2019 இல்தான்  விரிவான அறிக்கை மனித உரிமை ஆணையாளரால் தாக்கல் செய்யப்படும். அடுத்த ஒரு ஆண்டில் சிறிலங்கா தீர்மானம் 30/1  யை முழுதாக இல்லாவிட்டாலும் பாதியை ஆவது நடைமுறைப்படுத்தும் என நம்புவதற்கில்லை. சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் அரசாங்க இயந்திரத்தை அதிகமாகப் பாதித்துள்ளது. அங்கு உறுதியற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி / ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 5,098,916 (45.66%) வாக்குகள் பெற்றிருந்தது. நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் அந்தக் கட்சியின் வாக்குகள் 3,612,259 (32.68%) மட்டுமே பெற்றுள்ளது.

அதே போல 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி 4,732,664 (42.38 %) வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி 989,821 (8.94%) வாக்குகளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 491,835 (4.44%) மொத்தம் 1,481,456 (15.21%) மட்டுமே பெற்றன. இதே சமயம் சிறிலங்கா பொதுசன பெரமுன என்ற பெயரில்  தனிக்கட்சி தொடங்கிய மகிந்த இராசபக்சா 4,941,982 (44.65%) வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி ஆட்சியில் இருக்கும் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

2015 இல் ஐநாமஉ பேரவையில்  தீர்மானம் 30/1 ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு சிறிலங்கா அனுசரணை வழங்கினாலும் சனாதிபதி சிறிசேனாவும் அவரது கட்சி அமைச்சர்களும்  அந்தத் தீர்மானத்தை முழுமையாக ஆதரிப்பதாகத் தெரியவில்லை.  குறிப்பாக தீர்மானம் 30/1 இல் குறிப்பிடப்பட்டுள்ள

நிறைவேற்றுப்பந்தி 6 இல் குறிக்கப்பட்ட கடப்பாடுகள் (வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கடப்பாடுகள்), எந்தவகையிலும் தம்மை கட்டுப்படுத்தாது என அரசாங்க அமைச்சர்கள் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக பல தடவைகள் எண்ணத்திலும் செயற்பாட்டிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.  இந்த கடப்பாடுகள் தம்மைக் கட்டுப்படுத்த மாட்டாதவை எனக்  காட்டும் செயற்பாடுகளுக்கு இலங்கை சனாதிபதி சிறிசேனா அவர்களே தலைமை தாங்குகிறார். எந்தவொரு இராணுவ வீரனையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டிக்க விட மாட்டேன் என்று சனாதிபதி சிறிசேனா சூளுரைக்கிறார். அவரின் தலையீட்டால்தான் அமைச்சர் மங்கள சமரவீராவிடம் இருந்து வெளியுறவு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது  என்பது உறுதியாகியுள்ளது.

சனாதிபதி போல் பிரதமர் இரணில் விக்கிரமசிங்காவும் இப்போது இராகத்தை மாற்றிப் பாடுகிறார். “கலப்பு நீதிமன்றம் அரசியல் யாப்பு அடிப்படையில் சாத்தியமில்லை. காரணம் அதற்கு பொதுவாக்கெடுப்புத் தேவைப்படும். இந்தச் சூழ்நிலையில் பன்னாட்டு சமூகத்தின் எதிர்பார்ப்புகளை எப்படி நாம் நிறைவேற்றலாம்? நாம் எல்லோரும் யோசித்து கலப்பு நீதிமன்றத்துக்குப் பதிலாக வேறொரு அமைப்பை உருவாக்க வேண்டும்” என்கிறார். யாப்பில் கலப்பு விசாரணைக்கு இடமில்லை என்றால் யாப்பைத் திருத்த முயற்சிக்கலாமே?

30/1 தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் 36 கடப்பாடுகளில்  தகவல் அறியும் சட்டம், காணாமல் போனோர் தொடர்பான சட்டம் இரண்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய யாப்பு உருவாக்கம் பற்றிய முயற்சி அரைக் கிணற்றைத் தாண்டியுள்ளது.

இப்போது நடைபெறும் ஐநாமஉ பேரவையின் அமர்வில் கலந்து கொள்வதென இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.  தீர்மானம் 30/1 முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறது. இதனை ஐநாமஉ ஆணையர் அலுவலகம்,  அனைத்துலக அமைப்புக்கள், அனைத்துலக நாடுகள், உறுப்புரிமை நாடுகள்  உறுதி  செய்ய வேண்டும் என தமிழ் அரசுக் கட்சி  கேட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டிக் கொண்ட சிறிலங்கா அரசு இப்போது அரசியல் நெருக்கடிக்குள்ளும் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த இலட்சணத்தில் சிறிலங்கா அரசாங்கம் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதை தமிழர்  தரப்பு மட்டுமல்ல உலக நாடுகளும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளன.

சிறிலங்காவின்  தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் வாள் அறுந்து அதன் தலைமேல் விழுமா அல்லது அதிலிருந்து தப்பித்துக் கொள்ளுமா என்பது 2019 இல் தெரிந்து விடும். அதுவரை சிலங்கா அரசாங்கத்துக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தங்களையும் தமிழர் தரப்பு  தொடர்ந்து கொடுக்க வேண்டும். அடிக்கு மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.

மார்ச் 2018 இன் இகுருவி பத்திரிகையில் நக்கீரன் அவர்களால் எழுதப்பட்டது

Share This Post

Post Comment